search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்களை தாக்கி கடை சூறை - திருமயம் ஒன்றிய செயலாளர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்
    X

    பெண்களை தாக்கி கடை சூறை - திருமயம் ஒன்றிய செயலாளர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்

    புதுக்கோட்டை அருகே பெண்களை தாக்கிய திருமயம் ஒன்றிய செயலாளரை கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கி தி.மு.க. தலைமைக்கழகம் அறிக்கை விடுத்துள்ளது. #DMK
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரிலேயே அதே பகுதியை சேர்ந்த வாசுகி என்பவர் தேங்காய், பழம் மற்றும் பூஜை பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் சரவணன். இவரது உறவினர் சிவராமன். இவரும் அதே பகுதியில் தேங்காய் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் கோவிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதையும் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

    வாசுகி நடத்தி வரும் கடையால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக சிவராமன் கூறி வந்தார். எனவே அவரை கடையை காலி செய்யுமாறு அடிக்கடி கூறி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாசுகி மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன், சிவராமன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசுகியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை தடுத்த வாசுகிக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்கள் கவுரி உள்பட 3 பேரையும் தாக்கி விட்டு, வாசுகியின் கடையையும் சூறையாடினர். பட்டப்பகலில் பலரது முன்னிலையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாசுகி, கவுரி உள்ளிட்ட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து திருமயம் போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சரவணன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் ஒன்றிய கழக செயலாளர் பெ.சரவணன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK
    Next Story
    ×