search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aranthangi mother arrest"

    அறந்தாங்கி அருகே பால் அருந்தும் 1½ வயது குழந்தைக்கு தாயே மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அறந்தாங்கி:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி நடாயி (வயது 42). பிச்சை எடுக்கும் தொழில் செய்து வரும் அவர், கிடைக்கும் வருமானத்தில் தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    இவர் நேற்று காலை அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மது பாட்டிலில் இருந்து மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் தான் மடியில் வைத்திருந்த ஒன்றரை வயது கைக்குழந்தையின் வாயில் மதுவை ஊற்றியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வந்து நடாயியையும், குழந்தையையும் மீட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் புதுக்கோட்டை சைல்டுலைன் திட்ட இயக்குனர் லில்லிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சைல்டுலைன் பணியாளர்கள் ரஞ்சிதா, முருகேஸ்வரி ஆகியோர் வந்து, மது போதையில் இருந்த நடாயியையும், ஒன்றரை வயது குழந்தையையும் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர். அறந்தாங்கியில் ஒன்றரை வயது குழந்தைக்கு தாயே மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் தற்போது மதுபானம் பெட்டிக்கடைகளில் கூட சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மது விலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கண்டுகொள்வதில்லை.

    அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மதுவிற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. 24 மணி நேரமும் மதுபானம் தடையின்றி கிடைப்பதால், இளைஞர்கள் பலர் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு பதிலாக மது புகட்டியது பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

    குழந்தைக்கு மது கொடுத்தது பற்றி நடாயி கூறுகையில், மது அருந்தும் தான் போதையில் மயங்கி விட்டால், ஒன்றரை வயது குழந்தை எங்காவது சென்று விடும் என்பதால், அந்த குழந்தைக்கும் மது கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதாக கூறியுள்ளார்.
    ×