என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை-கரூரில் விவசாயி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (22). ஆலங்குடி அற்புத மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (25).

    நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்றிரவு ஆலங்குடி பள்ளிவாசல் தெரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் திருமண மண்டபத்தின் மாடியில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது போதையில் இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அப்துல்ரகுமான், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சிவசுப்பிரமணியனை சரமாரி தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

    ரத்தக்கறை படித்த சட்டையுடன் அப்துல்ரகுமான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கேட்டபோது, கீழே விழுந்து விட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறி விட்டு திடீரென்று அங்கிருந்து தப்பியோடினார்.

    சந்தேகமடைந்த பொது மக்கள் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு சிவசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி தப்பியோடிய அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

    கைதான அப்துல்ரகுமான் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. 2 முறை சிறைக்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி குடிபோதையில் பலரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் போதையில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ராக்கத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் போசங்கு, ரவி (வயது 49). அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது. நேற்றிரவு ரவி வீட்டிற்கு, அவரது மருமகன் மனோகரன் மற்றும் உறவினர்கள் கமல், தேவராஜ், ராஜேஷ், போதும் பொண்ணு, குரோசி ஆகியோர் அரிவாள், கம்பி மற்றும் ஆயுதங்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    தகராறு முற்றியதில் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் ரவி மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி, அவர்களது மகன் அஜித் (19) ஆகியோரை தாக்கியுள்ளனர். உயிருக்கு பயந்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அப்போது ரவியை விரட்டி விரட்டி சென்று தாக்கியதில் அவருக்கு நெற்றியில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஸ்வரி, அஜித் காயங்களுடன் உயிர் தப்பினர்.

    தகவல் அறிந்ததும் உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த அஜித், மகேஸ்வரியையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த கரூர்- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது மணல் மேடு கிராமம். இதனையொட்டிய தனியார் பேக்கரிக்கு பின்புறம் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது தலை மற்றும் முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் இருந்தது. அருகிலேயே மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. கொலையுண்டு கிடந்தவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரிய வில்லை.

    அந்த வழியாக வந்த வாலிபரை மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பெண் பிரச்சினையில் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும், அதனால் ஆத்திரத்தில் முகத்தை சிதைத்து கொடூரமாக மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேதிக்கிறார்கள்.

    தொடர்ந்து அந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரவக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி மரணம் அடைந்தார். #Nallammal
    அறந்தாங்கி:

    தற்போதைய மாறிவிட்ட சூழ்நிலையில் உலக மக்கள் தொகை அமைப்பு 2015-ம் ஆண்டு நிலவரப்படி ஆண்கள் வாழ்வு சராசரி காலம் 68 வயது என்றும், பெண்கள் வயது சராசரி ஆயுள் காலம் 71 ஆண்டுகள் என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி 119 ஆண்டுகள் வரை வாழ்ந்து நேற்று இறந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒத்தகடை சின்னசுனையகாடு கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் 1899-ம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் அருணாச்சலம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். 

    இவர்களுக்கு தங்கையா, தவபிரகாசம் என்ற 2 மகன்களும், பத்மாவதி, காந்திமதி, அம்பிகாபதி, கலைமதி, கோமதி என 5 மகள்களும் பிறந்தனர். இவர்கள் மூலம் 22 பேரன், பேத்திகள், 45 கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள், அவர்கள் மூலம் எள்ளு பேரன், எள்ளு பேத்தி என மொத்தம் 395 பேர் இவர்கள் குடும்பத்தில் மட்டும் உள்ளனர்.

    4வது தலைமுறையுடன் வாழ்ந்த நல்லம்மாள் நேற்று இறந்த தகவல் அறிந்ததும் உறவுக்காரர்கள் அனைவரும் திரண்டு விட்டனர். நல்லம்மாளின் எள்ளு பேரன், பேத்தி வரை குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமே 395 தொட்டது. அதன் பிறகு உறவுக்காரர்களும், கிராமத்தினரும் திரண்டு அஞ்சலி செலுத்தி நல்லம்மாளின் உடலை அடக்கம் செய்தனர்.

    119 வயதை தாண்டி வாழ்ந்த நல்லம்மாள் குறித்து அவரது உறவினர்கள் கூறும் போது:- கடைசிவரை நல்லம்மாள் பார்க்கும் திறன், கேட்கும் திறன் ஆகியவற்றுடன் பேசும் திறனையும் பெற்றிருந்தார் என்றும் பேரன், பேத்திகள், எள்ளு பேரன், பேத்திகள் என யார் வந்தாலும் சரியாக அடையாளம் கண்டுபிடித்து பேசுவார் என்றும் தெரிவித்தனர்.

