search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற கோரிய வழக்கு தள்ளுபடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற கோரிய வழக்கு தள்ளுபடி

    • ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாததால், போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்துவதால், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் என்கின்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக உறுப்பினராக 1974-ம் ஆண்டு முதல் இருந்து பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறேன்.

    ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்து உள்ளார். அதன் பின்னர் எதிர்க்கட்சி துணை தலைவராக கடந்த ஆண்டு ஜூலை 14-ந்தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை 11-ந்தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளருடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்து கலவரத்தில் ஈடுபட்டார்.

    அதாவது அவருக்கு அரசு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்புடன் இந்த கலவரத்தில் அவர் ஈடுபட்டார்.

    அதனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார்.

    ஏற்கனவே அவருக்கு மத்திய அரசு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாததால், போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்துவதால், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் முதல்-அமைச்சர் என்கின்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×