என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏர்வாடி வணிகர் தெருவில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.

    மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் குடியிருப்புவாசிகள் தவிப்பு அடைந்துள்ளனர்.


    இதுபோல ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்துள்ளது.

    இதனைதொடர்ந்து பல்லாரி மற்றும் பலசரக்கு பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மழை நீர் சாலையை மூழ்கடித்தபடி ஆறு போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து உள்ளனர். போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

    அப்பகுதியில் உள்ள வாறுகால் கடந்த 10 ஆண்டு ளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள், வணிக வளாகங்களை சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
    • நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரம சிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்பட 14 பேர் மீது புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர்.

    மேலும் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் குற்ற எண்.3 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 6 பேர் மீதும், குற்றம் எண்.4-ல் பல்வீர்சிங் உள்பட 4 பேர் மீதும், குற்ற எண்.5 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 4 பேர் மீதும், குற்ற எண்.6 வழக்கில் பல்வீர்சிங் உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன் பேரில் நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் நீதிபதி திரிவேணி முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்பட 14 பேரும் நேரில் ஆஜராகினர். இதனையொட்டி நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை தொடர்ந்து வக்கீல் மகாராஜன் மற்றும் சி.பி.சி.ஐ. போலீசாரும் கோர்ட்டில் ஆஜராகினர்.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்த 4 வழக்குகளில் வி.கே.புரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட குற்ற வழக்கு எண்.4ல் குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் உள்ளிட்ட 4 பேருக்கு குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகளுக்கு மற்ற 3 வழக்குகளில் குற்ற பத்திரிகை நகல் வழங்க, வழக்கு தொடரப்பட்டவர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

    இதனால் மற்ற 3 வழக்குகளில் இன்று குற்றபத்திரிகை வழங்கப்படவில்லை.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது.
    • பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்கள், கோவில் திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.

    தற்போது கார்த்திகை மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடத்த மாட்டார்கள். எனவே அடுத்ததாக தை மாதம் பிறந்த பின்னரே சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான நாளை (வியாழக்கிழமை) ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லிகை பூ நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ. 1,000 உயர்ந்து கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதேபோல் பிச்சிப்பூ கிலோ ரூ.700-க்கும், ரோஜா பூ ரூ.100 முதல் 150 வரையும், கேந்தி பூ ரூ.50-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்கப்பட்டது.

    பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.

    • கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மினி பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
    • கிருஷ்ணன் உடலை பணகுடி போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பணகுடி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சுமார் 35 அய்யப்ப பக்தர்கள் மினிபஸ் மூலமாக சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திருவனந்தபுரம் வழியாக ஊருக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் மினி பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பணகுடி அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த கிளீனரான திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணா (வயது 52) என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    உடனடியாக பஸ்சில் பயணித்தவர்கள், கிருஷ்ணாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து கிருஷ்ணன் உடலை பணகுடி போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 122 அடியை எட்டிய நிலையில் இன்று 3/4 அடி உயர்ந்து 122.70 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 123 அடியை எட்டிவிடும். 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 134.81 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 135.83 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 910 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை பகுதியில் 31 மில்லிமீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட் பகுதியில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    காக்காச்சி பகுதியில் 19 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதி மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் தொடர்மழையால் அடவி நயினார் அணையை தவிர மற்ற அணைகள் நிரம்பி விட்டன.

    இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு வானம் மேக மூட்டமாக காட்சியளிக்கிறது.

    சிற்றாறு கால்வாய் மூலமாக குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்பி வருகிறது.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தில் குற்றாலம் நீர்வரத்து குளங்கள் நிரம்பி விட்ட நிலையில் தற்போது ஆலங்குளம், மாறாந்தை பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சாத்தான்குளம், கயத்தாறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. குலசேக ரன்பட்டினத்தில் 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் ஜான் பால் (வயது 37). இவரது மனைவி கனிஷ்கா.

    ஜான்பால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4-ந்தேதி நெல்லையில் இருந்து இவர், மோட்டார் சைக்கிளில் மணிமுத்தாறுக்கு சென்று கொண்டிருந்தார். முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்ததால் திடீரென ஜான்பால் பிரேக் பிடித்துள்ளார்.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் ஜான் பால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜான்பால் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஜான்பால் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கிருந்து அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை டீன் ரேவதி தலைமையில் மருத்துவமனை டாக்டர்கள் செய்து வருகின்றனர்.

    • வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
    • கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் ஊத்துமலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சுப்பையா. இவரது மகன் தமிழ்வாணன் (வயது 35).