    வயலுக்கு தினசரி வேலைக்கு சென்று உழைத்த நல்லம்மாள் கடைசி வரை ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் என இயற்கையுடனேயே வாழ்ந்து மறைந்துள்ளார் என்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் முதன் முறையாக அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போதும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் தான் நேற்று அவர் 119-வது வயதில் இறந்துள்ளார். கடைசியில் உறவுகளோடு இணைந்து வாழ்ந்தால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழலாம் என்ற உண்மையை கூறி மறைந்துள்ளார் நல்லம்மாள்.

    உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற பெருமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிகால்மெட் என்ற பெண்மணி பெற்றுள்ளார். 1875-ம் ஆண்டு பிறந்த இவர் 1997-ம் ஆண்டு இறந்தார். மொத்தம் 122 ஆண்டுகள் 164 நாட்கள் ஜெனிகால்மெட் வாழ்ந்துள்ளார்.

    புதுக்கோட்டை நல்லம்மாள் 119ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் நல்லம்மாள் வாழ்ந்திருப்பார். ஆனால் கஜா புயலுக்கு பிறகு நல்லம்மாள் உடலில் ஏற்பட்ட மாற்றம் உலக சாதனை படைக்க இருந்த அவரை பறித்துக் கொண்டது காலம்.  #Nallammal
    புதுக்கோட்டை அருகே புயலால் பாதித்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார். #GajaCyclone
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் கிராமமானது செழிப்பான பகுதியாகும். இங்கு மலர்கள், காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் தென்னை, பலா, வாழை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

    கஜா புயலால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். விவசாயமும் பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலர் உதவிகள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து அவர் தனது கடையில் டீ குடித்ததற்காக நீண்ட நாட்களாக கடன் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடை பலகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

    இது குறித்து சிவக்குமார் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பாக்கித்தொகையை அவர்களால் இப்போதைக்கு திருப்பி வழங்க முடியாது என்று நினைத்தேன்.

    அதனால் என்னால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்யும் வகையில் ஒட்டுமொத்த கடன் பாக்கியையும் தள்ளுபடி செய்து விட்டேன் என்றார். விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடனை தள்ளுபடி செய்த சிவக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களின் டீ குடித்த கடனை கடைக்காரர் தானாகவே தள்ளுபடி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #GajaCyclone
    கந்தர்வக்கோட்டையில் இன்று காலை கல்லூரி மாணவி கழுத்தை இறுக்கி, கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளச்சேரிபட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை, விவசாயி. இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கலைக்கல் லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இதற்காக ஆர்த்தி தினமும் காலை 6 மணிக்கே வீட்டில் இருந்து புறப்படுவார். அவர் வளச்சேரிபட்டியில் இருந்து பஸ்சில் கறம்பக்குடிக்கு சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் ஓரத்தநாடு கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஆர்த்தி பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வளச்சேரிப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது வழக்கமான பஸ்சும் வந்தது. ஆனால் ஆர்த்தியை திடீரென காணவில்லை. அவருடன் தினமும் கல்லூரிக்கு செல்லும் சக தோழிகள் ஆர்த்தியை தேடினர்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள ஒரு கிணற்றின் அருகே ஒரு பை கிடந்தது. உடனே அங்கு சென்று பார்த்த போது கிணற்றில் ஆர்த்தி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்தர்வக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஆர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் துப்பட்டாவால் ஆர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து கிணற்றில் தள்ளி விட்டது தெரியவந்தது. ஆனால் யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. காதல் பிரச்சினையில் ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காலை 6 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி 8 மணிக்குள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயல் தாக்கியதில் 150 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. இதனால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். #gajacyclone

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). விவசாயியான இவர் 200 செம்மறி ஆடுகளை பராமரித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலின் போது 125-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.

    இதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டும், தினந்தோறும் ஆடுகள் உயிரிழந்து வந்தன. தற்போது சுமார் 50 ஆடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

    எஞ்சிய ஆடுகளுக்கும் ரத்த சோகை மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தினமும் கால்நடை மருத்துவர் மூலம் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கும், சத்தான தீவனம் வாங்கி கொடுக்கவும், தினமும் அதிகமான தொகை செலவிடப்பட்டதால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிரமப்பட்டு வந்தார்.

