என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூர் நமணராயசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). இவரது மகன் முத்து (30). வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. முத்து விவசாயம் செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினர். அதனை களமாவூர் நமணராயசத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய முன்னாள் கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான மூர்த்தி (45) என்பவர் வாங்கி கொடுத்தார்.
இந்தநிலையில் திடீரென அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிக்காக எடுத்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை-மகன் இருவரும் மூர்த்தியிடம் சென்று முறையிட்டனர். நீங்கள் கூறியதன் பேரில் தானே அந்த நிலத்தை வாங்கினோம். இப்போது நெடுஞ்சாலைத்துறையினர் எடுத்து கொண்டார்களே?
எனவே நாங்கள் இடம் வாங்க கொடுத்த பணத்தை திருப்பித் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் மூர்த்தி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து மூர்த்தி, பணம் தரமாட்டேன், அதற்கு பதிலாக நமணராயசத்திரத்தில் உள்ள எனது தோட்டம் அருகே உள்ள நிலத்தை வைத்து கொள்ளுங்கள். ஆனால் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இதனை தந்தை- மகன் இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
இன்று காலை பேச்சு வார்த்தை நடத்த இருவரையும் தனது தோட்டத்திற்கு வருமாறு மூர்த்தி அழைத்துள்ளார். இதையடுத்து வீராச்சாமி, மூர்த்தி இருவரும் இன்று காலை மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் தந்தை- மகன் இருவரும் மூர்த்தியின் தோட்டம் அருகே உள்ள வயலில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்களை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இடப்பிரச்சனை தொடர்பாக இன்று காலை மூர்த்தியின் தோட்டத்திற்கு வீராச்சாமி-முத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது, அங்கு ஏற்பட்ட தகராறில் மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து இருவரையும் வயலில் ஓட, ஓட விரட்டி கொலை செய்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மூர்த்தி மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தந்தை -மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கீரனூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட தந்தை-மகன் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பிராமணவயலைச் சேர்ந்தவர் பழனிவேலு மகள் சரண்யா (வயது 20). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார்.
அவருக்கு அடிக்கடி சிறிய அளவில் மனநிலை பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மாணவி முழுமையாக குணமடையவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொன்னகாட்டுபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
லதா விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். வேலுச்சாமி விராலிமலை பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் வெற்றிலை வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் லதாவின் நடத்தையில் வேலுச்சாமி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் பலமுறை அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.
இன்று காலை லதா, விராலிமலை பஸ் நிலையத்தில் உள்ள பேன்சி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். கடையில் வியாபாரத்தை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வேலுச்சாமி திடீரென லதாவிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.
இதைப்பார்த்த பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மனைவியை கொலை செய்த வேலுச்சாமி நேராக விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த லதாவின் தாய் கதறி அழுதார். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விராலிமலை பஸ் நிலையத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (வயது 32). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
திருமணமாகாத இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வது, கேலி, கிண்டல் செய்வது என்று இருந்தார். பொதுமக்கள் கடுமையாக எச்சரித்தும் திருந்த வில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் சக்திவேலை அடித்து, உதைத்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவரது உறவினர்கள் வந்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் அழைத்து சென்று விட்டனர். சக்திவேல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் காளிதாஸ் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும், கடந்த 2008-ம் ஆண்டு காசிவிஸ்வநாதன் என்பவரது உறவுக்கார சிறுமிக்கும் சக்திவேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சக்திவேலை கடுமையாக தண்டிக்க தருணம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள அடியார்குளம் பகுதியில் சக்திவேல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ், காசிவிஸ்வநாதன் ஆகியோர் மறித்தனர். அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக அடித்து, காலால் குரல் வளையை மிதித்தனர். இதில் மூச்சுத்திணறிய சக்திவேல் மயங்கினார். அவர் இறந்து விட்டதாக நினைத்து இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து சக்திவேலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சக்திவேல் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிவிஸ்வநாதனை கைது செய்தனர். தலை மறைவான காளிதாசை தேடி வருகிறார்கள். உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திவேலை பழி வாங்க 10 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும், நேற்று இரவு சிக்கிக்கொண்டதால் தாக்கியதாகவும் காசிவிஸ்வ நாதன் போலீசில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிளாஸ்டிக் மாசினை குறைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கப்படும் பிளாஸ் டிக் தாள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்புகள், பிளாஸ் டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து தடுத்திடும் வகையில் நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 192 அலுவலர்களை கொண்ட 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சிக்கான பெருவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு புதுக்கோட்டையில் மகளிர் திட்ட அலுவலகத்தில் வைத்து டீ மற்றும் பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப்புகளில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு டீ வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அவ்வப்போது அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப்புகளில் டீ வழங்கிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறந்து உள்ளது’ என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் மகள் மகாலட்சுமி (வயது 30), பட்டதாரி. அதே ஊரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மோகன் (36).
