என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #ADMK
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2018-19 ம் நிதியாண்டில் 1½ லட்சம் பயனாளிகளுக்கு ரூ.700 கோடி மதிப்பில் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 12,000 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 77 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பில் நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட உள்ளது. இதேபோன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது அ.தி.முக. அரசு. சேலத்தில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் கால்நடை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நிலங்களில் தீவனங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக தீவனங்கள் வழங்கப்படும் கோமாரி நோய் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனை மடங்கு மரம் விழுந்ததோ அதற்கு இணையாக மூன்று மடங்கு மரங்கள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு துறை சார்பாக மரங்கள் நடப்பட உள்ளது.



    பாராளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் அமைத்துள்ள மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடப்பதால் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கும் பணி புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி அருகே நடந்து வருகிறது. விரைவில் திறப்பு விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterVijayabaskar #ADMK

    புதுக்கோட்டை அருகே பெண்களை தாக்கிய திருமயம் ஒன்றிய செயலாளரை கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கி தி.மு.க. தலைமைக்கழகம் அறிக்கை விடுத்துள்ளது. #DMK
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரிலேயே அதே பகுதியை சேர்ந்த வாசுகி என்பவர் தேங்காய், பழம் மற்றும் பூஜை பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் சரவணன். இவரது உறவினர் சிவராமன். இவரும் அதே பகுதியில் தேங்காய் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் கோவிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதையும் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

    வாசுகி நடத்தி வரும் கடையால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக சிவராமன் கூறி வந்தார். எனவே அவரை கடையை காலி செய்யுமாறு அடிக்கடி கூறி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாசுகி மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன், சிவராமன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசுகியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை தடுத்த வாசுகிக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்கள் கவுரி உள்பட 3 பேரையும் தாக்கி விட்டு, வாசுகியின் கடையையும் சூறையாடினர். பட்டப்பகலில் பலரது முன்னிலையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாசுகி, கவுரி உள்ளிட்ட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து திருமயம் போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சரவணன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் ஒன்றிய கழக செயலாளர் பெ.சரவணன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK
    அறந்தாங்கி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிறப்பு இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அறந்தாங்கி ஆவுடையார் கோவில் ரெயில்வே கேட் அருகே கீரமங்கலம் பகுதியை சேர்ந்த பெரியதம்பி மனைவி செல்லம்மாள் (வயது 55) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவர்  விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா, ரூ 1550 ரொக்கப் பணத் தையும் பறிமுதல் செய்தனர். 

    அதேப்போல வெள்ளாற்று கரையில் கஞ்சா விற்ற புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த முருகேசன் (41) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, ரூ.7200 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை அருகே தி.மு.க.வினர் பெண்களை தாக்கி கடையை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் சரவணன். இவரது உறவினர் சிவராமன்.

    இவர் திருமயம் பைரவர் கோவில் பகுதியில் தேங்காய் விற்பனை கடை நடத்தி வருகிறார். மேலும் கோவிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதையும் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

    அதே கோவில் பகுதியில் தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் வாசுகி. இவரிடம் சிவராமன் சென்று தேங்காய் கடையை காலி செய்யுமாறு கூறினார். இதற்கு வாசுகி மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்றும் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன், சிவராமன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசுகியை தாக்கினர். பின்னர் வாசுகிக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்கள் கவுரி உள்பட 3 பேரையும் தாக்கி விட்டு, வாசுகியின் கடையையும் சூறையாடினர்.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாசுகி, கவுரி உள்ளிட்ட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து திருமயம் போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே தி.மு.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த நேரத்தில் தி.மு.க.வினர் பெண்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாட்டி இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு இரு மகள்கள் இருந்தனர். அவர் இறந்துவிட்டதால் 2-வது திருமணம் செய்துள்ளார்.

    அதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. மற்றொரு மகள் மதுமிதா (வயது 20). சிறுவயதில் இருந்தே பாட்டி வீட்டில் வளர்ந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக நாமக்கல்லில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். தந்தை 2-வது திருமணம் செய்ததால் ஊருக்கு வரும்போது கூட, தந்தை வீட்டிற்கு செல்வதில்லையாம்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது பாட்டி உயிரிழந்தார். இறுதி சடங்கிற்காக ஊர் திரும்பிய மதுமிதா, அம்பேக்கர் நகரில் உள்ள சித்தி சுந்தரி வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு உறவினர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

    தந்தை 2-வது திருமணத்தால் விரக்தியில் இருந்த மதுமிதா, ஆதரவாக இருந்த பாட்டியும் இறந்ததால் மேலும் கவலை கொண்டுள்ளார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கவிநாடு கண்மாயில் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 924 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதி உள்ள காளைகளை மட்டும் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். இதேபோல மாடுபிடி வீரர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    பின்னர், ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது, பல காளைகளை வீரர்கள் அடக்கினர். அந்த நேரத்தில் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் அருகே நெருங்க விடாமல் வீரர்களை மிரட்டின.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 2 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டை காண புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள், லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர் போன்றவற்றில் வந்து கண்டு ரசித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். #Karunas #dinakaran #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாகவே நிச்சயம் இருக்கும்.

    ஏற்கனவே நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் குறித்து கலந்தாலோசனை செய்து அதன் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும்.

    பதவி என்பது மக்கள் கொடுத்தது. மக்களுக்காக எதையும் இழக்க நான் தயாராக உள்ளேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளை பெற்று எம். எல்.ஏ.வாக வருவேன்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார். அது அ.தி.மு.க.விற்கு பாதகமாக அமையும்.


    கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் தனித்து நிற்க வேண்டியது தானே.

    இதேபோன்று கடந்த மாதம் வரை பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். அவர்கள் தற்போது அ.தி. மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி மற்றும் மர்மம் என்ன?

