என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை கோவில் திருவிழாவையொட்டி வருகிற 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 27-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 28-ந்தேதி பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    கறம்பக்குடி அருகே லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு (வயது 35).இவரது மனைவி சூரியகலா (27). இந்த தம்பதிக்கு 2 குழந் தைகள் உள்ளனர். பாலகுரு சிங்கப்பூரில் வேலை பார்த்து பார்த்து விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்நிலையில் பாலகுருவும் அவரது மனைவி சூரியகலாவும் மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.  

    கறம்பக்குடி அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளிலில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் பாலகுரு, சூரியகலா படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சூரியகலா பரிதாபமாக  இறந்தார். பாலகுரு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தேர்தலில் வாக்களிப் பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பழைய பஸ் நிலையம், கீழராஜா வீதி, பிருந்தாவனம், பால் பண்ணை, அரசு மகளிர் கலைக்கல்லூரி, புதிய பஸ் நிலையம் வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோரும் ஓடினர்.

    இதைதொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 77.37 சத வீதமும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது 76.45 சத வீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளின் படி வாக்காளர்கள் அனைவரும் விடுபடாமல் வாக்களிப்பதை வலியுறுத்தி அனைத்து தாலுகாக்களிலும் ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஊர்வலம், மனித சங்கிலி, துண்டு பிரசுரங்கள், பதாகைகள், சுவரெட்டிகள் ஆகியவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயது முதல் 21 வயது வரையிலான வாக்காளர் களின் வாக்குப்பதிவை அதி கரிக்கும் விதமாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. வாரச்சந்தை, தினசரி சந்தை, வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே வாக் காளர்கள் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தலின் போது தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அறந்தாங்கி அருகே பால் அருந்தும் 1½ வயது குழந்தைக்கு தாயே மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அறந்தாங்கி:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி நடாயி (வயது 42). பிச்சை எடுக்கும் தொழில் செய்து வரும் அவர், கிடைக்கும் வருமானத்தில் தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    இவர் நேற்று காலை அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மது பாட்டிலில் இருந்து மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் தான் மடியில் வைத்திருந்த ஒன்றரை வயது கைக்குழந்தையின் வாயில் மதுவை ஊற்றியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வந்து நடாயியையும், குழந்தையையும் மீட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் புதுக்கோட்டை சைல்டுலைன் திட்ட இயக்குனர் லில்லிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சைல்டுலைன் பணியாளர்கள் ரஞ்சிதா, முருகேஸ்வரி ஆகியோர் வந்து, மது போதையில் இருந்த நடாயியையும், ஒன்றரை வயது குழந்தையையும் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர். அறந்தாங்கியில் ஒன்றரை வயது குழந்தைக்கு தாயே மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் தற்போது மதுபானம் பெட்டிக்கடைகளில் கூட சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மது விலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கண்டுகொள்வதில்லை.

    அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மதுவிற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. 24 மணி நேரமும் மதுபானம் தடையின்றி கிடைப்பதால், இளைஞர்கள் பலர் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு பதிலாக மது புகட்டியது பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

    குழந்தைக்கு மது கொடுத்தது பற்றி நடாயி கூறுகையில், மது அருந்தும் தான் போதையில் மயங்கி விட்டால், ஒன்றரை வயது குழந்தை எங்காவது சென்று விடும் என்பதால், அந்த குழந்தைக்கும் மது கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதாக கூறியுள்ளார்.
    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 180 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 விசைப்படகில் சென்ற அதே ஊரை சேர்ந்த பிரசாந்த் (வயது 25), கலைமணி (39), சக்தி (45), விஜயசுந்தர் (25), பிரேம்குமார் (25), தினேஷ் (26), பன்னீர்செல்வம் (27), முத்து (50), சந்திரன் (40), கணேசன் (48), முருகன் (32) ஆகிய 11 மீனவர்களும் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது 3 விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 11 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நம் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போதே அவர்கள் (இலங்கை) எல்லையில் மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களை கைது செய்கின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது கைது செய்த 11 மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமராகவும், மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் ஆவார்கள் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். #KartiChidambaram #RahulGandhi #MKStalin
    திருமயம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிக்கான வேட்பாளர்கள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்டனர்.

    இதில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி சென்னையில் நிருபர்களிடம் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (நேற்று) மாலை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    அதன்படி நேற்று மாலை சிவகங்கை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் கார் மூலம் சிவகங்கை தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

    வழியில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சாலையில் பைரவர் கோவிலில் வழிபாடு நடத்தினர். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். அதேபோல் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

    கோப்புப்படம்

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தொழில் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை. எனவே தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவர் சிவகங்கை புறப்பட்டு சென்றார். #KartiChidambaram #RahulGandhi #MKStalin
    அறந்தாங்கி அருகே இன்று பெட்ரோல் பங்க் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பட்டுக்கோட்டை சாலையில் எருக்கனகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நேற்று இரவு பணியில் சுவாதிராஜன், அருள், கார்த்தி ஆகியோர் இருந்தனர். நள்ளிரவில் அவர்கள் விற்பனை முடிந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு பங்க் அருகே உள்ள அறையில் தூங்க சென்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பெட் ரோல் பங்கிற்கு வந்தனர். அவர்கள் கையில் இரும்பு பொருட்கள் வைத்திருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பங்கின் அலுவலக அறை கண்ணாடிகளை உடைத்தனர்.

