என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டசம்பவத்தில், தகராறில் ஈடுபட்டதால் அடித்து கொன்ற சித்தப்பா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). அவரது குடும்பத்தினரும், அவரது சித்தப்பா பழனியப்பன் குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். வீரபத்திரன் இரவு நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள ரகுபதி என்பவருக்கு சொந்தமான குடிசையில் தங்கி வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய வீரபத்திரன் பலருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீரபத்திரன் சாப்பிட்டு விட்டு, குடிசையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று காலை பழனியப்பன் குடும்பத்தினர் பார்த்தபோது, வீரபத்திரன் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வீரபத்திரனை கொலை செய்த வழக்கில் அவரது சித்தப்பா பழனியப்பன் (42), உறவினர் ரவிச்சந்திரன் (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் பின் வருமாறு:- சம்பவத்தன்று இரவு வீரபத்திரன், குடிசையில் வழக்கமாக தூங்கும் இடத்தில் தூங்கினார். அப்போது நாங்கள் 2 பேரும் அங்கு சென்று தூங்கி கொண்டிருந்த வீரபத்திரனை எழுப்பி, ஏன் இப்படி குடித்து விட்டு பலருடன் தகராறு செய்கிறாய் என்று கேட்டோம். அப்போது வீரபத்திரனுக்கும் எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் வீரபத்திரனை முகம் சிதையும் அளவிற்கு அடித்தோம். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம், என்று தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  
    கறம்பக்குடி அருகே உள்ள வாண்டான் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் நாட்டை சேர்ந்த வாண்டான்விடுதியில் முத்துகருப்பையா, முத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நிறைவுபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து நேற்று காலை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதைபோல மாடுபிடி வீரர்களையும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்க முன்வரவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 604 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து சென்றன. அதனை 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் இளம்பரிதி, அழகர்சாமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, குக்கர், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, ரொக்கப்பரிசு உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், கறம்பக்குடி, வாண்டான்விடுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    அறந்தாங்கி அருகே நள்ளிரவில் மது குடிக்கும் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவையில் தங்கியிருந்து வீடுகளுக்கு சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் கூரை அமைக்கும் பணி செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்ததால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்தார்.

    வழக்கமான ஆமாஞ்சி கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை மற்றும் விவசாயம் பார்த்து வந்ததால் இரவு 8 மணிக்கே அனைவரும் தூங்க சென்று விடுவார்கள். அதேபோல் நேற்று இரவு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிவக்குமார் குடும்பத்தினரும் தூங்க சென்றனர்.

    வீரபத்திரனும் சாப்பிட்டு விட்டு வீட்டு முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சிவக்குமார் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது அங்கு வீரபத்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் காணப்பட்டது.

    அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் 2 மது பாட்டில்கள், அதனை குடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் கப்புகள் கிடந்தன. எனவே நள்ளிரவில் வீரபத்திரன் மற்றும் சிலர் அந்த இடத்தில் மது அருந்தியிருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் வீரபத்திரனை கொடூரமாக கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வீரபத்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    வீரபத்திரன் மது குடிக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது முன் விரோதம் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபடிவங்கள் கடந்த 11-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த விண்ணப்பம் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவிகள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் வருகிற 29-ந் தேதி வரை வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை வினியோகம் செய்யப்படும். இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி மாணவிகள் பெற்று கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மாணவிகள் தங்களது சாதிசான்றிதழ்் நகலினை சமர்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குவிந்தனர். இதனால் மன்னர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்களை வாங்க மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியிலும் மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    மன்னர் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணி வரையிலும், அரசு மகளிர் கலை கல்லூரியில் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அந்தந்த கல்லூரியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியில் பிரசித்தி பெற்ற முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகிகள் வாடிவாசலை பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக அங்கு கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், தேனி, மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 1018 காளைகளும், வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 241 மாடுபிடி வீரர்களும் அடக்க போட்டி, போட்டனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. மேலும் சில காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக் கட்டினர். அதனை பார்த்த பொதுமக்கள், இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டை காண வந்த பார்வையாளர்கள் 4 பேர் மற்றும் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் ஒருவர் என 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயங்கள், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், மிக்சி, குக்கர் உள்பட பல்வேறு பரிசு வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டை ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தாசில்தார் ரெத்தினாவதி, வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசேவியர், அரசு அதிகாரிகள் மற்றும் ஆலங்குடி, பாப்பான்விடுதி சுற்றுவட்டார கிராமபொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் உள்பட ஏராளமான போலீசார் செய்திருந்தனர். 
    கீரனூரில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
    கீரனூர்:

    திருச்சி மறை மாவட்டம்  கீரனூர் மறை வட்டத்தில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. 

