என் மலர்
புதுக்கோட்டை
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதி கீழ்பாதி மற்றும் மேல்பாதி பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வரவில்லை, மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டியும் முறையாக பாராமரிக்கவில்லை, அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் எடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை.
இது குறித்து திருவரங்குளம் ஆணையரிடமும், ஊராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலங்குடி அருகே மரமடக்கி சாலையில் வன்னியன் விடுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மற்றும் வருவாய் அலுவலர் சாந்தி, ஊராட்சி அதிகாரி வனிதா, கிராம நிர்வாக அலுவலர் ராமையா ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் சித்ரவதை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் மாணவர் அமைப்பை சேர்ந்த ஒரு சிலர் இந்த போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி போலீசார் அந்த மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. மேலும் கல்லூரிக்குள் இருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கோஷங்கள் எழுப்பியவாறு வெளியில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால் அவர்களை வெளியே விட கல்லூரி ஆசிரியர்கள் மறுத்ததோடு கல்லூரி கதவையும் பூட்டினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவிகள் கலைந்து செல்லாமல் கல்லூரிக்குள்ளேயே நின்றபடி கோஷங்களை எழுப்பியவாறு பூட்டப்பட்ட அந்த கல்லூரி கதவை திறந்தனர். பின்னர் மாணவிகள் வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தூண்டியதாக மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலீஸ் வாகனத்தை சிறை பிடித்ததோடு நான்கு புறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் அரைமணி நேரம் நீடித்தது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கைது செய்யப்பட்ட 3 மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் தங்களுக்கு கிடைத்த வெற்றி என மாணவிகள் கோஷமிட்டபடி போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். ஆனாலும் மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #PollachiAbuseCase
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தவறாது அளித்திடும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு உள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 5 நிமிடம் 10 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பர படம், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த விழிப்புணர்வு விளம்பர படம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.
இதை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இதேபோல உள்ளூர் கேபிள் டி.வி.களிலும், திரையரங்குகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர படம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த வீராளிப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் (28). மரம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
சம்பவத்தன்று விஜய் ஆட்டோவில் பார்த்தீபன் புதுக்கோட்டைக்கு சென்றார். கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது ஆட்டோ மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி அருகே சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தத்ரூபமாக உலோக சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து பேசினார். முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 13 புதிய அதிநவீன அரசு பஸ்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் மற்றும் செவிலியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கி பேசினார்.
தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட நினைவு சின்னத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு விரைவில் 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதேபோல் சிசு பராமரிப்பு மையங்களில் 640 சிறப்பு செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். தமிழகத்திலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலை புதுக்கோட்டையில் மட்டும்தான் அமைக் கப்பட்டு உள்ளது, என்றார். #MinisterVijayaBhaskar
புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 13-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக கன்னியாகுமரிக்கு வருகிறார். அந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வரும் 15-ந்தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் காங்கிரஸ் பேச்சாளர்களின் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த எந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு தி.மு.க.வில் பேசி முடிவு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து ஆணையம் நடத்த வேண்டும். இதனால் தேர்தல் ஆணையத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் செலவு மிச்சப்படும்.
அ.தி.மு.க. 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கு அச்சப்படுகிறது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டப்படி 21 சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் எடுக்கும் விதிமுறைகள் குறித்த நடவடிக்கையால் தேர்தல் முறையாக நடக்கும் என்ற வரவேற்பு இருந்தாலும் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை உடனுக்குடன் அறிவிக்கக் கூடாது.
தற்போது தேர்தல் ஆணையம் போட்டியிடும் வேட்பாளர்கள் ஐந்து வருடம் வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தடையாக இருக்கக்கூடும். எனவே முன்கூட்டியே விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
தே.மு.தி.க. கூட்டணி விவகாரத்தில் துரைமுருகன் எந்தவிதமான தவறும் செய்யவில்லை. அவர் நடந்தவற்றை தான் கூறியுள்ளார்.
தினகரன் அணியுடன் யாரும் கூட்டு சேரவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், நான் தினகரன் ஆதரவாளர் இல்லை என்றும், ஏற்கனவே நான் தினகரன் ஆதரவாளர் என்ற தோற்றம் உள்ளது என்றார்.
