என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது.
    • ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்அங்கு பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெய செல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியை ஆபாசமாக பேசி தாக்கினார்.

    மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து கையில் கடித்துள்ளார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூடங்குளம் பகுதியில் சென்றபோது மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
    • கடலில் தரைதட்டிய மிதவை கப்பலில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு நீராவி ஜெனரேட்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 5, 6-வது அணு உலைகள் அமைப்பதற்காக 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கிருந்து 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கடந்த 8-ந் தேதி கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.

    கூடங்குளம் பகுதியில் சென்றபோது மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் நீராவி ஜெனரேட்டர்களுடன் அலையில் இழுத்து செல்லப்பட்ட மிதவை கப்பல், கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் பாறை இடுக்கில் தரைதட்டியது.

    இதையடுத்து அதனை மீட்பதற்காக சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் பலனளிக்கவில்லை. மேலும் பாறையில் மோதியதில் மிதவை கப்பல் சேதமடைந்ததால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து கடற்கரையில் இருந்து மிதவை கப்பல் வரையிலும் கடலுக்குள் சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு பாறாங்கற்கள், மண் கொட்டி இரவு பகலாக சாலை அமைத்தனர்.

    தொடர்ந்து அந்த சாலை வழியாக நேற்று மதியம் அதிநவீன ஹைட்ராலிக் வசதியுடன் கூடிய 128 டயர்களைக் கொண்ட ராட்சத லாரி மெதுவாக பயணித்து மிதவை கப்பலை சென்றடைந்தது. மிதவை கப்பலில் இருந்த 2 நீராவி ஜெனரேட்டர்களையும் ஒவ்வொன்றாக மீட்கும் பணி நடைபெற்றது.

    அதன்படி லாரியுடன் இணைக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் எந்திரமானது நீராவி ஜெனரேட்டரின் அடியில் சென்று, அதனை மெதுவாக தூக்கியது. தொடர்ந்து அதனை லாரி இழுத்தவாறு வெளியில் வந்தது.

    தொடர்ந்து மிதவை கப்பலில் இருந்த மற்றொரு நீராவி ஜெனரேட்டரையும் இரவில் மீட்டனர். மீட்பு பணிகளை கூடங்குளம் வளாக இயக்குனர் சுரேஷ் பார்வையிட்டார்.

    கடலில் தரைதட்டிய மிதவை கப்பலில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு நீராவி ஜெனரேட்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    • தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டியில் மாணவி ரேஷிகா தங்க பதக்கம் பெற்றார்.
    • ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக ரேஷிகா தேர்வு பெற்றுள்ளார்.

    நெல்லை:

    தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.

    இதன் மூலம் அடுத்த மாதம் சீனாவில் 17-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக தேர்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர். திருமாறன், முதல்வர் முருகவேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
    • இந்த போராட்டத்தில் பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை எண் 152-ஐ வெளியிட்டிருந்தது. அதன்படி இனி ஓய்வு பெறும் தூய்மை பணி யாளர்களுக்கான காலி பணியிடத்தை நிரப்பக் கூடாது. ஒப்பந்த பணி யாளர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    போராட்டம்

    இந்த அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும், தினக்கூலியாக ரூ.480 முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்கள், கணக்கர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில்,

    நெல்லை மாநகராட்சி யில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 740 தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது அவர்களை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்ற வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை கைவிட வேண்டும். அவ்வாறு ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.325 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே வழக்கம்போல் சுய உதவி குழு மூலமாகவே தூய்மை பணியாளர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத் துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
    • கண்களை கட்டிக்கொண்டு கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியா தம்பதியின் மகள் பிரிஷா(வயது 14). இவர் 9- ம் வகுப்பு படித்து வரு கிறார்.

    இந்த மாணவி 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத் துள்ளார். மேலும் 200-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.

    உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனை கள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

    மேலும் இளம் வயதி லேயே 3 முனைவர் பட்டங் களையும் முதன் முறையாக இவர் பெற்றார். இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு இந்த மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது .

    இந்த நிலையில் 70-வது உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா தனது 100-வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு இன்று கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது 100-வது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.

    30 சாதனைகள்

    பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி யில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட் களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களை கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப் பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும் கண் களை கட்டிக்கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகை களை அதிக எண்ணிக்கை யில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண் களை கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வு களை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    • கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் -பிரகாரங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
    • தண்ணீரை பீய்ச்சி அடித்து சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு சுத்தப் படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் மற்றும் பிரகாரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. நவீன ஏர் கம்ப்ரசர் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூண்கள், சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு உள்ளிட்ட அழுக்குகளை நீக்கி சுத்தப் படுத்தினர்.