    மேலும் இறந்த ஆடுகளுக்கான நிவாரண தொகையை அரசு உடனே வழங்க வேண்டுமென வருவாய்த் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களை ராஜேந்திரன் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஆடுகளுக்கான நிவாரணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆடுகள் உயிரிழந்ததால் மிகவும் சோகத்துடன் இருந்து வந்த ராஜேந்திரன் நேற்று திடீரென மாரடைப்பால் மரண மடைந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, செம்மறி ஆடுகள் மீது அளவற்ற பாசம் கொண்டவர் ராஜேந்திரன்.

    அவரது குரலுக்கும் சைகைக்கும் கட்டுப்பட்டு ஆடுகள் நடந்து கொள்ளும். புயலால் ஒரே நேரத்தில் 125 ஆடுகள் இறந்தன. அதன் பிறகு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 ஆடுகள் இறந்து விட்டன.


    அரசு நிவாரணம் அளித்தாலாவது எஞ்சிய ஆடுகளை காப்பாற்றி விடலாம் என தினமும் புலம்பி வந்தார். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை இழந்த சோகத்தோடும், தினமும் இறக்கும் ஆடுகளை அடக்கம் செய்து வந்த தாலும் மனமுடைந்திருந்த ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்றனர்.

    இது குறித்து கால்நடை மருத்துவர் சேக்தாவுத் கூறும்போது, இறந்த ஆடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து தேவையான சான்றுகளுடன் நிவாரண தொகைக்காக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். #gajacyclone

    கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. #GajaCyclone
    கீரமங்கலம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் அமெரிக்க வடக்கு கரோலினா நகரில் தமிழகத்தை சேர்ந்த வாகை மகளிர் குழுவினர் மொய் விருந்து நடத்தி இந்திய மதிப்பில் ரூ.3½ லட்சம் வசூல் செய்தனர்.

    இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், அனவயல், செரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் சோலார் தெரு விளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதேபோல் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க டாலஸ் நகரில் தமிழர்கள் இணைந்து மொய் விருந்து நடத்தி ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் வசூல் செய்தனர்.


    இந்த நிலையில் விவசாயிகளின் தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றவும், அந்த நிலங்களில் மறுபடியும் தென்னை, பலா, தேக்கு போன்ற மரக்கன்றுகள் நடவும், விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள டாலஸ் நகரில் தமிழ் மலரும் மையம், தமிழ் பள்ளிகள் சார்பில் பிரமாண்டமான மொய்விருந்து நடத்தினர்.

    இதில் 250 தமிழ் குடும்பங்கள் உள்பட இந்திய குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடப்பது போல தரையில் விரிப்புகள் போட்டு, தலை வாழை இலைகள் வைத்து அறுசுவை உணவுகளை ஏற்பாட்டாளர்களே பரிமாறினர்.

    இந்த மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. இதுகுறித்து மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜெய்நடேசன், கீதா சுரேஷ், பிரவீணா வரதராஜன் ஆகியோர் கூறியதாவது:-

    கஜா புயலால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி மறுநடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொடுத்தவர்கள் மறுவாழ்வுக்கு வழி செய்யவில்லை. இதனால் தான் குறுகிய காலத்தில் கலாசார முறைப்படி உதவிகள் பெற தமிழகத்தில் மொய் விருந்து நடத்துவது போல அமெரிக்காவிலும் நடத்தினோம். முடிந்த அளவு அழைப்புகள் அனுப்பினோம்.

    இதில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு தாராளமாக மொய் செய்தார்கள். இதில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் கிடைத்துள்ளது. எங்களால் ஒரு கிராமத்தை மீட்க முடியும் என்று நம்புகிறோம். அதேபோல் நல்ல சம்பளத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் விரைவில் நம் விவசாயிகளை மீட்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #GajaCyclone

    கீரமங்கலத்தில் 24-ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம், வாழை ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் மா, பலா மரங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு அரசே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். 

    கல்விக்கடன், விவசாய கடன், மைக்ரோ பைனான்ஸ் கடன் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். மேலும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளில் மீட்டர் கட்டணத்தை ரத்து செய்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி கீரமங்கலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்,  ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    அறந்தாங்கி அருகே கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பின்னர் வந்த மின்சாரம் பெண்ணின் உயிரை பறித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #gajacyclone

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கிராமப்புறங்களில் தற்போது வரை மின் விநியோகம் சீராகவில்லை.

    இதற்கிடையே கஜா புயல் பாதித்து 30 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை முதல் அறந்தாங்கியை அடுத்த மங்களநாடு மேற்கு கிராமத்திற்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

    இந்த ஊரைச்சேர்ந்தவர் செல்லத்துரை. அதே ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). மீண்டும் மின்சாரம் வந்த மகிழ்ச்சியில் இன்று முதல் டீக்கடையில் வடை உள்ளிட்ட பலகாரங்களை விற்பனை செய்ய தம்பதியினர் தயாராகினர்.