ரபேல் போர் விமான கோப்புகள் கூட பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத மத்திய அரசு இந்திய நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். இதிலிருந்து ஊழல் நடந்துள்ளது என்று உறுதி ஆகிறது.
தேர்தல் ஆணையம் கெடுபிடியால் தேர்தல் முறையாக நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் துணை முதல்வர் தபால் வாக்குகளுக்கு எவ்வளவு பணம் அளிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுடன் பேசும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இது மோசமான முன்னுதாரணம். தபால் வாக்குப் போடும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு ஆளுங்கட்சி துணிந்து விட்டது. மக்களுக்கு இதை விட அதிக அளவு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சூழ்நிலையில் தான் அ.தி.மு.க. இருக்கும். எனவே தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா. வந்தால் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், முதலில் அவர் வரட்டும், அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றார். #Congress #Thirunavukkarasar
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள மெய்யனம் பட்டி, தளிஞ்சி, கதவம் பட்டி, கிளிக்குடி, பரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகள் அடங்கிய மனுக்களை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
18 ஆண்டுகால தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அப்போது தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்தால் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பயனற்ற கூட்டணி. அந்த கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள். அதற்காகத்தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க. பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் தே.மு.தி.க. தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறித்து துரைமுருகன் விமர்சித்திருப்பது அநாகரிகமான செயல். இதை வைத்தே தி.மு.க. எப்படிப்பட்ட கட்சி என்று தெரிய வருகிறது. இவர்கள் வந்தால் மொழியையோ இனத்தையோ காப்பாற்ற முடியாது. ஸ்டாலின் கற்பனையில் பேசி வருகிறார். ஸ்டாலினால் அவர் வீட்டில் உள்ள பிரச்சனைகளையே தீர்க்க முடியவில்லை, நாட்டில் உள்ள பிரச்சனைகளையா தீர்க்க போகிறார்கள்.
ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பா.ஜ.க. அ.தி.மு.க. நட்புடன் தான் இருந்து வருகிறது. இருந்தாலும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால்தான் நானும் அவர்களை விமர்சனம் செய்தேன். ஆனால் மத்திய பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை. அ.தி.மு.க.வோடு விருப்பப்பட்டே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. விருப்பம் இல்லாமலா குமரிக்கு வந்த பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினார்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #ADMK #ThambiDurai #DMDK
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருவரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பூமாலை என்பவரின் மகள் மாலாஸ்ரீ (வயது 21), சிவில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் மண்டையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாக்கிளி என்பவர் மகன் முகமது இம்ரான் (21). இவர் மாலாஸ்ரீயுடன் அதே வகுப்பில் படித்து வருகிறார். கடந்த 25-ந்தேதி கல்லூரி வகுப்பறையில், ஓய்வு நேரத்தில் தலைவலிப்பதாக கூறிய மாலாஸ்ரீ, முகமது இம்ரான் பேக் இருந்த மேஜை மீது தலை வைத்து படுத்திருந்தார்.
இதனைப்பார்த்த முகமது இம்ரான் ஆத்திரத்தில் மாலாஸ்ரீ திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற மாணவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாலாஸ்ரீ, மண்டையூரில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்று எலி மருந்தை தின்றுவிட்டார். உயிருக்கு போராடிய அவரை மற்ற மாணவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலாஸ்ரீ இறந்தார்.
இதுகுறித்து மண்டையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல், மாணவன் முகமது இம்ரான் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முகமது இம்ரானின் தந்தை ராஜாக்கிளி புதுக்கோட்டையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் வருவாய் துறையினர் மூலம் கணக்கு எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு அவர்களது வங்கி கணக்கில் நிவாரணதொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் வழங்கப்பட்ட போது மாவட்ட முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் நிவாரண தொகை ஏற்றப்பட்ட நிலையில், வருவாய்துறையினர் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் போக, மீதம் வழங்கப்பட வேண்டிய நிவாரண பொருட்கள் அனைத்தும் இலுப்பூர் மேலப்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண தொகை மட்டும் பெற்று பொருட்கள் வழங்கப்படாத நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
இதனை அறிந்த அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இலுப்பூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் முதலில் கணக்கு எடுத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






