என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கனமழை காரணமாக புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #TNRains #IMD #SchoolsHoliday
    புதுக்கோட்டை:

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.



    கனமழை காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #TNRains #IMD #SchoolsHoliday
    புதுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் முகமது ஜாவுதீன். காங்கிரஸ் பிரமுகரான இவர் தனது வீட்டை பூட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான குடும்பத்தினருடன் சென்றிருந்தார். தனது மகளை மட்டும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றார். 

    இந்த நிலையில் இன்று காலை முகமது ஜாவு தீனின் மகள் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. தனி அறையில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. முகமது ஜாவுதீன் வெளியூர் சென்றதை  நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து முகமது ஜாவுதீனின் மகள் திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
    கீரனூர் அருகே மாடு விரட்டியதில் கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள மங்கதேவன்பட்டியை சேர்ந்த சின்னப்பா என்பவரின் மகள் மீனா (வயது 23). அப்பகுதியில் உள்ள வயலில் வேலைபார்த்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காளைமாடு விரட்டியது. இதில் எதிர்பாராத விதமாக அங்குள்ள 30அடி அகலம், 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் மீனா தவறி விழுந்து விட்டார். 

    கிணற்றுக்குள் குறைந்த அளவு தண்ணீரே கிடந்ததால் லேசான காயங்களுடன் மேலே ஏற முடியாமல் அலறினார்.

    சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் செல்லத்துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் தவித்த மீனாவை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காத அதிகாரிகள் குறித்து அரசிடம் புகார் தெரிவிக்க போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார். #KamalHassan #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அக்கச்சிப்பட்டி, பந்துவக்கோட்டை கிராமங்களில் கஜா புயலால் பாதித்த பொதுமக்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    எங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவிப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காமல் இருப்பது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை பாதிக்கப்பட்ட தனி ஒருவரால் ஈடு செய்ய முடியாது. அதற்கு கண்டிப்பாக பலர் உதவ வேண்டும். புயலின் போது வீடு இழந்த பொதுமக்களை, பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்த நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் நன்றி.

    வகுப்புகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறினை ஏற்படுத்தி கூடாதென்பதற்காகத்தான் பள்ளி வளாகத்திற்குள் வராமல், வெளியே ரோட்டில் நின்று பேசி கொண்டிருக்கிறேன். எனவே பள்ளிக்குள் வராமல் இருந்ததை எவரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக வருகை தர இருந்த கமலுக்காக, பந்துவாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்புறமிருந்த போர்டிக் கோவை கட்சியினர் தற்காலிக மேடையாக மாற்றியிருந்தனர்.

    அந்த பகுதிக்கு வந்த கமல், பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து மாணவர்களின் படிப்புக்கு இடையூறினை ஏற்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளே செல்ல மறுத்து விட்டார். பின்னர் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி அதில் ஏறி நின்று பொதுமக்களிடம் பேசினார். #KamalHassan #GajaCyclone
    தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது என்று கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #Karunas #tamilnadugovt #Centralgovt
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் உள்ள மக்களுக்கு நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்கள் கஜா புயலால் முகாம்களில் அகதிகளாக அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை . எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை . ஆகையால் எனது நண்பர் சார்பில் லண்டனில் இருந்து பொருட்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.


    தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது. கேரளாவுக்கு ஒரு நீதி , தமிழகத்துக்கு ஒரு நீதி என்று பிரதமர் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசனை செய்து வருகிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றேன். ஆனால் அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கமி‌ஷன் பெற்றுக்கொண்டு தான் எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்ற விதி தமிழகத்தில் உள்ளதால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழக அரசை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Karunas #tamilnadugovt #Centralgovt
    புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #MKStalin #Mekedatudam

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.6 கோடி மதிப்பிலான அரிசி, போர்வை, பாய், தண்ணீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபட தமிழக அரசிடம் போதிய வலிமை இருந்ததால் ராணுவத்தின் உதவி தேவைப்படாமல் இருந்து இருக்கலாம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். மேலும் அவர் தானாக முன்வந்து ராணுவ உதவி தேவையென்றால் அனுப்புகிறோம் என கூறியதற்கு நன்றி.

    தற்போது டெல்டா பகுதி மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் எதிர் கட்சியினர் நிவாரணம் கொடுக்கும் பணியில் கவனம் செலுத்தாமல் அண்ணா அறிவாலயத்தில் அரசியல் நடத்துகின்றனர். தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்.