மகாலட்சுமிக்கும், மோகனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையறிந்த அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இதையடுத்து இருவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய இருந்தனர். இதனிடையே மோகனும், மகாலட்சுமியும் அவ்வப்போது சந்தித்து தங்களது திருமணம் பற்றி பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி வீட்டிற்கு வந்த மோகன், அவரை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள தைலமரக்காட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் நீண்ட நேரமாக பேசி கொண்டிருந்தனர். மகாலட்சுமி வீடு திரும்பாததால் அவரை அவரது பெற்றோர் அழைக்க சென்றனர்.
அங்கு சென்று பார்த்த போது மகாலட்சுமி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மோகனும் உடலில் காயத்துடன் கீழே சாய்ந்து கிடந்தார். இதனைப்பார்த்த மகாலட்சுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். மேலும் இது பற்றி கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மகாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகனும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மகாலட்சுமியை கொலை செய்து விட்டு, மோகனை தாக்கி விட்டு சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே மோகன் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவே, மோகனே மகாலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் மற்றும் மகாலட்சுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் தொடர்பாக மகாலட்சுமிக்கும், மோகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாகி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், நேற்றிரவு தைலமரக்காட்டில் நின்று பேசும் போது இருவருக்கும் மீண்டும் பிரச்சனை உருவாகவே, ஆத்திரமடைந்த மோகன், அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் மகாலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் அவரது காது மற்றும் பின்புற தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த மோகன், கொலையை மறைக்கவும், போலீசாரிடமிருந்து தப்பிக்கவும் நாடகமாட முடிவு செய்தார். அதன்படி மர்மநபர்கள் தன்னை தாக்கி, மகாலட்சுமியை கொலை செய்தது போல நம்ப வைக்க, அவரே உருட்டுக் கட்டையால் தன்னைத்தானே தாக்கி லேசான காயத்தை ஏற்படுத்திக் கொண்டு நாடகமாடியதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் விசாரணையில் அவர் சிக்சிக்கொண்டார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கொன்று காதலன் நாடகமாடிய சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ரெங்கசாமி, செல்லத்துரை, தாமரைச்செல்வன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 ஆசிரியர்கள் உள்பட 15 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தொடர்ந்து உடனடியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.
இந்நிலையில் நேற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்து 566 பேரை கைது செய்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மணிகண்டன், செல்வராஜ், கண்ணன், குமரேசன், தியாகராஜன், சக்திவேல் உள்பட 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இவர்களை நள்ளிரவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வேலை நிறுத்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல பல பள்ளிகள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு சென்றனர். #JactoGeo
மணமேல்குடி அடுத்த ஏகனிவயல் கிராமத்தை சேர்ந்தவர் லூக்காஸ் மகன் சார்லஸ் (வயது 30). இவரது உறவினர்கள் மார்கோனிராஜ் (31), லியோ. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கட்டுமாவடிக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஆடலை பகுதி அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜவேலு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சார்லஸ் பரிதாபமாக இறந்தார்.
இதில் படுகாயமடைந்த மார்கோனிராஜ், ராஜவேலு ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லியோ லேசான காயமடைந்தார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த மார்கோனிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் கடந்த 1.4.2018 முதல் ஓய்வூதியம் மூலம் பெற்ற வருமானத்துடன் இதர வகை வருமானத்தையும் சேர்த்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு மேல் வருமானம் பெற்ற ஓய்வூதியர்கள், தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மார்ச் 2018 முதல் டிசம்பர் 2018 வரை உள்ள காலத்தில் ஓய்வூதியம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிவதற்கு tn.gov.ka-ruv-o-o-l-am.in என்ற இணையதளத்தில் ECS status of pe-ns-i-o-n-ers என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக கருவூலம் சென்று ஓய்வூதிய விவரங்களை பெற வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






