என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் சினேகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட நினைத்தது. ஆனால் மக்கள் நீதி மய்யம் நினைத்தது நடக்கவில்லை. எதிர்பார்த்தவாறு கூட்டணி அமையவில்லை.
தற்போதும் தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம்.
பா.ஜ.க.வோடு காங்கிரஸ் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் ஊழல் கட்சி கிடையாது. தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறியவர் டி.டி.வி. தினகரன். அவர் அரசியல் ஆதாயத்திற்காக வெளி வந்து கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சி எந்த பயனையும் தராது.
பா.ஜ.க.வை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. கோபத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க. எதிர்ப்பு நிலை.
இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #Snehan #Congress
அறந்தாங்கி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி அளிக்கும் தொகுதியில் தான் போட்டியிடுவேன். அந்த தொகுதி ராமநாதபுரமாகவும், திருச்சியாகவும், சென்னையாகவும் இருக்கலாம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது, அனைத்து அரசுகளும் வாடிக்கையாக செய்யக் கூடிய ஒன்று தான்.
ஆனால் கடந்த 4½ஆண்டுகளாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி உதவி வழங்குவது தேர்தலை மனதில் வைத்து தான். ரூ.15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றிய மோடி, தற்போது இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் விவசாயிகளுக்காக கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பிளவு பட்டதால், தற்போது பெரும் பான்மையை இழந்துள்ள அரசைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், தமிழக அரசு பா.ஜ.க.வின் பினாமி அரசு போல செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தே அக்கட்சியை நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கிறது.
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் கெட்ட பெயர் உள்ளதால், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சேராவிட்டால், அந்த கட்சியை யாருமே சேர்க்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Congress #Thirunavukkarasar
புதுக்கோட்டை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளோடு விரைவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளனர். காங்கிரஸ் கட் சியில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து தேர்தல் பணியாற்றுவோம்.
நேரடியாக நடக்காத விஷயத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை, பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பா.ஜ.க.விற்கு கூட்டணி கட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் இருக்கின்ற கட்சிகளை விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை நிர்பந்தப்படுத்தி பயமுறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.விலேயே பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கலாம் , வைக்கக்கூடாது என்று இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #BJP
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு- 4200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் நேற்று வழங்கினர்.
இந்திய அரசின் தேசிய கடல் வனத்துறை தொழில் நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினர்.
குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் வெங்கடேசன் தலைமையில், அருள் முத்தையா, வெங்கடேசன், திருமுருகன், சுந்தர வடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆலங்குடி, நெடுவாசல், சுற்றியுள்ள கிராமங்களும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4,200 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகளை வழங்கினர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் ராமசாமி, நூலகர் வெங்கட் ரமணி, ஓய்வு ஆசிரியர் வேலு, பசுமை ராமநாதன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார். #tamilnews
மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடை வீதி வழியாக மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் முடி வடைந்தது.
ஊர்வலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பன உள்பட விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. தங்களது கட்சியை வளர்க்க அ.தி.மு.க.வை மிரட்டி குரல்வளையை நெரித்து தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை கேட்டு வருகிறது. இருப்பினும் பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு போதும் வளராது.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக இது வரை பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சில கருத்துக்களை கூறிவருவது ஏன் என்று புரியவில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று கூறிய பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கமலஹாசன் கூட்டணியில் சேரவேண்டும் என்று கூறியது ஏன்? என்று தெரியவில்லை
கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான். தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் போது நேரில் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதிலை சொல்வார்கள்.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் பல கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூட்டணிகள் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்று நிருபர்கள் கேட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் 39 தொகுதிகளையும் கேட்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். #KamalHaasan #Congress #DMK






