என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவச பேட்டரி கார் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக குடிதண்ணீர் தொட்டி அந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளிகள் பிரிவு வரை நோயாளிகளும், நடக்க இயலாதவர்களும் செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கடும் வெயிலினால் மக்களும் நோயாளிகளும் அவதிப்படுவதை கருத்தில் கொண்டு ஒரே நாளில் இந்த நிழற்குடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நகராட்சியின் துணையோடு குடி தண்ணீர் தொட்டி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக ஏற்படுத்தி தந்த நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் கோடை கால வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பஸ் நிறுத்தத்திலிருந்து உள்நோயாளி பிரிவு வரை செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உள்நோயாளி பிரிவிற்கு எதிரிலும் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறினார். இந்த ஆய்வின் போது மருத்துவர் ரவிநாதன் மற்றும் உதவி மருத்துவர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
    அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அவருடைய மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு செய்துள்ளார்.

    மேலும் அவர்களை, அவர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த அவருடைய 17 வயது மகன், எதற்காக எனது தங்கைகள் மற்றும் தாயை அடித்து விரட்டுகிறீர்கள் என்று தந்தையிடம் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து, மகனை அடிக்க பாய்ந்தார். அப்போது மகன் கட்டையை பறித்து, தந்தையின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அடுத்து உள்ள புதுக்குளத்தின் அருகே நேற்று மாலை பொது மக்கள் நடந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு வாலிபரின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தது புதுக்கோட்டை காமராஜபுரம் 14-ம் வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (22) என்றும், புதுக்கோட்டையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் காதல் விவகாரத்தில் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரி மகன் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. 

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த குமார், கோமதியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த கோமதி வீட்டில் கிடந்த அரளைக்கல்லை தூக்கி குமாரின் தலை மீது போட்டார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மீது மனைவி அரளைக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
    பொன்னமராவதி:

    சிவகங்கை மாவட்டம், சுல்லாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதி அருகே பெருமாள் கோவில் பின்புறத்தில் கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், சுல்லாம்பட்டியை சேர்ந்த தினேஷ் (28) என்பவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாக தம்பிதுரை எச்சரித்துள்ளார். #LokSabhaElections2019 #Thambidurai
    புதுக்கோட்டை:

    கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனக் கணைகளை வீசி வருவதால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

    அவ்வகையில், சமீபத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு சொந்தமான 45 கல்லூரிகள் இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரும் தங்கள் பிரசாரத்தில் இதனை குறிப்பிட்டனர்.

    இந்நிலையில் கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதுக்கோட்டை மாவட்டம் நவம்பட்டியில் அளித்த பேட்டி வருமாறு:-



    எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு தொடருவேன். எனக்கு சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாக ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார். எனக்கு 45 கல்லூரிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஸ்டாலின் விலக தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Thambidurai
    அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #PeriyarStatueVandalised
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே 8 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு தி.க. தலைவர் கி.வீரமணி இந்த சிலையை திறந்து வைத்தார்.

    பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பெரியார் சிலை சாக்குகளால் போர்த்தி மூடி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறைந்த பழைய தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் மூடி வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சாக்குகள் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். சிலையின் தலைபகுதியை இரண்டு துண்டுகளாக உடைத்து அதே இடத்தில் வீசி இருந்தனர்.



    காலையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறந்தாங்கி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதனும் வந்தார்.

    பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தி.க. அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் யோகராஜ் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. கோகிலா ஆகியோரும் வந்து விசாரித்தனர்.

    இதற்கிடையே தி.க. மண்டல தலைவர் ராவணன் தலைமையில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கட்சியினர் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். உடனடியாக பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அறந்தாங்கியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதையும் மீறி இன்று அதிகாலை பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதை இந்து முன்னணியினர் கண்டித்தனர். இதில் பயங்கர மோதல் உருவானது.

    அதேபோல் இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  #PeriyarStatueVandalised
    குறை சொல்வதில் புகழ் பெற்ற மு.க.ஸ்டாலினை ஒட்டு மொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர் என்று பிரேமலதா பேசியுள்ளார். #premalatha #mkstalin

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் குறைசொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். அதனால்தான் அவரை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்கின்றனர். அவரை குறை சொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின் என்று அழைப்போம். பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். ஆனால் அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூற முடியுமா?

