என் மலர்
செய்திகள்

வகுப்பறையில் மாணவர் தாக்கியதால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருவரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பூமாலை என்பவரின் மகள் மாலாஸ்ரீ (வயது 21), சிவில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் மண்டையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாக்கிளி என்பவர் மகன் முகமது இம்ரான் (21). இவர் மாலாஸ்ரீயுடன் அதே வகுப்பில் படித்து வருகிறார். கடந்த 25-ந்தேதி கல்லூரி வகுப்பறையில், ஓய்வு நேரத்தில் தலைவலிப்பதாக கூறிய மாலாஸ்ரீ, முகமது இம்ரான் பேக் இருந்த மேஜை மீது தலை வைத்து படுத்திருந்தார்.
இதனைப்பார்த்த முகமது இம்ரான் ஆத்திரத்தில் மாலாஸ்ரீ திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற மாணவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாலாஸ்ரீ, மண்டையூரில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்று எலி மருந்தை தின்றுவிட்டார். உயிருக்கு போராடிய அவரை மற்ற மாணவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலாஸ்ரீ இறந்தார்.
இதுகுறித்து மண்டையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல், மாணவன் முகமது இம்ரான் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முகமது இம்ரானின் தந்தை ராஜாக்கிளி புதுக்கோட்டையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.






