என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து தீ வைத்துச் சென்ற கொள்ளையர்கள்
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, ராம்நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் அதே பகுதியில் சைக்கிள் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சேலத்திற்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை பாலசுப்பிரமணியன் வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் தேவகோட்டை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ் பெக்டர் எர்சாத் ஆகியோர் நடத்திய விசாரணையில் பாலசுப்பிரமணியன் வீட்டில் நள்ளிரவில் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பதும் நகை, பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்துச் சென்றதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுகள் நடந்து வருவதால் பாலசுப்பிரமணியன் சேலத்திற்கு செல்வதற்கு முன் வீட்டிலேயே நகையை மறைவான இடத்தில் வைத்துச் சென்றுள்ளார்.
இதை அறியாத கொள்ளையர்கள் நகை, பணம் கிடைக்காத விரக்தியில் தீ வைத்தனர்.
பாலசுப்பிரமணியனின் சமயோஜித புத்தியால் அவரது நகைகள் தப்பின.






