search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac store employee"

    அறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி 4 பேர் கொண்ட கும்பல் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை அருகே தோப்புவயல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் ஆ.குடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 35) சூபர்வைசராகவும், அவரது சகோதரர் செந்தில்குமார் மற்றும் நவக்குடியை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு விற்பனை பணம் ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 300-ஐ எடுத்துக்கொண்டு ஊழியர்கள் புறப்பட்டனர். இதில் கண்ணன், செந்தில்குமார் ஒரு மோட்டார்சைக்கிளிலும், காளிதாஸ் மற்றொரு வாகனத்திலும் சென்றனர்.

    அப்போது அந்த கடை அருகே 4 பேர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் அளவுக்கு அதிகமான போதையில் இருப்பது போன்று தள்ளாடியபடி வந்தார். திடீரென கீழே தவறி விழுந்தார். அவரை தூக்குவதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே சென்றனர்.

    அப்போது போதை ஆசாமியுடன் வந்த 3 பேரும் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர். அவர்களை தடுத்த போது கண்ணனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். இதிலிருந்து தப்பிய கண்ணன் கடைக்குள் செல்ல தலைதெறிக்க ஓடினார். அப்போது கும்பலை சேர்ந்த ஒருவன் கண்ணனின் காலில் அரிவாளால் வெட்டினான். இதில் தவறி விழுந்த அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    இதில் அந்த பையில் இருந்த சில பணக்கட்டுகள் கீழே விழுந்தன. மீதமிருந்த ரூ.16 லட்சம்து 60 ஆயிரத்து 150 பணத்துடன் 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. கொள்ளையர்கள் தவற விட்டதில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 150 பணம் தப்பியது. படுகாயம் அடைந்த கண்ணனை மற்ற ஊழியர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த துணிகர கொள்ளை குறித்து மணல்மேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×