search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking dispute"

    குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தாய் போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவரது மகன் கருப்பையன் (வயது 39).

    கூலி தொழிலாளியான கருப்பையனுக்கு வேம்பரசி என்ற மனைவியும், ஹரி ஹரன் (15), கலையரசன் (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    கருப்பையன் அடிக்கடி மது குடித்து விட்டு தனது தந்தை கரும்பாயிரம், தாய் மாரியம்மாள்(65) மற்றும் மனைவி வேம்பரசி ஆகியோரிடம் தகராறு செய்து வந்தார்.

    இதேபோல் கடந்த பொங்கல் பண்டிகை அன்று கருப்பையன், வேம்பரசியிடம் வழக்கம் போல் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன்களை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கருப்பையன் மது குடித்து விட்டு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தந்தை கரும்பாயிரம், தாய் மாரியம்மாள் ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

    ஒரு கட்டத்தில் போதையில் மாரியம்மாளை அடிக்க பாய்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள், அருகே கிடந்த கம்பை எடுத்து கருப்பையனின் தலையில் பலமாக ஓங்கி அடித்தார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து மாரியம்மாள் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை சரண் அடைந்தார். போதையில் மகன் தகராறு செய்ததால் கொலை செய்து விட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கருப்பையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மகனை அடித்து கொன்று சரண் அடைந்த தாய் மாரியம்மாளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெற்ற மகன் என்றும் பாராமல் தாயே அடித்து கொன்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி அருகே நள்ளிரவில் மது குடிக்கும் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவையில் தங்கியிருந்து வீடுகளுக்கு சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் கூரை அமைக்கும் பணி செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்ததால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்தார்.

    வழக்கமான ஆமாஞ்சி கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை மற்றும் விவசாயம் பார்த்து வந்ததால் இரவு 8 மணிக்கே அனைவரும் தூங்க சென்று விடுவார்கள். அதேபோல் நேற்று இரவு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிவக்குமார் குடும்பத்தினரும் தூங்க சென்றனர்.

    வீரபத்திரனும் சாப்பிட்டு விட்டு வீட்டு முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சிவக்குமார் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது அங்கு வீரபத்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் காணப்பட்டது.

    அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் 2 மது பாட்டில்கள், அதனை குடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் கப்புகள் கிடந்தன. எனவே நள்ளிரவில் வீரபத்திரன் மற்றும் சிலர் அந்த இடத்தில் மது அருந்தியிருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் வீரபத்திரனை கொடூரமாக கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வீரபத்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    வீரபத்திரன் மது குடிக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது முன் விரோதம் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×