என் மலர்
சிவகங்கை
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது 35). தொழில் அதிபரான இவர் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், “நானும், ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் காதலித்தோம். அதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். நானும் முஸ்லிம் மதத்திற்கு மாறினேன்.
சில மாதங்களில் நாசர் அலியின் போக்கு மாறியது. அவரிடம் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினேன். ஆனால் நாசர் அலி திருமணத்திற்கு மறுத்தார். அதனால் அவரது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறினேன். முதலில் திருமணம் செய்து வைப்பதாக கூறிய அவர்கள், பின்னர் மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாசர் அலிக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காரைக்குடியில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் ரொபினா அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரினார்.
மேலும் திருமணம் நடைபெற்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுதவிர திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும் அவர் புகார் அளித்தார்.
இந்த நிலையில் திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்ட பள்ளிவாசலுக்கு நேற்று காலை சென்று அதன் நிர்வாகிகளை சந்தித்து ரொபினா கதறி அழுது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு வேண்டினார். தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். திடீரென ரொபினா அழுதுகொண்டே பள்ளிவாசல் சுவரில் முட்டினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்து அருகில் இருந்த பெண் போலீசார் ரொபினாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். அதன்பின் இங்கு திருமணம் நடைபெறாது என்று பள்ளிவாசல் நிர்வாகிகளும் உறுதியளித்தனர்.
ஆனால் காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாசர் அலிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ரொபினாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு விரைந்து சென்றார். ரொபினா வருவதை அறிந்த திருமண வீட்டாரின் உறவினர்கள் அப்பகுதியின் நுழைவு வாயில் கேட்டை பூட்டினர்.
ஆனால் ரொபினா காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து, திருமணம் நடக்கும் இடத்தை நோக்கி ஓடினார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் அந்த இடத்திலேயே அழுது புரண்டதுடன், போராட்டம் நடத்தினார்.
இருப்பினும் அங்கு நாசர் அலிக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. நாசர் அலியின் வீட்டினர் துரோகம் இழைத்துவிட்டனர். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் அமைதியாக இருக்கின்றனர், கோர்ட்டு மூலம் எனக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என்று ரொபினா தெரிவித்தார். #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது33).
இவர் வீட்டில் தனியாக இருந்தபோது ஆவரங்கோட்டை சேர்ந்த முருகன் மகன் முத்தையா (27) தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது
மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து முத்தையா கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் ராணுவ வீரராக இருக்கும் இவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் செல்ல துரை. இவருடைய மகன் மெல்வின் (வயது 17). நாச்சியப்ப சுவாமிகள் தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார்.
இதே பாலிடெக்னிக்கில் இலுப்பைகுடி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் சிவக்குமார் (22) படித்து வந்தார். இவருக்கும், மெல்வினுக்கும் பஸ்சில் செல்லும்போது அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த முன் விரோதத்தில் இலுப்பைகுடி பஸ் நிறுத்தத்தில் மெல்வின் நின்றபோது சிவக்குமார், தனது நண்பர்கள் சங்கர் (21), கார்த்தி (21), நந்தகுமார் (17) ஆகியோருடன் வந்து வாக்குவாதம் செய்தார்.
அப்போது 4 பேரும் சேர்ந்து மெல்வினை தாக்கியதோடு இருசக்கர வாகனத்தில் கடத்தவும் முயன்றனர். அவர் கூச்சலிட்டதை பார்த்து அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்து மெல்வினை மீட்டனர்.
இது குறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீசில் மெல்வின் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சிவக்குமார், கார்த்தி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சங்கரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
சிவகங்கை:
திருப்பத்தூர் நகர் வசந்தநகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 47). இவர் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவரது சகோதரர் பார்த்திபன் திருப்பத்தூர் நகர் போலீ சில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகிறார்.
மானாமதுரை தாலுகா இடைக்காட்டூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் காவ்யா. 8-ம் வகுப்புவரை படித்துள்ள இவர், வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு தோழி வீட்டுக்கு சென்று வருவதாக காவ்யா வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் மகளை பல் வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலனில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.100 நாள் வேலைத்திட்டத்தில் தினக்கூலி ரூபாய் 208 வழங்க வேண்டும்.
2016-17 பயிர்க்காப்பீடு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வீரபாண்டி, மாவட்டத் தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முனியராஜ் விஜயகுமார், மானாமதுரை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளமுத்து, ராஜாராம், முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினர். #tamilnews
சிவகங்கை:
தேவகோட்டை தாலுகா மேலப்பொன்னி கிராமத்தைச்சேர்ந்த விவசாயி பாண்டி. இவரது மகள் சித்ரா (வயது 24). இவரும், திருவாடானை பகுதியைச் சேர்ந்த உறவினர் ஸ்டீபன் என்பவரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று வந்தனர். ஸ்டீபன் திருமணம் செய்வதாக கூறி சித்ராவுடன் நெருங்கி பழகி வந்தார். இதில் சித்ரா கர்ப்பிணி ஆனார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்டீபனிடம் பலமுறை வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சித்ரா தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பத்தூர் அருகே உள்ள சமஸ்கான் பள்ளியை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் அஜ்மீர் காஜா (வயது 24).