    இவருக்கு மகேஸ்வரி (31) என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. தமிழ்வாணன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்தபோது லாரியில் இருந்து கெமிக்கலை இறக்கி கொண்டிருந்தபோது அவரது உடலில் கெமிக்கல் பட்டு காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரால் மேற்கொண்டு லாரி ஓட்டும் தொழிலை செய்ய முடியவில்லை. இதனால் தமிழ்வாணன் விபத்து இழப்பீடு கேட்டு தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனாலும் அதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் வழக்கை விரைந்து விசாரித்து இழப்பீடு வழங்குமாறு தமிழ்வாணன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

    இந்நிலையில் இன்று வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தமிழ்வாணன் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக கோர்ட்டுக்குள் வந்துள்ளார்.

    பின்னர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்த அவர் தனது 2 குழந்தைகளையும் ஓரமாக உட்கார வைத்து விட்டு கோர்ட்டு வளாகத்தில் மனைவியுடன் பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் பார்த்து ஓடி வந்து 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது அவர், நான் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ.6 லட்சம் வரை கடனாளியாக உள்ளேன். வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    பின்னர் அவர்களை குழந்தைகளுடன் அழைத்துச் சென்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அணைக்கு வினாடிக்கு 762 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • வைப்பாறு, சூரன்குடி, எட்டயபுரத்தில் சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரையிலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதலே குளிர் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகளும், காலையில் பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 762 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 121.60 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், இன்று மாலைக்குள் 122 அடியை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 134.81 அடியை எட்டியுள்ளது. அங்கு 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் நேற்று 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், மழை குறைவால் இன்று நீர்வரத்து குறைந்தது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆய்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 16 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அணைகளை பொறுத்தவரை கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, குண்டாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கருப்பாநதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மாவட்டத்தில் அடவி நயினார் அணையை தவிர மற்ற அணைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாவூர்சத்திரம், ஆய்குடி, செங்கோட்டை, அச்சன்புதூர், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் அதிக அளவில் கொட்டி வருகிறது. அதில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 57.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. திருச்செந்தூரில் 52 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 47 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. வைப்பாறு, சூரன்குடி, எட்டயபுரத்தில் சாரல் மழை பெய்தது.

    • தென் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
    • சென்னையில் நடந்த இயற்கை சீற்றம் மிகப்பெரிய அளவில் நடந்ததாக அரசு சொல்கிறது.

    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் பாளை கே.டி.சி. நகரில் நேற்று மாலை நடந்தது.

    இதில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து இன்று காலை நெல்லையப்பர் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு 15 நாட்களுக்கு பிறகு கூடி வரும் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பதை அறிவிப்போம்.

    பா.ஜ.க.வுடன் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் இறைவன் நினைப்பது நடக்கும். மோடி நம் நாட்டின் தலைவர் என்பதை பார்க்க வேண்டும். மோடி ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்பதை மட்டும் நினைக்கக்கூடாது.

    தென் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம். நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாகவும் இருக்கலாம்.

    எங்களது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். அதற்காகத்தான் சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் தொகுதி வாரியாக சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கி உள்ளேன்.

    தொகுதியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளேன்.

    சென்னையில் நடந்த இயற்கை சீற்றம் மிகப்பெரிய அளவில் நடந்ததாக அரசு சொல்கிறது. 56 ஆண்டுகளாக இதைத்தான் நாம் சொல்கிறோம். வருமுன் காப்போம் திட்டம் என பல திட்டங்களை 2 திராவிட கட்சிகளும் வகுத்து உள்ளது. இலவசங்களை தவிர்த்து அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு பல கோடி செலவு செய்து பாதிப்பு ஏற்படாதவாறு சீர் செய்திருக்கலாம்.

    சதுப்பு நிலங்களில் 5,000 ஏக்கருக்கு மேல் பட்டா போட்டு கொடுத்து வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். சதுப்பு நிலங்கள், நீர்வழித்தடங்கள், வடிகால் உள்ளிட்டவைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த பிரச்சனையில் அரசை மட்டும் குறை சொல்லவில்லை. பொதுமக்களும் இதில் குற்றம் செய்தவர்கள்.

    ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை பொதுமக்கள் திருப்பி கொடுத்தால் தான் நீர் வழித்தடங்கள் சிறப்பாக இருக்கும். சென்னை மக்கள் அடிப்படை வசதிகள் பலதையும் இழந்துவிட்டனர்.