     


    மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தான். கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின் காங்கிரசுடன் உள்ள உறவை முறித்து கொள்வாரா?.

    மேகதாதுவில் அணை கட்ட அ.தி.மு.க. அரசாங்கம் விடாது. இதற்காக தொடர்ந்து அ.தி.மு.க. அரசு போராடும். அ.தி.மு.க.வால் மட்டும்தான் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியும். எங்களிடம் 50 எம்.பி.க்கள் உள்ளனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Mekedatudam

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #NirmalaSitharaman #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம், நாகை, கோடியக்கரை பகுதிகளை நேற்று பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையில் இருந்து காரில் அவர் நேராக நெடுவாசல் கிராமத்திற்கு சென்றார். அங்கு அதிக அளவிலான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா மரங்கள் சாய்ந்தன.

    அதேபோல் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்திருந்தன. அவற்றை பார்வையிட்ட நிர்மலா சீதாராமனிடம் அப்பகுதி மக்கள் தங்கள் மறுவாழ்விற்காக உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் டெல்டா மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்கிறேன். ஏராளமான மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். குறிப்பாக பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டித்தரப்படும், இந்த திட்டத்தின்கீழ் ஏராளமானர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசுக்கு அளிக்கப்படும் பெயர் பட்டியல் படி அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் பெயர்களை மாவட்ட கலெக்டரிடம் தாங்களாகவே கொடுக்க வேண்டும். இதுவரை கொடுக்காதவர்கள் உடனே கலெக்டரை சந்தித்து தகவல்களை கொடுங்கள்.

    தென்னை மரங்கள் சாய்ந்துள்ளது மிகவும் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. தென்னங்கன்று என்ற வார்த்தையை தென்னைக்கு மட்டுமே நாம் குறிப்பிடுகிறோம். வேறு எந்த இடத்திலும் இந்த வார்த்தையை நாம் கூறுவது கிடையாது. முதலில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன் பிறகு தென்னங்கன்றுகள் நடப்படுவதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும். ஆந்திரா, ஒடிசா, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்தும் ராணுவ கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளை மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டு வர நான் நடவடிக்கை எடுப்பேன்.

    தென்னங்கன்றுகள் வளர்வதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் அதன் ஊடுபயிராக கிழங்கு வகைகள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யலாம். அதனை அரசே கொள்முதல் செய்யும்.


    பிரதமர் அறிவிப்பின் படி மத்திய அரசின் நிபுணர் குழு புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளது. அவர்களும் தேவையான உதவிகளை பிரதமரிடம் எடுத்துக்கூறி செய்வார்கள். நானும் பிரதமரிடம் நேரில் தெரிவித்து பல்வேறு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மண்எண்ணை தட்டுப்பாடின்றி கிடைக்க பெட்ரோலியத்துறை மந்திரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள மண்எண்ணையை மாநில அரசு தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்துள்ளன. இதனால் நகர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதை நான் கண்கூடாக பார்த்தேன். மின் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசும் தேவையான முயற்சிகளை செய்து வருகிறது. நாகப்பட்டினத்தில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் என்னை நேரில் சந்தித்து சீரமைப்பு பணிகள் குறித்து விபரங்களை தெரிவித்தார்.

    அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மின் சப்ளை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் தான் நாட்டிற்கே நெற்களஞ்சியம் ஆகும். நாடு பஞ்சமில்லாமல் இருக்க டெல்டா விவசாயிகள் தான் காரணம். எனவே இந்த பாதிப்பை கண்டு மனம் தளர்ந்து விடக்கூடாது. யாரும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.

    உங்களுக்கு கேள்வி கேட்க உரிமைகள் உண்டு. ஏன் வரவில்லை என்று நீங்கள் கேட்கலாம். கஷ்டமான இந்த சூழ்நிலையில் உங்களின் கேள்வி நியாயமானதுதான். ஏற்கனவே இங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்து ஆய்வு செய்திருக்கிறார். அவர் என்னை விட மூத்தவர்.

    தைரியமாக இருங்கள். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்னும் காப்பீட்டு தொகையை செலுத்தாதவர்களுக்கு மாநில அரசே அந்த தொகையினை செலுத்திவிட்டு, அதன் பின்னர் காப்பீட்டு தொகை வரும்போது பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #BJP #NirmalaSitharaman #GajaCyclone
    மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை என்று சரத்குமார் தெரிவித்தார். #MekedatuDam
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தபோது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேரில் வந்து பார்த்த போது உண்மையான சேத விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பணிகள் செய்து வருகிறது.

    அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. தமிழக அரசு தாங்களால் இயன்ற அளவு செய்து உள்ளது. மத்திய அரசிடம் இருந்து அதிக அளவு நிதி வாங்கி, இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும். அரசை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.


    மேகதாது அணை பிரச்சனை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. தற்போது மத்திய அரசு ஆய்வுக்காக அனுமதி அளித்து உள்ளது வருத்தம் அளிக்க கூடிய செயல். அதற்காக அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று ஆய்வறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் உண்மை நிலையை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை மீண்டும் ஒரு ஆய்வு நடத்தி அதில் என்னென்ன கூறப்பட்டு உள்ளது. அதை மூடுவதற்கு என்னென்ன செய்யலாம் என தமிழக அரசு முடிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #Sarathkumar #AllpartyMeeting
    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் அதிக அளவிலான பாதிப்புகளை தாங்கி நிற்கும் குக்கிராமங்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

    100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர், மின்சாரம், உணவு, உடை இருப்பிடம் இன்றி பலர் தவித்து வருகிறார்கள். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் பல இடங்களில் வெளி யேற்றப்பட்டு வருகிறார்கள். நிவாரண பொருட்களை எதிர்பார்த்து பல இடங்களில் பொதுமக்கள் சாலைகளில் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.

    இந்த நிலையில் மழை சற்றே ஓய்ந்து நிவாரண பணிகள் சூடுபிடித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந் தர்வக்கோட்டை, கல்லாக்கோட்டை, வேளாடிப்பட்டி, புதுநகர், விரடிப்பட்டி, கீர னூர், அரிமளம், ஆவுடையார் கோவில், அன்னவாசல், விரா லிமலை, இலுப்பூர் மற்றும் கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெக தாப்பட்டினம், மீமிசல், மணல்மேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

    இன்று காலை மீண்டும் கன மழையாக பெய்து வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவு மழை பெய்வதால் அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    அதேபோல் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கந் தர்வக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி ஆகிய இடங்களில் கன மழையால் கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அவர்களுக்கான முகாம்களிலேயே முடங்கியுள்ளனர்.

    குக்கிராமங்களுக்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் புயலால் விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்பபடாமல் உள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன. இதனால் குக்கி ராமங்களில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட முடியவில்லை.

    பல இடங்களில் வீடுகளை இழந்த பொதுமக்கள் கொட்டும் மழையிலும், பனியிலும் அவதிப்பட்டனர். அவர்கள் தற்காலிகமாக தார்ப்பாய் களை வாடகைக்கு எடுத்து அதயை மேற்கூரையாக்கி தங்கியுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. கொட்டும் மழையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நனைந்தவாறு சென்றனர். பெரிதும் அவதிப்பட்ட பலர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவில்லை. இதேபோல் வேலைக்கு செல்பவர்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    புதுக்கோட்டை-18, ஆலங்குடி-19, கந்தர்வக்கோட்டை-15, கறம்பக்குடி -26.60, திருமயம்-18.60, அறந்தாங்கி-4, ஆவுடையார் கோவில்-17.20, மணல் மேல்குடி-18, இலுப்பூர்-9, பொன்னமராவதி-4. அனைத்து பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 161.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி பாடாலூர் மற்றும் புதுவேட்டக்குடியில் 2 மி.மீ. மழை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 4 மி.மீ. மழையும், சராசரியாக 0.36 மி.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் மேகமூட்டத்துடன் இதமான குளிர் காற்றுவீசி வருகிறது.

    கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. காலை 9 மணிக்கு மேலும் சூரிய உதயம் தென்படவில்லை. நேற்றிரவு இரவு கடும் குளிர்காற்று வீசியது. குளித்தலை பகுதியில் 1 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜெயங்கொண்டத்தில் அதிகபட்டசமா 38.2 மி.மீ மழையும், திருமானூர் 19.04 மி.மீ, அரியலூரில் 15 மி.மீ மழையும், செந்துறை பகுதிகளில் 5.02 மி.மீ மழையும் பெய்துள்ளது.