    அருகில் இருந்த அறையில் தூங்கி கொண்டிருந்த ஊழியர்களுக்கு இது தெரியவில்லை. இதற்கிடையே அந்த மர்ம நபர்கள் அலுவலக அறைக்குள் புகுந்து அங்கு கல்லாவில் இருந்த விற்பனை பணம் ரூ.1½ லட்சம் மற்றும் கம்ப்யூட்டர் சி.பி.யு.வையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இன்று காலை ஊழியர்கள் எழுந்து பார்த்தபோதுதான் கொள்ளை நடந்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதேபோல் அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை கிராமத்தில் உச்சி மாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நள்ளிரவில் இந்த பகுதியில் மர்ம நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதை மக்கள் உணர்ந்தனர்.

    உடனே உஷாரடைந்த அவர்கள் திரண்டு சென்று பார்த்தனர். அப்போது அங்கு விழுப்புரம் மாவட்டம் அரசூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்தபோது மது போதையில் இருந்தார். மேலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

    அதே சமயம் கோவிலில் சென்று பார்த்தபோது அங்கு, உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வெங்கடேசனை கைது செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் நடந்த பெட்ரோல் பங்க் கொள்ளையிலும் வெங்கடேசனுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆலங்குடி அருகே முன்விரோத தகராறில் பெண்ணை உருட்டுகட்டையால் தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள தெற்கு தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 52). மருமகள் சுசீலா (32). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி (58). இவருக்கும் ஆண்டியப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். 

    இந்நிலையில் சம்பவதன்று வீரம்மாள் மற்றும் சுசிலா, ரெங்கசாமியின் வீட்டின் அருகே நடந்து சென்றனர். அப்போது இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டன் (20) ஆகியோர் உருட்டு கட்டையால் வீரம்மாளை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து வீரம்மாள் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய ரெங்கசாமி மற்றும் அவரது மகன் மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    அறந்தாங்கி அருகே டி.எஸ்.பி.யிடம் தகராறு செய்து செல்போனில் படம்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அடுத்த மூக்குடி பொற்குடையார் பகுதியில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முறையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனரா? என அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா நேற்று இரவு ரோந்து சென்றார். 

    அப்போது செல்போன் பேசியபடி ஒருவர் பைக்கில்  வந்துகொண்டிருந்தார். இதனைப்பார்த்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 27) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டக்கூடாது என அறிவுரை கூறினர். அப்போது அவர் தனது செல்போன் கேமராவை வைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்வியெழுப்பியுள்ளார். அப்போது டி.எஸ்.பி. கோகிலா உள்ளிட்ட அனைத்து போலீசாரையும் படம் எடுத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து டி.எஸ்.பி. கோகிலா அறந்தாங்கி இன்ஸ்பெக்டரிடம் இது குறித்து புகார் செய்தார். போலீசார் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, முகமது அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கறம்பக்குடி அருகே புளியமரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    ஆலங்குடி:

    கறம்பக்குடி அருகே தீத்தானிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சூர்யா (வயது 16). இவர் மழையூர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் தனது வீட்டில் அருகில் உள்ள புளியமரத்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மழையூர் காவல் சப்- இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மாணவன் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய ரூ.17.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது.

    அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது அவர் வீரடிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், அந்த பணத்தை கந்தர்வக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அருள் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, வெளிநாட்டு பணத்தை பண பரிமாற்றம் செய்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்து கமி‌ஷன் பெறுவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் கூறினார்.

    இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் அந்த பணத்தை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் அருளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #LSPolls

    அறந்தாங்கி அருகே குறி சொல்லுவதாக கூறி செல்போன் மற்றும் பணத்தை பறித்த கும்பலை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    அறந்தாங்கி:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டி என்ற ஊரை சேர்ந்த மகாலிங்கம், ஆறுமுகம், செல்வம், ராஜசேகர், ராஜேஷ், காளியப்பன், சுந்தரம், செந்தில்குமார் மற்றும் 4 பெண்கள் அடங்கிய ஒரு குழுவினர் அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டை கடைவீதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று குறி சொல்லி வந்தனர்.

    இந்நிலையில் மாங்குடி கிராமத்திற்கு 8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் சென்று, அங்குள்ள பொது மக்களிடம் குறி சொல்லினர்.

    பின்னர் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை ஏமாற்றி பணம், மோதிரம், செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொண்டு, ஆவணத்தான் கோட்டைக்கு சென்று விட்டனர்.

    இதைத் தொடர்ந்து பணம், நகை, செல்போன் போன்றவற்றை குறிசொல்பவர்கள் பறித்துச் சென்றதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள்ஆவணத்தான்கோட்டைக்கு சென்று, பணம், நகை,செல்போன்களை பறித்துச் சென்றவர்களை பிடித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் மீட்கபட்டது.

    இது குறித்துஅறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    ×