இவர் இன்று காலை திருப்பத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூருக்கு ஜவுளி ஏற்றிக்கு கொண்டு மினி லாரி புறப்பட்டது. காரையூர் பக்கம் வந்து கொண்டு இருந்த போது 2 வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அஜ்மீர்காஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜ்மீர் காஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மினி லாரியை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. சம்பவத்தன்று ஜனகராஜ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்த அவர்கள் பீரோவை உடைத்து 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய ஜனகராஜ் கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
திருப்புவனம் அருகே உள்ள கழுகர்கடை கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 41). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு திருப்புவனத்துக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5½ பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகர், காளையார் கோவில், தேவகோட்டை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நபார்டு வங்கியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 2018-2019-ஆம் நிதி ஆண்டிற்கு முன்னுரிமைக் கடன் திட்ட அறிக்கை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் லதா தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத் தொழில்கள் மேற்கொள்வதற்கு வங்கிகள் மூலம் முன்னுரிமைக்கடன் வழங்குவதற்காக திட்ட மதிப்பீட்டு கையேட்டினை கலெக்டர் வெளியிட்டு பேசியதாவது:-
மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் விவசாயம், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மற்றும் விவசாயம் சாராத் தொழில்களுக்கான முன்னுரிமைக்கடன் வழங்குவதற்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு நபார்டு வங்கியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2018-19-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 2018-19-ம் நிதியாண்டிற்கு வேளாண்மைப் பயிர்க்கடன் வழங்குவதற்கு ரூ.1,951 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்கு ரூ.567 கோடியும், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.272 கோடியும் ஆக மொத்தம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.3,401 கோடி வழங்குவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.590 கோடியும், ஏற்றுமதி தொழில் செய்வதற்கு ரூ.64 கோடியும், கல்விக்கடன் வழங்குவதற்கு ரூ.563 கோடியும், வீட்டு வசதி கடன் வழங்குவதற்கு ரூ.653 கோடியும், சூரியசக்திப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சூரியசக்தி உற்பத்திச் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு ரூ.8.74 கோடியும், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மற்றும் பிரதமரின் ஜன் தன் மற்றும் பல்வேறு காப்பீடு திட்டங்கள் மேற்கொள்வதற்கு ரூ.705 கோடியும் மற்றும் இதர சமூக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு ரூ.105 கோடியும் ஆக மொத்தம் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.6,931 கோடி அளவிலான முன்னுரிமைக்கடன் வங்கிகள் மூலம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ருக்மணி லட்சுமணன் மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மகளிர் திட்டம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது33). இவருக்கு சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள நகரம்பட்டி கிராமத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தை மேலூர் கோட்டநத்தம் பட்டியை சேர்ந்த கருப்பையா (56), அவரது மகன் ராஜா (37) ஆகியோர் பராமரித்து வந்தனர். சுந்தரேசன் நகரம்பட்டிக்கு வரும்போது ராஜாவுடன் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று இருவரும் தோட்டத்தில் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது சுந்தரேசன் தனது கைலியால் ராஜாவின் கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து சுந்தரேசனை கைது செய்தார். #Tamilnews
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, ராம்நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் அதே பகுதியில் சைக்கிள் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சேலத்திற்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியன் வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் தேவகோட்டை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ் பெக்டர் எர்சாத் ஆகியோர் நடத்திய விசாரணையில் பாலசுப்பிரமணியன் வீட்டில் நள்ளிரவில் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பதும் நகை, பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்துச் சென்றதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுகள் நடந்து வருவதால் பாலசுப்பிரமணியன் சேலத்திற்கு செல்வதற்கு முன் வீட்டிலேயே நகையை மறைவான இடத்தில் வைத்துச் சென்றுள்ளார்.
இதை அறியாத கொள்ளையர்கள் நகை, பணம் கிடைக்காத விரக்தியில் தீ வைத்தனர்.
பாலசுப்பிரமணியனின் சமயோஜித புத்தியால் அவரது நகைகள் தப்பின.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தைச் சேர்ந்தவர் ரகுவரன் (வயது27). இவர் கும்பகோணத்தில் உள்ள கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியைச்சேர்ந்த கற்பகவள்ளி (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
ரகுவரனும், கற்பகவள்ளியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்களின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. “ரகுவரனை விட்டு விலகி விடு” என்று கற்பகவள்ளியை ரகுவரனின் உறவினர்கள் மிரட்டி வந்தனர். இதை கற்பகவள்ளி காதில் வாங்கி கொள்ளவில்லை.
இந்த நிலையில் ரகுவரனின் உறவினர்களான செல்வராணி, சீமைச்சாமி, விஜயா ஆகியோர் சேர்ந்து கற்பகவள்ளியை மிரட்டி தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து கற்பக வள்ளி சிவகங்கை போலீஸ் துணை சூப்பிரண்டு மங்களேஸ்வரனிடம் புகார் செய்தார்.
பின்னர் சிகிச்சைக்காக காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். கற்பகவள்ளியின் புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.






