என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 30). இவரது நண்பர்கள் புத்தாம்பூர் கார்த்திகேயன் (25), லேணா விலக்கு செல்வ கணபதி. 3 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அறந்தாங்கி அருகே இவர்களின் கல்லூரி நண்பர் சந்திரசேகரன் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 பேர் நேற்று இரவு காரில் சென்றனர். மீண்டும் அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்களது கார் புதுக்கோட்டையை அடுத்த குளவாய்பட்டி அருகே வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த பஷீர் அகமது, கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்கு சிக்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் பயணம் செய்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க வீட்டுக்கு சென்று திரும்பிய போது நண்பர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் குன்றாண்டார்கோவில் உதவி தொடக்ககல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி (வயது50). இவர் ஆலங்குடி அருகேயுள்ள ஆலங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் மலர் விழி மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மலர்விழி பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு கோர்ட்டு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்து மத கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு வகுத்துள்ள சட்ட விதிமுறைகளின் படி நிர்வாகம் நடக்கிறதா? என்பதை மட்டும் தான் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். அதனை விட்டு விட்டு புதிதாக சட்டம் இயற்றுவதற்கு கோர்ட்டுக்கு எந்த உரிமையையும் வழங்கப்படவில்லை.

இதனால் திருமாவளவனுக்கு அச்சம் ஏற்பட்டதால், அந்த பழியை பா.ஜ.க. மீது சுமத்தி வருகிறார். பா.ஜ.க. வை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலிலும் மோடி தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வேண்டுமென்றே பா.ஜ.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றிய பின்புதான் ஜாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆணவ படுகொலைகளும் அதிகரிக்க தொடங்கியது. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். திராவிட இயக்கங்களின் அஸ்தமனத்தில் தான் புதிய தமிழகம் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Thirumavalavan #MKStalin
புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்தனர்.
மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணியின்போது மின்சார ஊழியர்கள் விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் ஆங்காங்கே அறுந்து கிடந்த மின்கம்பிகளாலும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரையப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மனைவி சுசீலா (வயது 50). அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சக்தி (25). இவர்கள் இருவரும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது வழியில் புயலால் சேதமான மின் வயர்கள் அறுந்து கிடந்தன.
அந்த வயர்கள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கடந்த 25 நாட்களாக கிடந்தது. மின் சப்ளை இல்லாததால் அந்த மின்வயர்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி அந்த வழியாக சென்று வந்தனர்.
அதுபோல் இன்று காலை சுசீலாவும், சக்தியும் மின் வயர்களை அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அங்கு ஒரு சில பகுதியில் மின் சீரமைப்பு பணிகள் முடிவுற்று மின் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்திருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு கோரிக்கை விடுத்தனர். #Electricattack
‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்து தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு சேத விபரங்கள் துல்லியமாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஏற்கனவே 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தற்போது 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. குக்கிராமங்கள் மற்றும் விவசாய மின் இணைப்புகளை 100 சதவீதம் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கூறுகையில், அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்க வேண்டியது அரசின் கடமை. அவர்களின் கோரிக்கையை முடிந்த அளவுக்கு அரசால் செய்து கொடுக்க வேண்டும். அல்லது சொந்த முயற்சியால் அதை நிறைவேற்றித்தர வேண்டும். முடியவில்லை என்றால் அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின் போது என்னுடைய காரை யாரும் மறிக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத் தில் 95 சதவீதம் மீட்பு பணிகள் முடிந்து உள்ளது. குறிப்பாக மின்சாரம் 95 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 சதவீதம் பணிகள் 2 அல்லது 3 நாட்களில் முடிவடையும். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் நான் சென்னை செல்வேன்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் இருந்து புதுக்கோட்டை விரைவாக மீண்டதற்கு அரசு மற்றும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பணியாற்றியது தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Vijayabaskar
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை அருகே தோப்புவயல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் ஆ.குடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 35) சூபர்வைசராகவும், அவரது சகோதரர் செந்தில்குமார் மற்றும் நவக்குடியை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு விற்பனை பணம் ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 300-ஐ எடுத்துக்கொண்டு ஊழியர்கள் புறப்பட்டனர். இதில் கண்ணன், செந்தில்குமார் ஒரு மோட்டார்சைக்கிளிலும், காளிதாஸ் மற்றொரு வாகனத்திலும் சென்றனர்.
