search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி மாறியிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி
    X

    ஆர்.என்.ரவி               கே.எஸ்.அழகிரி

    ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி மாறியிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி

    • ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆளுநரின் உரை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே பல்வேறு சந்தேகங்களை எனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியது நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

    உளவுத்துறை அமைப்பின் தலைவராக இருந்த ஆர்.என்.ரவி, பா.ஜ.க. அரசால் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பது வெளிப்பட்டுள்ளது.

    ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டது முதல் தமிழக அரசின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

    சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையே தான் கூறுகிறது. நாட்டின் வளர்ச்சியைப் போல ஆண்மிக வளர்ச்சியும் அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சி என்று கூறியதோடு நிற்காமல், "சனாதன தர்மத்தினால் தான் இந்தியா ஒளிர்கிறது" என்று வகுப்புவாத, பிற்போக்குத்தனமான கருத்துகளை அப்பட்டமாகக் கூறியிருக்கிறார்.

    இதன்மூலம் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறியிருக்கிறார். அவரது உரை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. மதச்சார்பற்ற கொள்கையைக் குழிதோண்டி புதைக்கிற வகையில் சட்டவிரோதமாக ஒரு ஆளுநரே பேசியிருப்பது வன்மையான கண்டத்திற்கு உரியது.

    அமைச்சரவைக் குழுவின் உதவி மற்றும் அறிவுரைகளின்படி ஆளுநர் பணியாற்ற வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

    ஆனால், தமிழக அரசால் அனுப்பப்பட்ட 46 மசோதாக்களை உரிய முடிவெடுக்காமல் ஆளுநர் மாளிகையிலேயே முடக்கி வைக்கிற ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் நடத்த வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கும் மட்டும் விரோதி அல்ல. அரசமைப்புச்சட்டத்திற்கும் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் விரோதமாகச் செயல்பட்டு, அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்வது வருவதை எவரும் அனுமதிக்க முடியாது. வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகிற கருத்துகளை ஆர்.என்.ரவி கூறுவதை இனியும் நிறுத்தவில்லையெனில் அவருக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×