search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குஷ்பு தலைமையில் தேசிய கொடியுடன் 75 கார்களில் அணிவகுத்த பெண்கள்

    • சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவிடந்தை வரை 75 பெண்கள் கார்களில் பேரணி செல்லும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சுதந்திர தின 75-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கிராமம் முதல் நகரங்கள் வரை தேசிய கொடியுடன் எல்லோரும் பேரணிகள், பாதயாத்திரைகள் நடத்தும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதன் படி சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவிடந்தை வரை 75 பெண்கள் கார்களில் பேரணி செல்லும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான நடிகை குஷ்பு தலைமையில் 75 கார்களையும் பெண்களே ஓட்டி சென்றனர். அனைத்து கார்களிலும் தேசிய கொடிகளை கட்டி இருந்தனர்.

    முதல் காரை குஷ்பு ஓட்டி செல்ல மற்ற கார்கள் பின் தொடர்ந்து அணி வகுத்து சென்றன.

    இந்த பேரணி பட்டினப்பாக்கத்தில் தொடங்கி மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவிடந்தை வரை சென்றது.

    பேரணியை தொடங்கி வைத்து வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    தேசியக்கொடி என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. தி.மு.க.விற்கு அடிப்படையிலேயே தேசியக் கொடி மீதும், தேச ஒற்றுமை மீதும் முழு நம்பிக்கை கிடையாது.

    நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்களித்தவர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் உண்டு. அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தேசியக்கொடியை பதிவிட்டிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் சொல்லியிருப்பதால் தனது சமூக வலைதள பக்கத்தில் தேசிய கொடியை அவர் வைக்கவில்லை .

    தேசியக்கொடி தொடர்பான பிரதமரின் கருத்தை செயல்படுத்துவதில் முதல்-அமைச்சரிடம் தீவிரமான முன்னெடுப்பை பார்க்க முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை.

    முதல்-அமைச்சர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் முன்னணியில் நின்று தமிழக மக்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். தி.மு.க.விடம் தேசிய சித்தாந்தம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தேசிய கொடி தொடர்பான பிரதமரின் எண்ணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை ஆகும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை குஷ்பு கூறியதாவது:-

    பிரதமரின் கோரிக்கையை ஏற்று வருகிற 13 -ந் தேதி முதல் 15-ந்தேதி வரை அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

    கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும், எந்த நிகழ்வையும் மகளிர் தொடங்கி வைத்தால் அது வெற்றி பெறும்.

    75-வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வைக்க வேண்டும். வீடு வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும். இதுபற்றி மக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பிரசார பயணம் செய்து வருகிறோம்.

    தேசிய கொடி நம் தேசத்திற்கும் நமக்குமான உணர்வு பாலம். சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தேசிய கொடி அமைந்து உள்ளது.

    சுதந்திர தினம் நாட்டின் கொண்டாட்டமாகவும் , திருவிழாவாகவும் மாறி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கரு.நாகராஜன், ரெயில்வே வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×