அப்போது அந்த கடை அருகே 4 பேர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் அளவுக்கு அதிகமான போதையில் இருப்பது போன்று தள்ளாடியபடி வந்தார். திடீரென கீழே தவறி விழுந்தார். அவரை தூக்குவதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே சென்றனர்.
அப்போது போதை ஆசாமியுடன் வந்த 3 பேரும் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர். அவர்களை தடுத்த போது கண்ணனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். இதிலிருந்து தப்பிய கண்ணன் கடைக்குள் செல்ல தலைதெறிக்க ஓடினார். அப்போது கும்பலை சேர்ந்த ஒருவன் கண்ணனின் காலில் அரிவாளால் வெட்டினான். இதில் தவறி விழுந்த அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.
இதில் அந்த பையில் இருந்த சில பணக்கட்டுகள் கீழே விழுந்தன. மீதமிருந்த ரூ.16 லட்சம்து 60 ஆயிரத்து 150 பணத்துடன் 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. கொள்ளையர்கள் தவற விட்டதில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 150 பணம் தப்பியது. படுகாயம் அடைந்த கண்ணனை மற்ற ஊழியர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த துணிகர கொள்ளை குறித்து மணல்மேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.
இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை , அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடை விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. சிதலமடைந்த சாலை பகுதிகள் சகதியாக மாறியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. குடிசை வீடுகள் சேதமானதால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். மின்சாரம், குடி நீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழையால் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மின்கம்பங்கள் சீரமைப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மழை பெய்து கொண்டிருந்த போதிலும் மின் ஊழியர்கள் அதனை பொருட்படுத்தாமல் தங்கள் பணியை தொடர்ந்தனர். ஆனாலும் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் அந்த பகுதிகளுக்கு மின் கம்பங்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று பெய்த மழையாலும் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
புயலால் சேதமடைந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பொதுமக்கள் தொடர்ந்து தங்கியிருந்து வருகின்றனர். வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகியதால் அவர்கள் கடும் அவ திக்குள்ளாகினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
புதுக்கோட்டை-30, ஆலங்குடி-34, கந்தர்வக்கோட்டை-7, கறம்பக்குடி-29, திருமயம்-16.20, அறந்தாங்கி -22.40, ஆவுடையார்கோவில் -26.40, மணல்மேல்குடி-39, இலுப்பூர்-62, குளத்தூர்-7.60, பொன்னமராவதி-15.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 288.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். கஜா புயலில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமாகின.
50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காணாமல் போயின. சேதமான மற்றும் காணாமல் விசைப்படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு இன்னும் விசைப்படகு மீனவர்கள் பலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்கள் புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். தற்போது அந்த மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விற்பனை பாதிக்கும் என்பதால் கடலுக்கு இன்னும் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர். நாளை முதல் அவர்கள் மீண்டும் மீன் பிடிக்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் மகன் மற்றும் 3 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் தமிழரசி (வயது 24).
அண்ணாத்துரைக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் தென்னை, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக தமிழரசியும் விவசாய பணியில் ஈடுபட்டு வந் தார். மரங்களை வளர்த்து அதன் மூலம் அண்ணாத்துரை தனது மகன், மகள்களின் திருமணத்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் கஜா புயலிபோது அண்ணாதுரை விவசாய தோட்டத்தில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. நீண்ட நாட்களாக பாதுகாப்பாக வளர்த்த மரங்கள் சாய்ந்ததால் அண்ணாத்துரை, தமிழரசி இருவரும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
மேலும் அண்ணாத்துரை, தமிழரசிக்கு திருமண செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். திருமண செலவுக்கு அவர் வளர்த்து வந்த மரங்களையே நம்பியிருந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தமிழரசி திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று எண்ணியிருந்தார். ஆனால் புயலில் மரங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்து வந்தார்.
நேற்று அண்ணாத்துரையும், அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த தமிழரசி திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர்.
பின்னர் உடலில் பற்றிய தீயை அணைத்து தமிழரசியை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்தார்.
பல ஆண்டுகளாக தான் வளர்த்து வந்த மரங்கள் கஜா புயலால் சேதமானதால் மன வேதனையடைந்து தமிழரசி தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வடகாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஜா புயலால் மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் மனவேதனையடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #WomanSuicide
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் கறம்பக்குடி, மழையூர், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.
தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதிகளில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.
வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் அவர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை எடுக்கப்படும்.
இயற்கை பேரிடரின் போது எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மின் வாரிய ஊழியர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர். #GajaCyclone #Thangamani






