search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- 69 மாணவர்களுக்கு மோடி பதக்கம் வழங்கினார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- 69 மாணவர்களுக்கு மோடி பதக்கம் வழங்கினார்

    • பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர்.

    சென்னை:

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'செஸ்' ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

    இன்று தமிழகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இதற்காக இன்று காலை 9.55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்குக்கு வந்தார்.

    அவரை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி வாசலில் நின்று வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோரும் வரவேற்றனர்.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்பதால் அங்குள்ள அறைக்கு சென்று பட்டமளிப்பு விழாவுக்கான அங்கி அணிந்து வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் அங்கி அணிந்து வந்திருந்தனர்.

    பட்டமளிப்பு விழா மேடைக்கு சரியாக காலை 10 மணிக்கு வந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    விழாவுக்கு வந்த அனைவரையும் துணைவேந்தர் வேல்ராஜ் வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன பதக்கங்களை வழங்கினார்.

    இந்த 69 மாணவர்களில் 31 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் படித்தவர்கள். மீதமுள்ள 38 பேர் இதர பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் படித்து முதலிடம் பிடித்தவர்கள்.

    பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இறுதியாக பிரதமர் மோடி விழா பேரூரை நிகழ்த்தினார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு பிறகு 70 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று பதக்கங்கள் வழங்கி உள்ளார்.

    பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் எத்தனை கல்வி நிறுவனங்கள் உள்ளது என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ஒட்டு மொத்த உயர்கல்வி முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் உள்ளவை-18

    தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-21

    தலை சிறந்த கல்லூரிகள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-32

    தலை சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-10

    தலை சிறந்த பொறியியல் கல்லூரிகள் முதல் 200-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-35

    தலை சிறந்த மேலாண்ம கல்வி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-11

    மருத்துவக் கல்வி நிறுவனங்கள் முதல் 100-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-8

    பல் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் முதல் 40-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-9

    சட்டக் கல்லூரிகள் முதல் 30-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-2

    கட்டிடக் கலை கல்லூரிகள் முதல் 30-ல் தமிழ்நாட்டில் உள்ளவை-6

    Next Story
    ×