என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையையில் உள்ள மேலமலை பகுதியில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் கோவிலுக்கு கீழ் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் ஒரு லிங்கம் உள்ளது. அந்த லிங்கத்தை 1872-ம் ஆண்டு மக்கள் வழிபட்டதாக கல்வெட்டு அங்கு உள்ளது.

    இந்நிலையில் தொல்லியல் துறை அனுமதியோடு மோட்டார்களை கொண்டு சுனை நீரை இரைக்கும் பணி, கடந்த 30-ந் தேதி தொடங்கியது. இதில் சுமார் 20 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட சுனையில் இருந்து நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.



    இதனால் அப்பகுதி பொதுமக்கள் சுனையில் இருக்கும் லிங்கத்தை பார்க்க குவிந்தனர். நேற்று காலை தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர், லிங்கம் வெளியே தெரிந்தது. இதையடுத்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து மதியம் சுனைலிங்கத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். 146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர்.
    ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை பூக்கள் விலை உயர்ந்ததால் பெண்கள் அவதி அடைந்தனர்.
    ஆலங்குடி:

    கஜா புயலின் கோரதாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு, சோளம், கடலை, தென்னை, மா, பலா, வேம்பு, தேக்கு, பூக்கள், பயிர் செடி, கொடிகள் என அனைத்தும் கடும் சேதம் அடைந்தது. இதனால் இப்பகுதி முழுவதும் சாகுபடி செய்த பூக்கள் முற்றிலும் அழிந்து விட்டது. இதனால் ஆலங்குடி பகுதியில் மல்லிகை பூக்கள் கிடைக்காமல் பெண்கள் அவதி அடைந்தனர். 

    இந்நிலையில் கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு தொடர்ந்து வந்ததால் பூக்கள் விலை அதிகமாக ஏறுமுகமாக உள்ளது. பனி காலத்தில் மல்லிகை பூக்களின் உற்பத்தி குறைந்தாலும் வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்டதாலும், அவற்றின் விலை வழக்கத்தை விட இரு மடங்கானது. சாதாரண நாட்களில் முழம் 20, ரூ30க்கு விற்க்கபடும். ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஒரு வார காலமாக மல்லிகை பூ முழம் ரூபாய் 200 ஐ தாண்டியது. சில கடைகளில் மல்லிகை பூ இல்லை.
    இருந்த போதிலும் மல்லிகைக்கு தனி மவுசு இருப்பதால் ரூ.200 ஐ கொடுத்தும் மல்லிகை பூவை பலரும் வாங்கிச் சென்றதால் விற்று தீர்ந்தன.

    மேலும் மல்லிகைக்கு மாற்றாக பெண்கள் விரும்பக்கூடிய நந்தியா வட்டை, காக்கட்டாம் பூ, ஜாதி மல்லி, முல்லைப் பூ, சென்டிப் பூ, இருவாச்சி பூக்கள் ரூ 50, கதம்ப பூக்கள் ரூ. 30 க்கும் இவைகளும் விற்க்கபட்டன. பூக்களின் விலை உயர்வால் பெண்களும், பொதுமக்களும் அவதி அடைந்தனர். 
    அறந்தாங்கியில் ஒரே நாளில் 3 கடைகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் குளிர்பான நிறுவன ஏஜென்சி நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (வயது 39). இவர் நேற்று காலை தனது நிறுவனத்திற்கு சென்ற போது, நிறுவனத்தின் கதவும், சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. 

    இதேபோல் அப்பகுதியில் உள்ள சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான மாவு மில்லின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், 1 சவரன் தங்க நகை ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மற்றொரு ஏஜென்சி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    பணம் கொள்ளை போன சம்பவங்கள் குறித்து திருநாவுக்கரசு,சின்னச்சாமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கூழையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 50). இவரது மனைவி காளியம்மாள்(46). குடிசை வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை இவர்களது வீடு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் சத்தம் போட்டு தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் மற்றும் காளியம்மாளை வெளியே வருமாறு கூறினர். அவர்களும் சுதாரித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். 

    இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், பத்திரங்கள், நெல் மூட்டை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் வீசாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதையொட்டி தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்டன.

    தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஒப்படைக்க வேண்டும்.
    எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும். அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    புதுக்கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள முனிப்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மாத்தூர் நோக்கி சென்றார். மண்டையூர் சாலை அருகே சென்றபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்து, ரவியின் கழுத்தில் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.1,600-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 வாலிபர்களையும் விரட்டி சென்றார். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மண்டையூர் போலீசார், 2 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் விரட்டிச்சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த செல்வக்குமார்(34), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி(35) என்பதும், அவர்கள் மாத்தூர் சிதம்பரம் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த வினோத்குமாருடன்(35) சேர்ந்து கடந்த 7 மாதங்களாக கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களை சிதம்பரம் நகர் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கிருந்த வினோத்குமாரை பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், புதுக்கோட்டை , திருச்சி, பெரம்பலூரில் திருட்டு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சுந்தரபாண்டி மீது 7 கொலை வழக்குகளும், 3 கொள்ளை வழக்குகளும், செல்வக்குமார் மீது 4 கொள்ளை முயற்சி வழக்குகளும், 6 வழிப்பறி வழக்குகளும், 7 கொலை வழக்குகளும், வினோத்குமார் மீது 2 கார் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் 3 பேருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளை ஞரணி துணைஅமைப்பாளர் பாலச்சந்தர், வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது உள்பட பல்வேறு உதவிகளை செய்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமார், சுந்தரபாண்டி, வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.44 ஆயிரம், 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் மீது மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்ககோரியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்ககோரியும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி எம்.எல்.ஏ., மெய்யநாதன் தலைமை தாங்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

    ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாரபட்சமாக நிவாரணம் வழங்கப்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சுகாதாரத்துறை குறித்து விமர்சிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministervijayabaskar #mkstalin #hivblood

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று மாலை தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதற்காக அவசர கால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சென்னையில் மட்டும் கடந்த 11 மாதங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக விபத்து கால சிகிச்சை இறப்பு சதவீதம் என்பது 8.5 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மொபைல் சி.டி. ஸ்கேன் தமிழகத்தில் 15 கோடி மதிப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழக சுகாதாரத்துறை உலக நாடுகள் சுகாதாரத்துறைக்கு இணையாக வளர்ந்து வருகிறது.


    தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறைக்கு என எதுவுமே செய்யவில்லை. ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. தற்போது சுகாதாரத்துறை குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்குரியது. அவருக்கு சுகாதாரத்துறை குறித்து விமர்சனம் செய்வதற்கு எந்த வித அருகதையும் கிடையாது

    சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை தரக்கூடிய சம்பவமாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை வைத்து அரசியல் செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministervijayabaskar #mkstalin #hivblood

    அறந்தாங்கி அருகே வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (45). இவரது மனைவி கலா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலா தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கலா தனது குழந்கைளுடன் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதை சோதனை செய்த போது அதில் இருந்த 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னவாசல் அருகே ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் தகவலை கேள்விப்பட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குமரமலையை சேர்ந்தவர் துரைச்சாமி. இவர் ஆடு ஒன்று வளர்த்து வந்தார்.
    இந்த நிலையில் அந்த ஆடு குட்டி ஒன்றை ஈன்று இறந்து விட்டது. இதனால் அந்த குட்டி பால் இன்றி தவித்து வந்தது. இந்தநிலையில் துரைச்சாமி வீட்டில் வளர்க்கும் நாயே தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாலூட்டுகிறது. 

    ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் தகவலை கேள்விப்பட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து துரைச்சாமி கூறுகையில், குட்டியை ஈன்ற நான்கே நாட்களில் தாய் ஆட்டுக்குட்டி இறந்து விட்டது. அதன் பிறகு நான் வளர்க்கும் நாயிடம், ஆட்டுக்குட்டி தானாக சென்று பால் குடித்தது.

    முதலில் நாங்கள் பயந்தோம் ஆட்டுக்குட்டியை கடித்து விடுமோ அல்லது நாயின் பால் ஆட்டுக்குட்டிக்கு ஏற்றுக்கொள்ளுமா? என்றெல்லாம் யோசித்தோம். ஆனால் நாய் அந்த ஆட்டுக்குட்டியை தனது பிள்ளைபோல் அரவணைத்து அன்பு காட்டி, பாலூட்டி வருகிறது. இது எங்களுக்கே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றார்.
    கந்தர்வக்கோட்டையில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தச்சு பட்டறை அதிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை புதுநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 35). அதேபகுதியில் தச்சு பட்டறை நடத்தி வந்தார். தினமும் பைக்கில் வேலைக்கு சென்றுவருவது வழக்கம். அதேபோல் நேற்றும் பட்டறைக்கு சென்றுவிட்டு, இரவு பணி முடிந்ததும் வீடு திரும்பினார்.

    கந்தர்வக் கோட்டை - தஞ்சாவூர் சாலை பழைய கந்தர்வக்கோட்டை அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

    சம்பவம் குறித்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் உடடியாக வந்து, செந் தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மர்ம வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த செந்தில் குமாருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது.
    தமிழகத்திலும் வாக்கு வங்கி சிதறக் கூடாது என்ற நோக்கில் பிரதமர் மோடி மேகதாது விவகாரத்தில் பகல் வேடம் போடுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். #mekedatuissue

    புதுக்கோட்டை:

    பெரியாரின் 45-வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் அனைவரும் செயல்படுத்த வேண்டும். அவரது கொள்கைக்கு ஏற்ப மதவாத சக்தியை இன்றைக்கு ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு பகல் வேடம் போடுகிறது. கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்பட்டு அணை கட்ட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.

    ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வைத்து தமிழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். பா.ஜ.க.விற்கு கர்நாடகாவிலும் வாக்கு வங்கி போகக்கூடாது. தமிழகத்திலும் வாக்கு வங்கி சிதறக் கூடாது என்ற நோக்கில் தான் மோடி மேகதாது விவகாரத்தில் பகல் வேடம் போடுகிறார்.

    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்ற தி.மு.க. வின் நிலைப்பாட்டை மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை அனைத்து கட்சிகளும் மறுக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து தான் வேறு கட்சிகள் பிரதமர் வேட்பாளரை யாரும் முன்மொழியவில்லை.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறந்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தான் தெரிய வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இன்றைக்கு கூடும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது அணை பிரச்சினைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றமே தடையில்லை என்று கூறிய பிறகு வேண்டு மென்றே மோடியின் அனும திக்காக ஆளுநர் காத்திருக்கி றார். உடனடியாக இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். எவ்வளவுதான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரசாரம் செய்தாலும் மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கஜா புயல் நிவாரண பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தவில்லை. அரசு என்று ஒன்று இருப்பதாகவே இன்றைக்கு தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று வழங்கக் கூடாது, நஷ்டஈடு என்று கூறி அதிக தொகை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #mekedatuissue

    ×