search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
    X

    சங்கரன்கோவிலில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

    • சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.
    • இந்த கடை அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணசுவாமி கோவில் துணைக்கோவிலான முப்புடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.


    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே ராஜபாளையம் மெயின் ரோட்டில் முப்புடாதி அம்மன் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடை அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. மேலும் சங்கரநாராயணசுவாமி கோவில் துணைக்கோவிலான முப்புடாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் மது குடிப்பவர்களின் நடவடிக்கையால் பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் பக்தர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசலிலே அமர்ந்து மது குடிப்பதால் பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அரசு மதுபான கடையை அகற்ற கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை அரசு மதுகடையை அகற்றக்கோரி நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், அய்யப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் திடீரென்று கடை முன்பு முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உரிய அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என்று கூறினார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் தாசில்தார் பாபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களின் போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×