    தமிழக ஆயர் பேரவையின் தலைவரும், மதுரை உயர் மாவட்ட பேராயருமான டாக்டர் அந்தோணி பாப்புசாமி ஆலயத்தை திறந்து வைத்து புனித நீரால் ஆசீர்வதித்தார். அதன்பின் பங்கு மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர். பின்னர் திருப்பலி நடந்தது. 

    நிகழ்ச்சியில் திருச்சிமறை மாவட்ட முதன்மை குரு யுஜின் அடிகளார் மற்றும் பல குருக்கள், கன்னியாஸ்திரியர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை, மறை மாவட்ட அதிபர் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர். 
    கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் ஊழியர் வீட்டில் ரூ.3 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). அரசு போக்குவரத்து கழகக்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சுமதி(40), மகன் கதிர்வேல் (21) மட்டும் இருந்தனர். இரவு இருவரும் வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு தூங்கினர்.

    இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமாக சென்று ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கினர். பின்னர் பீரோவைத்திறந்து அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். இதையடுத்து தூங்கி கொண்டிருந்த சுமதி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினையும் பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து விழித்தெழுந்த சுமதி சத்தம் போடவே, கதிர்வேல் எழுந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 12 லட்சம் இருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி ஆதனக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மன்னர் மன்னன், சப்- இன்ஸ்பெக்டர் காஜாமைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மூலம் அங்கு சோதனை நடத்தப்பட்டது.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளி கோடை விடுமுறைக்காக அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை அந்த சிறுமி தனது பாட்டி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாண்டியன் (வயது 40) என்பவர் அந்த சிறுமி அருகே வந்து பேசியுள்ளார்.

    பின்னர் நுங்கு வாங்கி தருவதாக கூறி அந்த சிறுமியை ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி வலி தாங்காமல் தனது பாட்டியில் கூறி அழுதுள்ளார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பாட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தார். இதுபோன்று சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை தரும் காமுகர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங் குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங் குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வீராச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை அரசியல் விளக்கவுரையாற்றினார். அவரிடம் கிளையின் சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.25ஆயிரம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணி, சித்திரைவேல், பன்னீர் செல்வம், இளையராஜா, சங்கிலிமுத்து, மில்லர், நாராயணசாமி, கிளைச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். பொதுக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய செல்போன் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காமராஜர் பல்கலைக்கழகம், தேவாங்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை, நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வந்து விசாரணை நடத்தியது.


    துறைத்தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என 36 பேரிடம் இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இரவு 7.30 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் இன்று 2-வது நாளாக மீண்டும் பல்கலைக்கழகம் சென்று விசாரணை நடத்தினர்.

    நிர்மலாதேவிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உள்ள தொடர்பு, உயர் அதிகாரிகளுடன் தொடர்பு என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தரப்பு வக்கீலாக சிறப்பு அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மணமேல்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அவதி அடைந்தனர். இதனால் மணமேல்குடி பகுதியில் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு ஆகியவற்றின் விற்பனை அமோக நடந்து வந்தது. மேலும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், கட்டுமாவடி, காரக்கோட்டை, தினையாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இந்தநிலையில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழையால் வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய ஏற்றதாக இருந்தது. மேலும் இந்த பலத்த மழையால் அதிகாலையில் மீன்பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு பின்வருமாறு:- 

    மீமிசல்-1.20, ஆவுடையார்கோவில்-8.20, மணமேல்குடி-45, கட்டுமாவடி-12. 
    அடிப்படை வசதிகள் கேட்டு புதுவளசல் கிராமமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில் தி.மு.க.வினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோவில்பட்டி பகுதியில் நகராட்சியின் பராமரிப்பில் சுடுகாடு மற்றும் மயான கொட்டகை இருந்து வந்தது. இதில் தற்போது மயான கொட்டகையை காணவில்லை. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நாங்கள் மனு அளித்து இருந்தோம். ஆனால் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இனியாவது எங்களுக்கு புதிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கறம்பக்குடி தாலுகா புதுவளசல் கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் தேவைக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும். பஸ் நிறுத்தம் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தனியாக நியாய விலைக்கடை அமைத்துத்தர வேண்டும். புதுவளசல் ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் மண்சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். மேலும் குறைந்த மின்அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், காயம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் இருந்து காலை 10 மணிக்கு மேல் எந்த பஸ்சும் இயக்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் புதுக்கோட்டைக்கு வர வேண்டுமானால் காயம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவரங்குளத்திற்கு நடந்தே சென்று, பின்னர் பஸ் ஏறி புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கூறியிருந்தனர். 
    ×