    இதனால் பிசுக்குகள் நீங்கி சுவர்கள் கல் தூண்கள் 'பளிச்' என காணப்பட்டது.

    • நல்மேய்ப்பர் நகர் தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
    • சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் 11, 12, 13 மற்றும் 14-வது தெருக்களில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அங்கு 15-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பாகவும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்-சிறுமிகள் தெருக்களில் சென்று விளையாட அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீபத்தில் டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்களை நாய்கள் கடித்து குதறியது. ஆபத்தான நிலையில் அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் நல்மேய்ப்பர் நகரில் நடப்பதற்கு முன்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடிக்க வேண்டும் என்றனர். 

    • ஆறுமுகம் சம்பவத்தன்று அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக கனகராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60).தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக தெற்கு அப்பர்குளத்தை சேர்ந்த கனகராஜ் (42) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆறு முகம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுபற்றி களக்காடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சுமார் 45 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுப்பு மறுக்கப்படுவதாகவும், வார ஓய்வையும் நிர்வாகம் வழங்குவது இல்லை எனவும் அடிக்கடி புகார் எழுந்தது. மேலும் டிரைவர்-கண்டக்டர்கள் வேறு வழித்தடத்திற்கு செல்லமாட்டேன் எனவும், அதிக நேரம் பணி செய்ய முடியாது என கூறினால் எந்தவித விசாரணையும் இன்றி தற்காலிக பணிநீக்கம் அல்லது பணியிட மாற்றத்தில் வள்ளியூர் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் ஈடுபடுவதாக டிரைவர்-கண்டக்டர்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து இன்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், தொழிலாளர்கள் மீது அதிக பணி சுமையை ஏற்படுத்துவதோடு தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக நெல்லை அரசு போக்குவரத்து கழக மண்டல வணிக மேலாளர் சசிகுமார், தொழில்நுட்ப துணை மேலாளர் சங்கர நாராயணன், வள்ளியூர் கிளை மேலாளர் வினோச் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர். இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படும், தொழிலாளர்களுக்கு வார ஓய்வு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 3 மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தின்போது 45 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கின. 3 மணி நேரமாக 40 பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் காலையில் பணிக்கு செல்லும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர்.
    • மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலை கடந்த 24-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நிலையில், மறுநாள்(25-ந்தேதி) சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை வந்தடைந்தது.

    இந்நிலையில் இன்று ரெயில்வே கால அட்டவணைப்படி நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. ஏற்கனவே இந்த ரெயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் பொங்கல் வரையிலும் விற்றுத்தீர்ந்து விட்ட நிலையில் இன்று காலை நெல்லையில் இருந்து பயணிகளுடன் தனது பயணத்தை வந்தே பாரத் முதல் முறையாக தொடங்கியது.

    இந்த ரெயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏசி பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர். இதேபோல் மதுரையில் இருந்து எக்சிகியூட்டிவ் பெட்டியில் 10 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 97 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். முதல் நாளான இன்று மொத்தமாக எக்சிகியூட்டிவ் பெட்டியில் 52 பேரும், சாதாரண ஏசி பெட்டியில் 487 பேரும் என மொத்தம் 539 பேருடன் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

    மறுமார்க்கமாக இன்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் புறப்படுகிறது. அதிலும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதற்கிடையே இரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைவதால் நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஒரு கட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் மன்சூர்(வயது 42). இவர் நெல்லை மாநகராட்சியில் 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் நெல்லை மாநகர இந்து முன்னணி பேட்டை நகர துணைத்தலைவராக உள்ளார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பேட்டை செக்கடி பகுதியில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு இந்த பிரச்சனை தொடர்பாக டவுன் காட்சி மண்டபம் அருகே 2 தரப்பினருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    அப்போது அந்த வழியாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. இதில் கையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அய்யப்பனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட கவுன்சிலர் தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காயம் அடைந்த அய்யப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை டவுன் போலீசார் மீட்டு ஆம்புலன்சு மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அய்யப்பன் அளித்த புகாரின்பேரில், ஆயுதம் கொண்டு தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற பேட்டை சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது 3 பிரிவுகளில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த பிரச்சனையில் தொடர்புடைய கவுன்சிலர் ஷேக் மன்சூரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி நிர்வாகி அய்யப்பனை இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    • சுத்தமல்லி விலக்கு அருகில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வழிகாட்டுதலில் சுத்தமல்லி விலக்கு அருகில் நெல்லை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும். நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (கிராமப்புற கோட்டம்) குத்தாலிங்கம், உதவி செயற் பொறியாளர் (கிராமப்புற உபகோட்டம்) அலெக்சாண்டர், உதவி மின் பொறியாளர் (சுத்தமல்லி பிரிவு) வேலுசாமி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×