என் மலர்
புதுக்கோட்டை
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேலு, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னுமணி (வயது 28).
இவர்களது மகன் சஞ்சீவி மலை (3), மகள் சங்கவி (2). கடந்த 17-ந்தேதி மாலை பொன்னுமணி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தைகள் வீட்டிற்குள் விளையாடினர்.
அப்போது திடீரென கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ வீடு முழுவதும் பரவி வீடுகளில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களில் பற்றி எரிந்தது. பொன்னுமணி, 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை.
இதனால் 3 பேர் மீதும் தீப்பற்றியதில் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் தாய் மற்றும் குழந்தைகளை மீட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தீப்பற்றியதில் 3 பேரும் பலத்த காயமடைந்திருந்தனர்.
உடனே அவர்களை பொதுமக்கள் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பொன்னுமணி, சஞ்ஜீவி மலை, சங்கவி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கியாஸ் சிலிண்டர் கசிவால் தாய்-2 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விரும்பினார். இதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் 2000 மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது. 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க இருக்கிறார்கள். 2000 மாடுகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது.
கின்னஸ் சாதனைப் படைக்க இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 8.15 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வாரப்பூரில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கியதில் இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால் இதுவரை அங்கன்வாடி மையம் சீரமைக்கபடவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.
மேலும் பழுதடைந்த அங்கன் வாடிமையத்தின் மேற்கூரை கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அவற்றை அகற்றி வகுப்புகள் நடைபெறுவதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி நாளை 20-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும். அதிகமான பரிசுப் பொருள்களை வழங்க போகும் போட்டியாக இது திகழப்போகின்றது. இப்போட்டியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு காரும்(சிப்ட்), 25 நபர்களுக்கு ஒன்றரை லட்சம் மதிப்புள்ள புல்லட்(இரண்டு சக்கர ) வாகனமும், கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் தங்ககாசு, வெள்ளி காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், கிரைண்டர், ஏசி, மின்விசிறி, ஏர் கூலர் போன்ற எண்ணற்ற எலக்ட்ரானிக் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
இந்த போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக தனி கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி கின்னஸ் சாதனை செய்யப்படுவதால் மூன்று வெளிநாட்டு நடுவர்களும் பங்கேற்று போட்டியை ஆய்வு செய்கின்றனர்.
போட்டியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கின்ற முன்னணி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளன. சுமார் 2500 காளைமாடுகள் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருக்கின்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்புக்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விராலிமலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட உள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. தலைமையில் 4 மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி.க்கள், 25 டி.எஸ்.பி.க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். #Jallikattu #Jallikattu2019
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது மனைவி தாமரை செல்வி (33). இவர்களது மகள் தர்ஷினி (12). சேகரும், தாமரைசெல்வியும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.
இதனால் தர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டையில் உள்ள அவரது பாட்டி பானுமதி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தாமரைச்செல்வி அவரது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஆட்டு இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிட்டனர். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாமரைசெல்விக்கும், தர்ஷினிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி தர்ஷினி இறந்தாள். தாமரைசெல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , மகள் இறந்ததை அறிந்து கதறி துடித்தார்.
தர்ஷினி உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது தாமரைச்செல்வியும் உடன் சென்றார். போகும் வழியில் திடீரென தாமரைச் செல்வியும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட பிறகே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட் டுள்ளது. மேலும் தலைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இதனால் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்த வியாபாரி பழைய இறைச்சியை விற்பனை செய்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது ஏதாவது கலப்படம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை வாங்கி சாப்பிட்டதன் காரணமாக இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் சமைத்து சாப்பிட்ட ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகை மறு நாளான கரிநாள் அன்று அறந்தாங்கி பகுதியில் ஆட்டு இறைச்சி அதிக அளவில் விற்பனையானது. பொதுமக்கள் பலர் போட்டி போட்டு வாங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சியை, புதிதாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அறந்தாங்கி பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை அம்பாள்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் சிங்கமுத்து (வயது 60). இவர் வயலோகத்தில் கோவில் வீதியில் அரிசி ஆலை நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் அந்த அரிசி ஆலை உள்ளே பார்த்த போது, அங்கு சிங்கமுத்து விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






