search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt bus driver strike"

    • 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சுமார் 45 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுப்பு மறுக்கப்படுவதாகவும், வார ஓய்வையும் நிர்வாகம் வழங்குவது இல்லை எனவும் அடிக்கடி புகார் எழுந்தது. மேலும் டிரைவர்-கண்டக்டர்கள் வேறு வழித்தடத்திற்கு செல்லமாட்டேன் எனவும், அதிக நேரம் பணி செய்ய முடியாது என கூறினால் எந்தவித விசாரணையும் இன்றி தற்காலிக பணிநீக்கம் அல்லது பணியிட மாற்றத்தில் வள்ளியூர் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் ஈடுபடுவதாக டிரைவர்-கண்டக்டர்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து இன்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், தொழிலாளர்கள் மீது அதிக பணி சுமையை ஏற்படுத்துவதோடு தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக நெல்லை அரசு போக்குவரத்து கழக மண்டல வணிக மேலாளர் சசிகுமார், தொழில்நுட்ப துணை மேலாளர் சங்கர நாராயணன், வள்ளியூர் கிளை மேலாளர் வினோச் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர். இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படும், தொழிலாளர்களுக்கு வார ஓய்வு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 3 மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தின்போது 45 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கின. 3 மணி நேரமாக 40 பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் காலையில் பணிக்கு செல்லும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். 

    ×