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பதில் மத்திய மாநில அரசுகள் அரசியல் செய்து வருகிறது. உடனடியாக விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயம் மத்திய, மாநில அரசுக்கு தகுந்த பதில் அளிப்பார்கள்

    அனைத்து அரசியல் கட்சிகளும் தினகரனின் வளர்ச்சியை பொறுக்காமல் அவரை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் அவர் மேலும் பலம் பெற்று தான் வருகிறார். அவரை பா.ஜ.க. திகார் ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.

    நான் தமிழன் என்று சொல்வதில் அது மட்டுமே தகுதியாக இருக்கிறது என்று கமல் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழன் என்று கூறுவது தான் தகுதி என்றார். #Karunas #dinakaran #admk

    ஆலங்குடி அருகே தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளியில் 15 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், பெற்றோர்களுக்கும் இணக்கமான சூழல் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியரை பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்குள் அனுமதிக்க வில்லை. 

    இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் ஜோதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், பின்னர் மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர்.

    இது குறித்து பெற்றோர்கள் கூறியபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி, வழைக்கொல்லை அரசு தொடக்கப்பள்ளியில்  பணியாற்றி வந்தார். இக்கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அப்பள்ளிக்கு ஒரு மாணவர் கூட வரவில்லை. அதனால் பனங்குளம் கிழக்கு தொடக்கப்பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அத்தகைய போக்கையே அவர் கையாளுவதால் இந்த பள்ளிக்கும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அவரை இடமாற்றம்  செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். என்றனர். 
    தகவல் அறிந்து வந்த திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் மற்றும்கீரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
    கந்தர்வகோட்டை அருகே கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய விவசாயியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்த போது தப்பி ஓடினார்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டையை அடுத்துள்ள மட்டங்கால் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). விவசாயி. இவர் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் தனது வீடு பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அரசின் நிவாரண உதவி கேட்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் நிவாரணம் கொடுக்கப்படவில்லை. 

    இந்நிலையில் இது சம்பந்தமாக விசாரிக்க நடராஜன் நேற்று மாலை 5 மணி அளவில் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக உதவியாளர் துரையிடம் தாசில்தாரை நேரில் பார்க்க வேண்டும் என்றும், தனக்கு ஏன் நிவாரணம் வழங்காமல் காலதாமதம் செய்கிறீர்கள் என்றும் நடராஜன் கேட்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக உதவியாளர் துரை அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறுகின்றது சிறிது நேரம் கழித்து வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக உதவியாளர் துரை கந்தர்வகோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நடராஜனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது நடராஜன் டீ குடித்து வருவதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தப்பி ஓடிய நடராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை காந்தி நகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதேபோல குடிசைகள், ஓட்டு வீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், புயல் நிவாரண பொருட்களும், தென்னை, வாழை மரங்கள் சாய்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விவசாயம், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள வீடுகளை கணக்கெடுத்து சென்ற அதிகாரிகள், உங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என கூறி சென்றனர். ஆனால் இதுநாள் வரை காந்திநகரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து, காந்திநகரில் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன் என புதிதாக பொறுப்பெற்று கொண்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, புதுக்கோட்டை கலெக்டராக பணியாற்றி வந்த கணேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பொறுப்பெற்று கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கிய மாவட்டம். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டு உள்ள மாவட்டம் புதுக்கோட்டை. அரசின் திட்டங்கள் யாவும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், பின்தங்கி உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல நான் பணியாற்றுவேன்.

    இதேபோல கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரையில் நிவாரணம் கிடைக்காத மக்களுக்கு, புயல் நிவாரணம் கிடைக்கவும், புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையான கூடுதல் உதவிகளை அரசிடம் கேட்டு பெறுவதோடு, மக்களின் மறுவாழ்விற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கினர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் ஒன்றியம் குளவாய்ப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான புத்தகம், மேஜை, பீரோ, மின்விசிறி, மரக்கன்றுகள், சிந்தனை புத்தகங்கள், முதலுதவி பெட்டி, ஸ்பீக்கர் மைக், எழுது பொருட்கள், கணித பெட்டி, குப்பைத்தொட்டி, கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் பொருட்களையும், குளவாய்ப்பட்டி திடலில் இருந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக பள்ளிக்கு வந்தடைந்தனர்.

    இதைதொடர்ந்து பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிம்சன் பாஸ்டீன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சண்முகநாதன் வரவேற்றார். இதில் வட்டாரகல்வி அலுவலர் பொன்னழகு, துரையரசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜன் மற்றும் பெற்றோர்கள் சார்பில் செல்வம், அடைக்கலம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கொண்டு வந்த பொருட்களை பெற்றோர்கள், தலைமையாசிரியரிடம் வழங்கினர். இதில் ஆசிரியர்கள், கல்பனா, பாண்டியம்மாள், சரவணக்குமார், விஜயக்குமார், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஆணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர் துரையரசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளிக்கு தேவையான பல்வகையான கல்வி உபகரணங்களை பொதுமக்கள் கொண்டு வந்து தலைமை ஆசிரியர் பழனிக்கண்ணுவிடம் வழங்கினர். இதில் வட்டார வள மைய பயிற்றுனர் கோவிந்தராசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பின்னங்குடி, சீகம்பட்டி, ஆணைப்பட்டியை சேர்ந்த பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீரனூர் அருகே உள்ள விசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குன்றாண்டார்கோவில் வட்டார கல்வி அலுவலர் துரைராசு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி மலர் விழி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எஸ்தர் லில்லி வரவேற்றார். பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர். இதில் மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சாந்தி, பெருமாள், பிரசன்னா, கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஆரோக்கிய மேரி நன்றி கூறினார். 
    ×