    திருச்சி மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, தொட்டியம், சமயபுரம், திருச்சி நகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்க கோரி 10 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் கந்தர்வக்கோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமம் பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நிவாரண பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் கந்தர்வக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதேபோல் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உடையார்தெரு, பெரிய கடைவீதி, சின்ன அரிசிக்கார தெரு மற்றும் குமரன் காலனி, இந்திரா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வக் கோட்டை நகரத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கந்தர்வக்கோட்டை தாசில்தார் நேரில் வந்து நிவாரண பொருட்கள் வழங்க உறுதியளிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். ஆனால் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை முறையாக அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் பிரித்து வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டை கிராமத்தில் புயலால் குடிநீர், மின்சாரம் வழங்ககோரி ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வடவாளம் காலனி பொதுமக்கள் குடிநீர் கேட்டு புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி சுற்று வட்டார கிராம பகுதியில் கஜா புயல் காற்றில் அதிக அளவில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்களும் சேதம் அடைந்துள்ளன. சீரமைக்கும் பணியில் மின்சாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் காற்று வலுவிழந்து 13 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும், எங்கள் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    உடனே எங்கள் கிராமத்திற்க்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என கோரி அறந்தாங்கி அடுத்துள்ள கூத்தங்குடி பகுதி பொதுமக்கள் கட்டுமாவடி சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதேபோல் அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அரிமளம் ஒன்றியம் செங்கீரையில் மின்வினியோகம் செய்யபடாததை கண்டித்து பொதுமக்கள் செங்கீரையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசில் பழனி தெருவில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் அரிமளம் சிவன்கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    கறம்பக்குடி அருகே குரும்பிவயல் கிராமத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். கஜாபுயலின் தாக்குதலால் அந்த கிராமத்தில் இருந்த அனைத்து குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

    இதனால் குடிநீர், மின்சாரம் இன்றி பல நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஜெனரேட்டர் மூலமும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தனி தீவாக உள்ள இந்த கிராமத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரும்பிவயல் பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அண்டக்குளம் அடுத்துள்ள கொப்பம்பட்டியில் கஜா புயலால் மரங்கள், மின் மாற்றிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த தண்ணீரையும் நிறுத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு கொப்பம்பட்டி-செங்கிபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடிகர் சரத்குமார் சென்ற காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #Sarathkumar
    ஆலங்குடி:

    தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து சாலைக்கு தள்ளப்பட்டனர்.

    புயலால் வீடுகளை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், புயலால் சேதமடைந்த மக்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி, பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நேரில் சென்று சந்திப்பதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று காலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றார்.

    ஆலங்குடி அரசமரத்தடி பஸ் நிறுத்தம் அருகே சரத்குமார் காரில் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நடிகர் சரத்குமாரின் காரை முற்றுகையிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கி சரத்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


    அப்போது பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகா பகுதியில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் தங்கள் பகுதிகளுக்கு வராமல் அலட்சியம் செய்கின்றனர். பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை.

    புயல் பாதித்த சேதத்தில் இருந்து மீள முடியாமல் தற்போது வரை தவித்து வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி தங்கள் பகுதிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் சேதமடைந்தவற்றை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என முறையிட்டனர்.

    பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் நடிகர் சரத்குமார், பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.  #GajaCyclone #Sarathkumar
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழு, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் கண்துடைப்புதான் என்று தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #TTVDhinakaran #EdappadiPalaniswami
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மக்களை சந்திக்க வரவில்லை. மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். இதனால்தான் புயல் பாதித்த பகுதி மக்களை சந்திக்க முதல் -அமைச்சர் வந்துள்ளார்.

    தற்போது முதல்- அமைச்சர் நாகை, திருவாரூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்வது, மத்திய குழுவும், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கையும் கண்துடைப்புதான். மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும்.

    மத்திய குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து அவர்கள் நிவாரண தொகை அறிவிப்பதற்குள் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். தமிழக அரசு இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் கட்டாயமாக 8 இடங்களில் வெற்றி பெறவேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால் ஆட்சி போய் விடும் என்ற பயத்தில் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுடன் வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தத் தேர்தலிலும் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் உள்ளனர். மேகதாதுவாக இருக்கட்டும், ஸ்டெர்லைட் ஆலையாக இருக்கட்டும் தமிழக அரசு கோட்டை விடும்.

    வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் பொழுது முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்ப்பார். பல்வேறு வி‌ஷயங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும், கஜா புயல் தாக்கத்திற்கு ட்விட்டரில் கூட எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வந்த டி.டி.வி தினகரன் இச்சடியில் ராணிரமாதேவியை சந்தித்து ஆசிபெற்றார்.

    இதேபோல் டி.டி.வி.தினகரன் கறம்பக்குடி, ஆலங்குடி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். #GajaCyclone #TTVDhinakaran #EdappadiPalaniswami
    ×