    சாதிக்பாட்சா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார்? என்று மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டு கொடநாடு பிரச்சினை குறித்து பேசட்டும். 2011ல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து அமைத்த அதே கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #premalatha #mkstalin

    மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தெம்மாவூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா (24). நிறைமாத கர்ப்பிணியான கவிதா கடந்த 20  நாட்களுக்கு முன்பு  பிரசவத்தின் போது இறந்து விட்டார். இவருக்கு பெண் குழந்தை பிறந்து மருத்துவமனையில் உள்ளது.

    இதனால் மனமுடைந்த முத்துக்குமார் தூக்குபோட்டும், மருந்து குடித்தும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி விட்டனர். இந்நிலையில் நேற்று கீரனூர் ரெயில்வேகேட் அருகே காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கறம்பக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் முத்தரசன் கூறினார்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரசார பொதுக்கூட்டம் கறம்பக்குடி வள்ளுவர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது நாட்டில் இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது.

    தற்போது நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியில் கருத்துரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு அளித்துள்ள பாதுகாப்பு பறிபோய் உள்ளது. இந்த நிலை, தொடர வேண்டுமா, இல்லை உண்மையான ஜனநாயக கட்சி, கருத்து சுதந்திரம் உள்ள அரசு அமைய வேண்டுமா என்பது தான் தற்போதைய பிரச்சினை.

    தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை பிரதமர் மோடி அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார். எதிர்கட்சிகளை மிரட்ட வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் தவறாக கொண்டு செல்லப்படுகிறது. பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகவே எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது.

    முதல்-அமைச்சர் பழனிசாமி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார். அரசுக்கு எதிராக கருத்து சொன்ன முகிலன் காணாமல் போய்விட்டார். திருமுருகன் காந்தி, கல்லூரி மாணவி வளர்மதி போன்றோர் மீது வழக்கு போட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியினர் தேர்தல் விதி முறைகளை மீறி வருகின்றனர். முதல்-அமைச்சர் பிரசாரத்தில் அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் செங்கோடன், ராமதாஸ், நாராயணன், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கராசு நன்றி கூறினார். 
    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள இரவு உணவு விடுதிகள், தள்ளுவண்டி கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள இரவு உணவு விடுதிகள், தள்ளுவண்டி கடைகளில் சாம்பார் மற்றும் சட்னி பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் சுகாதார ஆய்வாளர் சேகர், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஆத்மநாதன், ஆசைத்தம்பி, மெய்யநாதன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் அனைத்து இரவு உணவு விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் தடை செய்யப்பட்ட 50 கிலோ சாம்பார் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  ரூ.7500 அபராதம் விதிக்கப்பட்டது .  தொடர்ந்து இதுபோல் சட்னி, சாம்பார்  கவர்களில் வைத்து விற்பனை செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் முக ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று ப. சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaran #rahulgandhi #mkstalin

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரியாளூர் விலக்கு ரோடு பகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.

    அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராவார். இதைத்தான் தமிழக மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.


    எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் மனதில் வைத்து தயாராக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நாடு சோதனையில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி பிரதமரானார்.

    அவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொல்லாத வாக்குறுதிகளான பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றை கொண்டு வந்து இந்த நாட்டையே நாசப்படுத்தி விட்டார்.

    மதவெறி கொண்ட மோடி நாட்டை மதங்களின் பெயரால் தூண்ட நினைக்கிறார். இந்தியாவில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து பல லட்சம் பேர் வேலை இழக்க காரணமாகி விட்டார்.

    கஜா புயலின்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை நேரில் சென்று நான் பார்வையிட்டேன். ஆனால் நாட்டின் பிரதமர் பெயரளவிற்குகூட வந்து செல்லவில்லை. ஒரு வேளை புதுக்கோட்டை தனி நாடாக இருந்தால், வந்திருப்பார்போல. மத்தியில் காங்கிரஸ் கட்சியும், அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்தவுடன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான நிவாரணம் வழங்கப்படும்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பார்த்து, இதை எப்படி செயல்படுத்த முடியும் எனக்கேட்ட பா.ஜ.க. இப்போதும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் எப்படி ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் எனக்கேட்கிறது. காங்கிரஸ் கட்சியும், நானும் என்றும் முடியாததை சொல்ல மாட் டோம். சொல்லியதை பா. ஜ.க. போல செய்யாமல் இருக்க மாட்டோம்.

    நிச்சயம் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். அதை காங்கிரஸ் செய்து காட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #pchidambaran #rahulgandhi #mkstalin

    ×