என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே கியாஸ் கசிவால் தீ விபத்து - தாய்,2 குழந்தைகள் பலி
    X

    புதுக்கோட்டை அருகே கியாஸ் கசிவால் தீ விபத்து - தாய்,2 குழந்தைகள் பலி

    புதுக்கோட்டை அருகே கியாஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தாய், 2 குழந்தைகள் பலியாகினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பழனிவேலு, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னுமணி (வயது 28).

    இவர்களது மகன் சஞ்சீவி மலை (3), மகள் சங்கவி (2). கடந்த 17-ந்தேதி மாலை பொன்னுமணி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தைகள் வீட்டிற்குள் விளையாடினர்.

    அப்போது திடீரென கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ வீடு முழுவதும் பரவி வீடுகளில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களில் பற்றி எரிந்தது. பொன்னுமணி, 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை.

    இதனால் 3 பேர் மீதும் தீப்பற்றியதில் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் தாய் மற்றும் குழந்தைகளை மீட்டனர். இருப்பினும் அவர்கள் மீது தீப்பற்றியதில் 3 பேரும் பலத்த காயமடைந்திருந்தனர்.

    உடனே அவர்களை பொதுமக்கள் சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பொன்னுமணி, சஞ்ஜீவி மலை, சங்கவி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கியாஸ் சிலிண்டர் கசிவால் தாய்-2 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×