என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் தமிழக அரசு அனுமதியுடன் முதல் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. #Jallikattu #Thatchankurichi
    கந்தர்வக்கோட்டை:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீக்கப்பட்டதால் பட்டி தொட்டியெங்கும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கோமாபுரம், மருதன்கோன் விடுதி, ஆதனக்கோட்டை, இலுப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 800 காளைகள் பதிவு செய்யப்பட்டு கலந்து கொண்டன. 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உரிய உடற்தகுதி தேர்வு நடத்தி அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டோம், விதிமுறைகளை சரியாக கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் காளைகளை துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.

    முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளில் சில ஆக்ரோ‌ஷமாக சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. தொடர்ந்து அந்த காளைகள் களத்தில் நின்று விளையாடி தன்னை அடக்க வந்த வீரர்களை விரட்டியடித்தது.

    இருப்பினும் களத்தில் வீரத்துடன் நின்றிருந்த மாடு பிடிவீரர்கள் தன்னை விரட்டிய காளையை விடாப்பிடியாக நின்று அடக்கி அசத்தினர். இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கி வெற்றிக்கொடி நாட்டிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    குறிப்பாக பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கட்டில், சில்வர் பாத்திரங்கள், பீரோ, சேர், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. களத்தில் வீரர்கள் ஒவ்வொரு குழுக்களாக இறக்கி விடப்பட்டனர். முதல் கட்டமாக 168 பேர் களம் இறங்கினர்.

    ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் கண்காணித்தனர்.

    இதே போல் ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக தயார் நிலையில் இருந்து மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.  #Jallikattu  #Thatchankurichi

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. #TNFishermen #SrilankanNavy
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் நேற்றிரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களையும் விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கையில் உள்ள காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் சிலரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். மீன்பிடி தொழிலுக்காக ஜெகதாப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை செலவுக்காக அவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அதில் வரும் வருமானத்தை வைத்து சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட இருந்தனர்.

    இன்று காலை அவர்கள் கரை திரும்ப வேண்டும். பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SrilankanNavy
    புதுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை , மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Storm

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா. இவர் கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2009ம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கஜா புயலால் ராஜேந்திரன் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது.

    இதற்காக தமிழக அரசு ரூ.34ஆயிரம் நிவாரணத்தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தியது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் வந்ததையடுத்து, ராஜேந்திரன் தொகையை பெற வங்கிக்கு சென்றார்.

    அப்போது அந்த நிவாரண தொகையை வங்கி நிர்வாகம் மகளுக்காக வாங்கியிருந்த கல்வி கடனுக்கு வரவு வைத்து கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார்.

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ள நிலையில், வங்கி நிர்வாகத்தின்செயலால் அதிருப்தியற்ற ராஜேந்திரன், நிவாரணத்தொகையை பெற்று தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் இது போன்று பலரின் நிவாரண தொகைகள் கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. #Gajastorm #Storm

    பொன்னமராவதி அருகே பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன்னமராவதி:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா வழிகாட்டுதலின்படி 2018-2019ம் கல்விஆண்டிற்கான 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைப் பயிற்சியானது பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 18 நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்று கொண்டிருக்கும் இப்பயிற்சிக்கு பெற்றோர்கள் பங்களிப்பாக பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவிகளுக்கும் டி-சர்ட்கள் வழங்கப்பட்டன.

    இதன் மூலம் தாங்கள் பயிற்சி செய்ய எளிமையாக இருப்பதாக 6 முதல் 8 வகுப்புகளில் உள்ள மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பயிற்சியை பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் பார்வையிட்டு மாணவிகளுக்கு டி-சர்ட்கள் வழங்கிய பெற்றோர்களையும் , இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி மற்றும் பயிற்சி பொறுப்பாசிரியை சசிகலாதேவி ஆகியோரையும் வாழ்த்தி பாராட்டினார்.

    இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம் ,கராத்தே பயிற்சியாளர் குணசேகரன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மீனாள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    கீரமங்கலம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக இரவிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
    கீரமங்கலம்:

    தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பச்சரிசி, சர்க் கரை உள்ளிட்ட பொருட் களுடன் 2 அடி கரும்பு மற்றும் ரூ.ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மதியம் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு உள் ளிட்ட பல இடங்களில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பற்றிய தகவல் வெளியான நிலையில், உடனே பொங்கல் பரிசு வாங்கவில்லை என்றால் அடுத்த நாள் போகலாம் என்று நினைத்த மக்கள் திடீரென மதியத்திற்கு பிறகு அனைத்து ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கி னார்கள். இரவு நேரத்திலும் கூட்டம் அதிக மாக நீண்ட வரிசையில் காத்திருந்ததால் கீரமங்கலம் பகுதியில் உடனடியாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

    கீரமங்கலம் பகுதியில் கீர மங்கலம் ரேஷன் கடை, சந் தைப்பேட்டை, செரியலூர் ஜெமின், பனங்குளம் உள் ளிட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதில் சில இடங்களில் ஒரு அடி நீள முள்ள கரும்புகள் வழங்கப் பட்டது. ஆனால் செரியலூர் ஜெமின், பனங்குளம் ரேஷன் கடைகளில் கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசு வழங்கப் பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு நாளும் கரும்பு வந்த பிறகு பொங்கல் பரிசு வழங்க காத்திருந்த நேரத்தில் நீதிமன்ற உத்தரவை பார்த்த மக்கள் உடனே ஒவ்வொரு ரேஷன் கடையில் குவிந்துவிட்டதால் கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கரும்பு வந்த பிறகு வழங்கப்படும் என்றனர்.

