search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி 12-வது வார்டு  பொதுமக்கள்  மேயரிடம் கோரிக்கை மனு
    X

    12-வது வார்டு சார்பாக மனு கொடுத்த காட்சி.

    நெல்லை மாநகராட்சி 12-வது வார்டு பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை மனு

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். 12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    12-வது வார்டுக்கு உட்பட்ட மேகலிங்கபுரம் வடக்கு தெருவில் கழிவுநீர் ஓடையை அகலப்படுத்தி இருபுறமும் தடுப்புசுவர் அமைக்க வேண்டும். மேகலிங்கபுரம், உடையார்பட்டி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றிதிரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜ்நகர்-உடையார்பட்டி மெயின்ரோட்டில் பொதுகுடிநீர் குழாய் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. எனவே அங்கு அடிபம்பு அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் கொடுத்த மனுவில், டவுன் கல்லணை மாநகராட்சி தொடக்கப்பள்ளியை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் அருகில் உள்ள பாரதியார் மாநகராட்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே உடனடியாக அங்கு போதிய அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கே.டிசி. நகர் பகுதியை சேர்ந்தவர்கள் முன்னாள் அரசு வக்கீல் அன்பு என்ற அங்கப்பன் தலைமையில் கொடுத்த மனுவில், 37-வது வார்டுக்குட்பட்ட விஷ்வசூர்யாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் வாகன காப்பகம் அமைக்க வேண்டும். கே.டி.சி. நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    9-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில், வார்டுக்குட்பட்ட பாளையங்கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் அதில் விழும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×