    அதிகாலையில் செல்லத்துரை டீக்கடையை திறக்க புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த விஜயா வடை மற்றும் பலகாரங்கள் செய்வதற்காக பருப்பு வகைகளை அரைக்க மிக்சியை இயக்கினார். அப்போது அதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. அடுத்த விநாடி தூக்கி வீசப்பட்ட விஜயா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். விஜயா உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பிறகு நேற்று வந்த மின்சாரம் இன்று பெண்ணின் உயிரை பறித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #gajacyclone

    கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆலங்குடி:

    கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆலங்குடி வட்டஞ்கச்சேரி திடலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி நகர செயலாளர் வரவேற்று பேசினார்.  

    திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உடையப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரி குமாரவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும், விவசாய கடன்கள் அனைத்தையும் முற்றிலும் ரத்து செய்திட வேண்டும், பயிர் காப்பீடு காலக்கெடுவை நீடித்து அரசு பயிர் இன்சூரன்ஸ் செய்திட வேண்டும், தென்னை ஒன்றுக்கு ரூ.20,000 ஆயிரம் வழங்கவும், மா, பலா, வாழை, சவுக்கு ஆகியவற்றிற்கு உரிய நிவரணம் மற்றும் இதர மரத்திற்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் 6 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

    ஆர்ப்பாட்டத்தில் சுசீலா, சிவகுமார், பாலசுப்பிர மணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ரெகுநாதன், ஆறுமுகம், பழனி வேலு, மதியழகன், ஸ்டெல்லா மேரி, நாடி யம்மை, இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டெல்லாமேரி நன்றி கூறினார்.
    அறந்தாங்கியில் பன்றிகாய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். #swineflu
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி பூங்கா சாலை பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி அமுதா (வயது 38). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி  அமுதா இறந்தார். 

    பன்றி காய்ச்சலால் அவர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காய்ச்சல் பரவுவதை தடுக்க  சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். #swineflu
    வருகிற 16-ந்தேதி வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNCyclone #MinisterUdhayakumar #TNGovt
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர் .

    பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் நிவாரண நிதியாக ரூ.1,104 கோடி வழங்கியுள்ளது. வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இன்னமும் ரூ.2500 கோடி தேவைப்படுகிறது.

    மத்திய அரசு இதுவரை எந்த நிதி உதவியும் புயலுக்கு வழங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே வழங்கிய நிதியானது பேரிடர் மீட்பு நிலுவைத்தொகை. தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும். அவர்களுடைய கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய தயாராக உள்ளது.


    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எங்களுடைய நண்பர். அவர் அவசரப்பட்டு தி.மு.க.வில் இணையும் முடிவை எடுத்து விட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் நிலையாக நிற்கிறோம். தினகரனின் பழமொழி எல்லாம் இனி மக்களிடம் எடுபடாது.

    வருகிற 16-ந்தேதி வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புயலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். புயல் எந்த திசையில் வரும் என்று உறுதி செய்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் மக்களிடம் தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    ஆயிரம் பேர் ஆயிரம் பேசலாம். ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 99 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. அடுத்தது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளது என்றார்.

    விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-

    கஜா புயலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய அரசாக தமிழக அரசு இருந்தது. கஜா புயலை வைத்து எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற நினைத்தால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு சோதனையான காலகட்டத்தை கடந்து சுகாதாரத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவர் பதவியிலேயே தொடர முடியாது என்று பேசப்பட்ட சோதனை காலக்கட்டத்தில் கூட கலங்கி விடாமல், சோர்ந்து போகாமல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியமைத்தவர் விஜயபாஸ்கர்.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களோடு களத்தில் நின்று மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டவர். அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் தான் புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்று நோய் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நிவாரண பணிகள் முடிந்த பிறகு எந்த விவாதத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNCyclone #MinisterUdhayakumar #TNGovt
    ஆலங்குடி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மனைவி விஜி (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    இவர் தான் குடியிருக்கும் மாடி வீட்டின் கீழ் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் முருகேசனுக்கும், அவரது மனைவி விஜிக்கும் இடை யே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக  கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீரமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் விஜியின் தம்பி சரவணன் தனது அக்காவை அடித்து கொலை செய்து தூக்கி போட்டு விட்டதாக கீரமங்கலம் போலீசில் புகார் செய்தார். 

    இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமாக  என விசாரித்து வருகிறார்கள்.
    ×