    மேலும் ரேஷன் கடைகளில் பணம் பற்றாக்குறை ஏற்பட்ட தால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

    கீரனூர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் தொகுப்புகளை பொதுமக்கள் நீண்ட வரிசை யில் நின்று வாங்கி சென்றனர். இந்நிலையில் நேற்று மதியம் ரூ.ஆயிரம் வழங்க தடை விதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ரேஷன் கடை களில் பொருட்கள் வாங்க குவிந்ததால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வரிசையாக நின்று வாங்கி செல்லும்படி ஒழுங்குப்படுத்தினர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #tamilnews
    கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:
     
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த வடிவேல்& கலைச்செல்வி தம்பதியரின் மகன் நீலகண்டன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கஜா புயலால் இவர் வசிக்கும் குடிசை வீடு மிகுந்த சேதத்துக்குள்ளானது.

    இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர். தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய் துறையினர் வழங்கியுள்ளனர். ஆனால் மிகுந்த சேதத்துக்குள்ளான நீலகண்டன் குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் வருவாய்த்துறையினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த நீலகண்டன் தனது வீட்டு ரேசன்கடை அருகே இருந்த டிரான்ஸ்பாரத்தில் ஏறி தனக்கு நிவாரணப் பொருட்கள் வழங்ககோரி கோஷமிட்டவாரே மின்சாரம் பாயும் மின்கம்பியை பிடித்து விட்டார். இதில் நீலகண்டன் உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீலகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நீலகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது குப்புசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகு மற்றும் அதில் இருந்த சதீஷ், அஜித், தர்மராஜ், ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களை சிறைப்பிடித்தனர். பின்னர் படகுடன் 4 மீனவர்களையும் காரை நகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜோசப் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் ரனீசன் (36), ராஜா (34), சேகர் (30), மணிகண்டன் (33) ஆகிய 4 பேர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் அவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீதும் இலங்கையின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கிடும் வகையில், ஆரோக்கிய பாரத பயணம் எனும் தொடர் சைக்கிள் பயணம் தேசிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின் படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ண போட்டிகள் மற்றும் மின்னணு கலை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    முதல் கட்டமாக இந்த போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் https://fssai.gov.in/creativitychallenge என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளிகள் மூலம் snfatschool@fssai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். மின்னணு கலை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலம் மாணவ-மாணவிகளின் திறன் மேம்படும். உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்பட்டு மாணவ-மாணவிகள் ஆரோக்கியம் மேம்படுவதுடன், தங்களது குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்ய, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபுவை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #PudukkottaiAccident
    புதுக்கோட்டை:

    ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோயில் வழிபாட்டுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பிரிவு சாலையில் இன்று மதியம் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி கடுப்பாட்டை இழந்து வேன் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் இறந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு திருமயம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்தார். #PudukkottaiAccident
    புதுக்கோட்டை அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி அருகே உள்ள மேலூரில் ராஜாராஜன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்துரை, சேதுபதி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் 2 பேரும் பணிக்கு வந்தனர். பின்னர் அங்கு வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு நேற்று வைத்த வெடியில் வெடிக்காத வெடிகள் இன்று திடீரென வெடித்தன. இந்த விபத்தில் சேதுபதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். சின்னத்துரை படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் சின்னத்துரையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, கியூ.பிரிவு போலீசார், வெள்ளனூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    புதுக்கோட்டை சிறையில் இன்று 50க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #PudukkottaiJail
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில் சிறையில் சட்டவிரோதமாக போதை பொருட்கள், செல்போன் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட கிளை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள 50க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளிடமும், சீர்திருத்த பள்ளியில் உள்ள 25க்கும் மேற்பட்ட தண்டனை மட்டும் விசாரணைக்கு உட்பட்ட கைதிகளிடமும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    கைதிகளின் ஒவ்வொரு அறையாக சென்று செல்போன் , போதைப் பொருள் ,ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கைதிகளின் அறைக்குள் இருந்து கட்டுக்கட்டாக பீடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன், போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட எந்தவித பொருளும் சிக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை சிறையில் போலீசார் இன்று நடத்திய திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தியாவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தால் போராட்டங்கள் வெடிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார். #PChidambaram
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மறையவில்லை. பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. பொருளாதாரத்தை விட ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக உள்ளது. இதனால் நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். புரட்சி மற்றும் போராட்டத்துக்கு இது வழி வகுக்கும்.

    பிளஸ்-2க்கு பின்னர் 75 சதவீதம் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவதும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், நாட்டில் உள்ள வறுமையை ஒழித்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சியாக கருதப்படும். அந்த சூழ்நிலையை உருவாக்க ஒவ்வொரு மாணவரும் உறுதியேற்க வேண்டும்.


    ஆணும், பெண்ணும் சமம் என்று கூறி வரும் நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    சபரிமலை பிரச்சனையில் சரி, தவறு என்று இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெண்கள் கோவிலுக்கு செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். வலிமையான சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் இயலாமையை ஒழிக்க வேண்டும். வறுமை ஒழிக்கப்பட்டால்தான் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்தால் தான் அது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PChidambaram
    ×