என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாபநாசம் அணை நீர்மட்டம் 122 அடியை எட்டியது- விவசாய பணிகள் தீவிரம்
- அணைக்கு வினாடிக்கு 762 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- வைப்பாறு, சூரன்குடி, எட்டயபுரத்தில் சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரையிலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதலே குளிர் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகளும், காலையில் பணிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.
அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 762 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 121.60 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், இன்று மாலைக்குள் 122 அடியை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 134.81 அடியை எட்டியுள்ளது. அங்கு 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் நேற்று 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில், மழை குறைவால் இன்று நீர்வரத்து குறைந்தது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆய்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 16 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அணைகளை பொறுத்தவரை கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, குண்டாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கருப்பாநதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தில் அடவி நயினார் அணையை தவிர மற்ற அணைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாவூர்சத்திரம், ஆய்குடி, செங்கோட்டை, அச்சன்புதூர், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் அதிக அளவில் கொட்டி வருகிறது. அதில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 57.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. திருச்செந்தூரில் 52 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 47 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. வைப்பாறு, சூரன்குடி, எட்டயபுரத்தில் சாரல் மழை பெய்தது.






