search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட விவசாயத்திற்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
    X

    மணிமுத்தாறு அணை

    தூத்துக்குடி மாவட்ட விவசாயத்திற்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரமாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது.
    • தூத்துக்குடி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரமாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது.

    தூத்துக்குடி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓட்டப்பிடாரம் பகுதியில் லேசான மழை பெய்தது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. அங்கு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.கடந்த 2 நாட்களாக கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று விட்டு விட்டு சாரல் பெய்தது. கழுகுமலையில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டர் மழை ெபய்தது.

    குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 2.6 மில்லிமீட்டரும், சங்கரன்கோவிலில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலையில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.

    குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு இதமான காற்றுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறில் 12.8 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மருதூர் மேலக்கால், கீழக்கால், தெற்கு மற்றும் வடக்கு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு இன்று முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் 30 நாட்களுக்கு மொத்தம் 2073.60 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×