search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tharna"

    • போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
    • இந்த போராட்டத்தில் பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை எண் 152-ஐ வெளியிட்டிருந்தது. அதன்படி இனி ஓய்வு பெறும் தூய்மை பணி யாளர்களுக்கான காலி பணியிடத்தை நிரப்பக் கூடாது. ஒப்பந்த பணி யாளர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    போராட்டம்

    இந்த அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும், தினக்கூலியாக ரூ.480 முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்கள், கணக்கர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில்,

    நெல்லை மாநகராட்சி யில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 740 தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது அவர்களை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்ற வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை கைவிட வேண்டும். அவ்வாறு ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.325 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே வழக்கம்போல் சுய உதவி குழு மூலமாகவே தூய்மை பணியாளர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத் துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×