    அரசு நிவாரணம் மக்களுக்கு தற்காலிக உதவியாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது. வருங்கால தொலைநோக்கு திட்டத்தை அடுத்த தலைமுறைக்காக சிந்தித்து இப்போது செயல்படுத்தினால் தான் நன்றாக இருக்கும். மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக அரசு செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

    சென்னை மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளத்தின் தகவல்களை வைத்து இனிமேல் வரும் காலங்களில் தவறு நடந்திருக்காமல் இருக்க நான் முதலமைச்சராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

    சென்னை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு செய்த திட்டத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    2026-ம் ஆண்டு நான் தான் முதலமைச்சர் வேட்பாளர். நான் முதலமைச்சரானால் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன். குக்கிராமங்களிலும் கழிவுநீர் செல்வதற்கான பாதைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.

    அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம், தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுப்பேன். தகுதி உள்ளவர்களையும் அறிவாளிகளையும், என்னுடன் சேர்த்துக்கொண்டு சிறந்த திட்டங்களை செயல்படுத்துவேன்.

    முதலமைச்சராக பதவியேற்று ஒரு வருட காலம் மக்களுக்கு தேவையான என்னென்ன திட்டங்களை செய்யலாம் என்பதையே ஆய்வு மேற்கொள்வேன். அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்.

    எதையும் மக்களுக்காக ஒரு ஆண்டுக்கு பிறகு செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்து சென்று விடுவேன்.

    தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் எது நல்ல அரசியல் கட்சி என தேர்ந்தெடுங்கள். அதுதான் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் அழகேசன், பகுதி செயலாளர் அழகேச ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக பாளை மத்திய சிறை அருகே உள்ள காது கேளாதோர் பள்ளியில் குழந்தைகளுடன் சரத்குமார் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

    தொடர்ந்து சரத்குமாருடன் அங்குள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    • கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி, குழந்தைகள் அவரை பிரிந்து பணகுடியில் உள்ளனர்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 53). மீனவர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை பிரிந்து பணகுடியில் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த ஸ்டாலின் அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்தவர்கள் ஸ்டாலினை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் ஸ்டாலின் அங்குள்ள கடற்கரை பகுதிக்கு சென்று மீன் வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்டாலின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பையில் 49 மில்லி மீட்டரும், கருப்பா நதி பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 32 மில்லி மீட்டரும், கடம்பூரில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    இதே போல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, நாங்குநேரி, கடனாநதி பகுதி, ராமநதி பகுதி குண்டாறு பகுதி, கொடு முடியாறு பகுதி, அடவி நயினார் அணைக்கட்டு, சங்கரன்கோவில், சிவகிரி, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிர பரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.

    இந்நிலையில் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டை கடந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிர பரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்ட தாமிரபரணி பகுதிகளை கடந்து தண்ணீர் செல்வதால் நெல்லை மாவட்டத்திலும் தாமிர பரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 120.70 அடியாக உள்ளது. அணைக்கு 870.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதே போல் மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 86.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 133.89 கன அடியாகவும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்ட அணைகளை பொறுத்த வரையில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 113.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. கடனா நதி அணை 81.40 அடியாக உள்ளது.

    • நெல்லையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்தது. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து 3 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை மாநகர பகுதிகளில் நேற்று மாலை டக்கரம்மாள்புரம், கே.டி.சி.நகர், டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இரவில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. பயங்கர இடி-மின்னலுடன் கனமழை பெய்ததால் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    பாளை பஸ் நிலையம், பெருமாள்புரம், தியாகராஜநகர், மகாராஜ நகர், கே.டி.சி.நகர், சமாதானபுரம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாளையில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    இந்த கனமழையால் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். டவுனில் நெல்லையப்பர் கோவில் ரதவீதி, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. டவுன் வடக்கு ரதவீதியில் குளம்போல் தேங்கி கிடந்த தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. புதிய பஸ் நிலையம் பகுதியில் மரம் முறிந்தது.

    தொடர்மழையால் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும் சிறப்பு வகுப்புகள் உள்பட எந்தவொரு வகுப்புக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு, மூலக்கரைப்பட்டி, ஏர்வாடி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் அதிகாலை முதலே பலமாக பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், தளவாய்புரம், பரமன்குறிச்சி, காயாமொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அங்கு 20 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    அதேபோல் ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    காயல்பட்டினம், கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. மாவட்டத்தில் திருச்செந்தூர், தூத்துக்குடி தாலுகாக்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    காடல்குடி, வேடநத்தம், வைப்பாறு, சாத்தான்குளம், மணியாச்சி, சூரன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே மாவட்டம் முழுவதும் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், மழைக்கான எச்சரிக்கை இருப்பதாலும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பதி உத்தரவிட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதிகளில் மட்டும் 0.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    மாவட்டத்தில் பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகாலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. தொடர்மழை காரணமாக தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ×