என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பொறையாறு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கிராம உதவியாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம், பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் கீழவீதியை சேர்ந்தவர் சீமான் (வயது 50). இவர் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் சீமானுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக பொறையாறில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

    சீமானின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சீமானுக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த சீமான், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
    நாகப்பட்டினத்தில் கடலில் உயிரிழந்த மீனவர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் கலெக்டர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 9 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 216 என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டது.

    கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி, மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மினி கப்பல் தரை தட்டி நின்றது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை மீன் பிடி துறைமுகத்திற்கு மேற்கே கம்போஸ் என்ற இடத்தில் கடல் கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மினி கப்பல் சேற்றில் தரை தட்டி நின்றது.

    அதில் தேசிய கொடி பறந்தது. இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. மினி கப்பலில் 10 பேர் வரை இருந்தனர்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு மற்றும் கடலோர காவல் படையினர், மீன் வளத்துறையினர், வனத்துறையினர் படகில் அங்கு சென்றனர்.

    அவர்கள் நடத்திய விசாரணையில் இது கடற்கரையில் மணலை தூர்வாரும் கப்பல் என்பது தெரிய வந்தது. நாகையில் இருந்து மண்டபத்திற்கு சென்ற போது கோடியக்கரை அருகே சேற்றி சிக்கி விட்டது.

    அதனை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
    வேளாங்கண்ணியில் சினிமா மேக்கப் கலைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாப ராமபுரத்தை சேர்ந்தவர் தெட்சிணா மூர்த்தி. இவரது மகன் சரவணன் (30).

    இவர் சென்னையில் நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்து இருந்தார். பின்னர் சென்னை திரும்பினார்.

    அவர் மீண்டும் ஊருக்கு வருவதாக தகவல் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் வேளாங்கண்ணி பூக்கார தெருவில் சரவணன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வழிந்த நிலையில் காணப்பட்டது.

    அவரை யாரோ கொலை செய்தது தெரிய வந்தது. சென்னை சென்ற சரவணனை யாராவது ஊருக்கு வரவழைத்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    முன்விராதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி மகாபுஷ்கர விழாவில் 13 நாட்களில் பல்வேறு ஊர்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீராடினர்.
    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாகட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று வரை நடந்தது. விழா நடைபெற்ற 13 நாட்களில் பல்வேறு ஊர்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதநீராடினர். இதனால் மயிலாடுதுறை நகர் பகுதி முழுவதும் விழா கோலமாக காட்சி அளித்தது.

    விழா நாட்களில் தினமும காலை சிறப்பு யாகம், மாலை காவிரி நதிக்கு மகாஆரத்தி வழிபாடு, பக்தி பாடல்கள், பஜனை, லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி, திருமுறை வகுப்புகள், கம்பராமாயண சொற்பொழிவுகள், ஆன்மீக கலாசார ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. மேலும், தினமும் காவிரி துலாகட்டத்தில் அன்னபூர்ணேஸ்வரர்-அன்னபூர்ணேஸ்வரிக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது.

    இந்த விழா கடந்த 23-ந்தேதி திருக்கல்யாணத்துடன் நிறைவு பெற்றது. நேற்று காவிரி மகாபுஷ்கர விழாவின் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோவிலில் இருந்து மேள-தாளத்துடன் எடுத்துவரப்பட்ட அஸ்திர தேவர்களுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து இரவு காவிரி அம்மன் சன்னதியில் வேத பாராயணம் முழங்க காவிரி மகாபுஷ்கர விழா கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அந்த கொடியை காவிரி அம்மன் பாதத்தில் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சாமிநாத சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.

    விழா ஏற்பாடுகளை காவிரி மகா புஷ்கர விழா குழுவினர் செய்து இருந்தனர்.
    கோடியக்கரை அருகே மீன் பிடித்த வேதாரண்யம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் வலைகளை பறித்து விரட்டியடித்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மயில் வாகனன். இவருக்கு சொந்தமான படகில் மயில்வாகனன் உள்பட 4 பேர்  நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை விரட்டி யடித்தனர்.

    மேலும் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் விரித்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வலைகளையும் பறித்து கொண்டனர். இலங்கை மீனவர்களிடம் வலைகளை பறிகொடுத்த மீனவர்கள் இன்று காலை வெறுங்கையுடன் கரைக்கு திரும்பினர்.
    இது குறித்து அவர்கள் கடலோர காவல் படையினரிடம் புகார் அளித்தனர்.

    நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த  ஆறுகாட்டுதுறை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்த சம்பவம் நடைபெற்றது. தற்போது அதே பகுதி மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டி அடித்து உள்ளனர். இலங்கை கடற்படை, மீனவர்கள் செயலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடியக்கரை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                                                                                                                                                                                                                                                                                     
    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி , மாற்றி பேசுவதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நடிகர் எஸ்.வி.சேகர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் புனிதநீராடி, காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மகா புஷ்கர விழாவில் புனிதநீராடினால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம். இதையொட்டி தினமும் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வருகின்றனர். ஆனால் காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் இங்கு தேங்கியுள்ள கலங்கலான தண்ணீரில் மக்கள் நீராடி செல்கின்றனர்.

    இங்கு புனித நீராட வருபவர்கள் தண்ணீர் இல்லாமல் மனவருத்தத்துடன் புனித நீராடி செல்லும்போது அது ஆளும் ஆட்சியாளர்களையே போய் சேரும். 144 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ள இந்த விழாவில் ஏற்பட்டுள்ள குறைபாடு குற்றச்சாட்டு நிறைந்த அழியாத அவமானமாக இது வரலாறாக மாறிவிடும்.

    துலா கட்டம் அருகிலேயே ஒரு தடுப்பணை உள்ளது. இங்கு காவிரி நீரை தேக்கி துலாகட்டத்தில் தண்ணீர் போய் வழிவகை செய்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக எந்த உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வேதனை அளிக்கிறது. ஆளும் அ.தி.மு.க அரசு ஆட்சியையும், கட்சியையும், கட்சி சின்னம் பெறுவதிலேயே கவனம் செலுத்துவதால் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். கமல், விஜய் போன்றோர் அரசியலுக்கு வரட்டும். ஆனால் அவர்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டால் நாட்டு மக்களுக்கு சேவை செய்யட்டும். அதற்கு அவர்களை விமர்சிப்பது தவறு.

    வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என்று சொன்ன திண்டுக்கல் சீனிவாசன் இன்று நான் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று மாற்றி பேசுகிறார். இதனை மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளனர்.


    முன்பெல்லாம் மக்கள் காமெடி சேனல்களை தான் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்போது செய்தி சேனல்களை தொடர்ந்து பார்க்கிறார்கள். காரணம் செய்தி சேனல்களில் அரசியல் நிகழ்வுகள் இன்று நகைச்சுவையாக மாறி அது காமெடி சேனல்களாக மாறி மக்கள் சிரிக்க வைத்து கொண்டுள்ளது. ஆனால் மக்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அறியாமையில் உள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. பிரதமர் மோடி தொடர்ந்து இன்னும் 2 முறை பிரதமராக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பாரதிய ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில்பாலு, நகர செயலாளர் கண்ணன், புஷ்கர விழாக்குழு துணைத்தலைவர் செந்தில்வேல் மற்றும் பலர் இருந்தனர்.

    ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்து அக்டோபர் 2-ந்தேதி ஆயிரம் இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று வெள்ளையன் பேட்டியில் கூறியுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்திற்கு வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் உலக வர்த்தகமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவாக ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே வரி என மோடி அறிவித்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் நகர வர்த்தகர்கள் நுழைந்து விட்ட நிலையில் கிராமப்புற வர்த்தகர்களையும் இணைப்பதற்காக 25,000 வைபை இணைப்புகளை இலவசமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    ஒரே நாடு ஒரே வரி என்று அறிவித்தாலும் உலக வர்த்தக ஒப்பந்தம் தோற்றுப்போகும். அதற்கு நம் நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம், ஜி.எஸ்.டி வரி இவற்றை எதிர்த்து வருகிற அக்டோபர் 2-ந்தேதி தமிழகத்தில் 1000 இடங்களில் வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

    ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டம் மோசடியான அறிவிப்பு. இந்த திட்டத்தால் நமது சுதந்திரமும் பாதிக்கும். 2-ம் தேதி நடக்கவிருக்கிற உண்ணாவிரத போராட்டத்தில் இந்த ஆன்லைன் வர்த்தகத்தின் பாதிப்பை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வை குறை கூற மு.க.ஸ்டாலினுக்கு தகுதியில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

    சங்க செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது. எத்தனை பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள 121 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பயிர் கடன் 6 ஆயிரம் கோடியாக இருந்ததை இந்த ஆண்டு ரூ. 7ஆயிரம் கோடியாக முதல்வர் பழனிசாமி உயர்த்தி உள்ளார்.


    தமிழகத்தில் 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. மக்கள் நலனுக்காக என்ன செய்தது? மாநிலத்தை குட்டி சுவராக்கி மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். ஊழலில் திளைத்தது தி.மு.க.

