search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Councilore"

    • கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஒரு கட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் மன்சூர்(வயது 42). இவர் நெல்லை மாநகராட்சியில் 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் நெல்லை மாநகர இந்து முன்னணி பேட்டை நகர துணைத்தலைவராக உள்ளார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே பேட்டை செக்கடி பகுதியில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு இந்த பிரச்சனை தொடர்பாக டவுன் காட்சி மண்டபம் அருகே 2 தரப்பினருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது கவுன்சிலர் ஷேக் மன்சூர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு அய்யப்பனுக்கு சரமாரி அடி விழுந்துள்ளது.

    அப்போது அந்த வழியாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை இரவு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. இதில் கையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அய்யப்பனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுகுறித்து டவுன் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட கவுன்சிலர் தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காயம் அடைந்த அய்யப்பன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை டவுன் போலீசார் மீட்டு ஆம்புலன்சு மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அய்யப்பன் அளித்த புகாரின்பேரில், ஆயுதம் கொண்டு தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோதல் சம்பவத்தை தடுக்க சென்ற பேட்டை சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கவுன்சிலர் ஷேக் மன்சூர் மற்றும் கூட்டாளிகள் மீது 3 பிரிவுகளில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த பிரச்சனையில் தொடர்புடைய கவுன்சிலர் ஷேக் மன்சூரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்து முன்னணி நிர்வாகி அய்யப்பனை இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. கவுன்சிலரை கொல்ல முயன்றது தொடர்பாக புரட்சிபாரதம் கட்சி நிர்வாகி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபத்திரன். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். கடந்த மாதம் மர்மநபர்கள் சிலர் வீராவை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கவுன்சிலர் வீராவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி விசாரணையை துவங்கினர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் வீரா மீது முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் கட்சி பட்டு பகுதியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மிதுன்சக்ரவர்த்தி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீராவை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் இந்த வழக்கில் மிதுன் சக்கரவர்த்தி உள்பட 8 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிதுன் சக்கரவர்த்தி (வயது 29) மற்றும் வெங்காடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 23),

    வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 29) ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சுதாகர் பரிந்துரை செய்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தி மூவரையும் ஜாமினில் வராத படி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
    ×