என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேஸ் புக்கில் அவதூறு பரப்பிய சீர்காழி வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் மங்கை மடத்தில் இண்டெர்நெட் சென்டர் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் குறித்து பேஸ் புக்கில் விமர்சித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் சென்றது. இதைதொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் , நாராயணபுரத்துக்கு வந்து வாலிபர் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.




    நாகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீவழூர் புத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் சம்பவதன்று பாப்பாக்கோயில் குடநெய்வேலி பகுதியில் உள்ள அன்பழகன் என்பவரது வீட்டிற்கு பின்னால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து கிராமநிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார், செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் மருதூர் ராசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மகள் சத்யா (22) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு 2½ வயதில் விஷ்ணுபரண் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சத்யா சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி சத்யாவின் தந்தை கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன் வழக்கு பதிவு செய்து சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    திருமணமான 4 ஆண்டுகளில் சத்யா இறந்ததால் இது குறித்து நாகை ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    சீர்காழியில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி பழுதடைந்த பாலத்தை கடக்கும் போது எதிர்பாராமல் பாலம் உடைந்து லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
    சீர்காழி:

    சீர்காழி ