என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் 12 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையத்தினை கோட்ட கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    தபால் துறை மூலம் தபால் அலுவலங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை தலைமை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களான இளையான்குடி, காளையார்கோவில் சாலை கிராமம், ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், ஒக்கூர், திருப்பத்தூர், கல்லல், சிவகங்கை கலெக் டர் அலுவலகம் ஆகிய 12 அஞ்சலகங்களில் இந்த சேவை செயல்பட தொடங்கி உள்ளது.

    சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட கண்காணிப்பாளர் சிவநாதன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை போஸ்ட் மாஸ்டர் வீர பாண்டி, கோட்ட அஞ்சலக உதவி ஆய்வாளர் சித்ரா, போஸ்ட் மாஸ்டர் கருப்பையா, அலுவலர்கள் மதி, நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த மையத்தில் புதிய ஆதார் அட்டையை பதிய கட்டணம் இல்லை. தொலைபேசி எண் மாற்றம், முகவரி மாற்றம் திருத்தங்களுக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


    சிங்கம்புணரியில் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் மாதவன் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
    சிங்கம்புணரி:

    தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மாதவன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த மாதவன் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 85.

    அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் மாதவன் பணியாற்றியவர் ஆவார்.

    மாதவனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிங்கம்புணரிக்கு வந்தார். அவர் மாதவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    பெரியகருப்பன் எம்.எல்.ஏ. மற்றும் தென்னவன் உள்பட முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    மாதவனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாதவனின் இறுதிச்சடங்கு இன்று மாலை சிங்கம்புணரியில் நடைபெறுகிறது.

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செ.மாதவன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
    சிங்கம்புணரி:

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செ.மாதவன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கடந்த ஒருவார காலமாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார்.

    நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 85.

    மாதவன் 1933-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி பிறந்தார். கடந்த 1962-ம் ஆண்டு அப்போதைய திருக்கோஷ்டியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்பு மாற்றியமைக்கப்பட்ட திருப்பத்தூர் தொகுதியில் 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.யாக இருந்தார். இந்த 3 முறையும் தி.மு.க. சார்பில் அவர் போட்டியிட்டு வென்றிருந்தார்.

    பின்னர் தி.மு.க.வில் இருந்து விலகிய மாதவன், 1982-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 1984-ம் ஆண்டு அதே திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 4-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

    1990-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க. பொருளாளராக பணியாற்றியுள்ளார்.

    அ.தி.மு.க. 2 ஆக பிரிந்தபோது ஜானகி அணியில் மாதவன் இணைந்தார்.

    1996-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    அண்ணா, கருணாநிதி அமைச்சரவைகளில் மாதவன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    மாதவன் உடல் அடக்கம் இன்று மாலை 3 மணிக்கு வேங்கைப்பட்டி சாலையில் உள்ள பொது மயானத்தில் நடைபெற உள்ளது. சிங்கம்புணரி அண்ணா மன்றம் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் நடைபெறுகிறது.

    மாதவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிங்கம்புணரி பகுதியில் வணிகர் சங்கங்கள் சார்பில் இன்று(புதன்கிழமை) ஒருநாள் கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாதவன் மறைவுக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இன்று காலை 9 மணிக்கு சிங்கம்புணரிக்கு வரும் மு.க.ஸ்டாலின், மாதவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.  #tamilnews
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். #CauveryManagementBoard

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் அரண்மனை முன்பு இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்து பேசினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கற்பகம், முருகானந்தம், ராமச்சந்திரன், சந்திரன், பொருளாளர் ரத்தினம், அவைத்தலைவர் காளிதாஸ், நகரச் செயலாளர்கள் ஆனந்தன், ராமச்சந்திரன், பாண்டித்துரை, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, ராமலிங்கம், தகவல் தொழில் நுட்பப் பிரிவு அமைப்பாளர் கோபி மற்றும் மகளிரணியினர், சார்பு அணியினர், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி பேசினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.


    ராமநாதபுரத்தில் அ.தி. மு.க. சார்பில் அரண்மனை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அமைச்சர் மணிகண்டன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், முனியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரையில் வடக்குமாசி வீதி- மேலமாசி வீதி சந்திப்பில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

    அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ஏ.கே. போஸ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #CauveryManagementBoard #CauveryIssue

    தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள மருதவயல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன் பிரேம்குமார்(வயது 23). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் கெமிக்கல் ஆலையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலை தொடர்பாக பிரேம்குமார் காரைக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். 