    தற்போது அ.தி.மு.க. ஊழல் கட்சி என்று ஸ்டாலின் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    ஊழல் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. நடிகர் கமல்ஹாசன் பொதுவானவர். அவர் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்காமல் குறைகளை கூறட்டும்.

    ஒட்டு மொத்தமாக எங்களை பற்றி பேசி தன்னைத் தானே தரம் தாழ்த்தி கொள்கிறார். நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், கெயில் திட்டம் எல்லாம் தி.மு.க.ஆட்சியில் தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு கொண்டு வரப்பட்டது.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.
    காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க பா.ஜ.க. ஆதரவாக உள்ளது என காவிரி மகா புஷ்கர விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்து காவிரி நீரை தலையில் தெளித்து கொண்டு வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து காவிரி கரையில் நடைபெற்ற மகாஆரத்தி வழிபாட்டில் கலந்து கொண்டு கையில் அகல் விளக்கை ஏந்தி காவிரி நதியை வழிபட்டார்.

    அப்போது துலாகட்டத்தில் கூடியிருந்த பெண்கள் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்தனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன், காவிரி துலாகட்ட பகுதியில் உள்ள துண்டி விநாயகர், காவிரி தாய், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளை வழிபட்டார். தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அருளாசி பெற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நேற்று முன்தினம் காவிரி துலாகட்டத்தில் முதல்-அமைச்சர் புனிதநீராடி சென்றார். அதனை சிலர் விமர்சித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க ஆதரவாக உள்ளோம். சுயஆட்சியை பற்றி பேசுபவர்கள், மற்றவர்களையும் மதிக்க வேண்டும். கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட எதிர்க்கிறது. இந்த பிரச்சனை தீர நதிநீர் இணைப்பு மட்டுமே நிரந்தர தீர்வாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் பா.ஜனதா கட்சி பொறுப்பாளர்கள், காவிரி மகாபுஷ்கர விழா குழுவினர் உடன் இருந்தனர்.
    அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும் என்று, நாகையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    நாகப்பட்டினம்:

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலையூரில் நேற்று நடந்தது.

    விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

    விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிலர் மனக்கோட்டை கட்டிக்கொண்டு அதை செய்வேன், இதை செய்வேன், வானத்தை வில்லாக வளைப்பேன் என்று பேசி மக்களை கவரும் வேலையை செய்கிறார்கள். இவர்கள் கட்டுவது மலைக்கோட்டை அல்ல. அது மணல்கோட்டை என்பது மக்களுக்கு தெரியும்.

    சிலர் கற்பனை உலகில் இருந்து கொண்டு தானும் கெட்டு, தன்னை நம்பியவர்களையும் கெடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் கற்பனையை நிறுத்திக்கொண்டு தானும் கெடாமல், தன்னை நம்பியவர்களையும் கெடுக்காமல் இருக்க வேண்டும்.

    ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எண்ணற்ற திட்டங்களை இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் 25 அரங்குகளில் தத்ரூபமாக அமைத்துள்ளனர். நாகை மாவட்டத்தோடு சேர்த்து 14 மாவட்டங்களில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்த சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது.

    ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அரசியல் பேசலாமா? என்கிறார்.

    தி.மு.க. ஆட்சிகாலத்தில் எத்தனையோ அரசு விழாக்கள் நடந்தன. அந்த விழாக்களில் கருணாநிதி அரசியல் பேசி உள்ளார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு சதிவலை பின்னப்படுகிறது. இந்த ஆட்சியில் என்ன குறை கண்டார்கள்.

    6 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளன. அது உங்களுக்கு பொறாமையாக உள்ளது. சிலர் இந்த ஆட்சி கலைந்து விடும் என்கிறார்கள். அது நடக்காது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். இந்த ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் பகல்கனவாக முடியும். இந்த அரசுக்கு மக்கள் பலம் உள்ளது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திறந்து வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டத்தில் நாகை ஒன்றியம் பாலையூரில் இன்று (புதன்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.

    இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாகை ஒன்றியம் பாலையூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை முழுவதும் சாலைகளில் அலங்கார வளைவுகள், வாழ்த்து பேனர்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக இன்று காலை செய்தி மக்கள் தொடர்புதுறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், கோபால் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். ரவி பெர்ணான்டஸ் தொகுத்து வழங்கினார்.

    பின்னர் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவிற்கு சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.



    முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகிறார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்தினை திறந்து வைத்து, நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், அதனை தொடர்ந்து ரூ.100.23 கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் சார்பில் 46 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 38 ஆயிரத்து 248 பயனாளிகளுக்கு ரூ.281.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
    ×