    புளியால் அருகே பருத்தியூர் கண்மாய் அருகில் அவர் சென்றபோது, பருத்தியூரை சங்கையா(50) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சங்கையா மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பிரேம்குமார் மற்றும் சங்கையா பலத்த காயமடைந்தனர். இதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் சங்கையாவை மீட்டு சிகிச்சைக்காகவும், பிரேம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது தொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், முத்துராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி அருகே கழுத்தை அறுத்து பெண்ணை கொடூரமாக கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் ரோட்டில் உள்ளது தேத்தாம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பலமூர்த்தி. இவரது மனைவி சாந்தி (வயது 32). இவர்களுக்கு 8 வயதில் சந்தோஷ் என்ற மகன் உள்ளான். இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    அம்பலமூர்த்தி வெளி நாட்டில் வேலை பார்த்து வருவதால் சாந்தி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் தனி அறையில் மகனுடன் சாந்தி தூங்கினார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தனர். தாய்-மகன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்ற அவர்கள் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தனர். இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.

    இதைத் தொடந்து அந்த கும்பல் சாந்தியின் கழுத்தை கத்தியால் அறுத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சாந்தி இறந்தார். பின்னர் அந்த கும்பல் சாந்தியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை மட்டும் திருடினர். அருகில் மயக்க நிலையில் தூங்கிக்கொண்டிருந்த சந்தோஷை எதுவும் செய்யாமல் அங்கிருந்து தப்பியது.

    இன்று காலை மயக்கம் தெளிந்து எழுந்த சந்தோஷ் அருகில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறினான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான் சாந்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நகையை திருடும் நோக்கத்தில்தான் மர்ம நபர்கள் சாந்தியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவர்களில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிடுவதில் பிரச்சினை நிலவி வருகிறது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் நீரை பங்கிடுவது தொடர்பாக வாரியம் அமைக்க உத்தரவிட்டது.

    ஆனால் மத்திய அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்றுடன் வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    சிவகங்கை நகரில் இன்று காலை பாலா என்பவரின் தலைமையில் வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 8 பேர் நகரின் தெப்பக்குளம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதே கட்சியைச் சேர்ந்த மற்ற 8 பேர் பஸ் நிலையம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் அங்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

    இதைத் தொடர்ந்து வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 16 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வாழ்வுரிமை கட்சியினரின் திடீர் தற்கொலை மிரட்டலால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக நேற்று இரவும் இதே 16 பேர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    திருப்பத்தூர் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சொக்காலை கோட்டையை சேர்ந்தவர் செழியன் (வயது 48). இவர் காரைக்குடியில் மர வியாபாரம் செய்து வந்தார்.

    தொழில் வி‌ஷயமாக சில நாட்களுக்கு முன்பு செழியன் தனது நண்பர்கள் முருகன் (46), கண்ணன் என்ற கணேசன் (44) ஆகியோருடன் காரில் கோவைக்கு சென்றார். நேற்று 3 பேரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இரவு 11 மணி அளவில் கார் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரின் உள்ளே இருந்த செழியன், முருகன், கண்ணன் ஆகிய 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    உடனே அப்பகுதி மக்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் சிக்கிய 3 பேரையும் போராடி மீட்டனர். பின்னர் அவர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செழியன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரின் நிலைமை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தேவகோட்டையை சேர்ந்த சத்யராஜிடம் என்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    தேவகோட்டை அருகே உள்ள உருவாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சொர்ணமணி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    திருவேகம்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #Tamilnews
    சிவகங்கையில் காதலிக்க வற்புறுத்தி மாணவிக்கு மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா வீளனேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் கமலி (வயது 16). இவர் சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (23), கார் டிரைவராக உள்ளார். கமலி பள்ளிக்குச் செல்லும் போது கண்ணன் அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

    கமலி அவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், ‘என்னிடம் உள்ள செல்போனில் நாம் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற படம் உள்ளது. நீ என்னை காதலிக்க மறுத்தால் அதனை பேஸ்புக் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவேன்’ என்று மிரட்டினார்.

    நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கமலி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் (பொ) வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கண்ணனை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. #tamilnews

    காதலித்து ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அன்வர் ராஜா எம்.பி. மகன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது 35). தொழில் அதிபரான இவர் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி தன்னை காதலித்து தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாகவும், அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார்.

    இந்த சர்ச்சைக்கு மத்தியில் நாசர் அலிக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதனை தடுக்க ரொபினா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.



    இதையடுத்து, ரொபினா காரைக்குடி காவல் நியைத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி, ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில்  நாசர் அலி மீது, காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    சென்னை பெண் தொழில் அதிபரை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக அன்வர்ராஜா எம்.பி. மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சென்னை மடிபாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது33). தொழில் அதிபரான இவர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    இவரும், ராமநாதபுரம் அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் நாசர் அலியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

    இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ரொபினா திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார். திருமண மண்டபத்திற்கு சென்ற அவர் அழுது புரண்டு போராட்டம் நடத்தினார். ஆனால் பலன் அளிக்கவில்லை.



    இந்த நிலையில் அவர் நாசர்அலி மீது காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி நாசர் அலி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டார். அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் பணத்தை திருப்பிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் பெண் என்றும் பாராமல் என்னை நாசர்அலி கொடுமைப்படுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து அன்வர் ராஜா எம்.பி. மகன் நாசர்அலி மீது கொலை மிரட்டல், பெண் கொடுமை, பெண்ணை ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ×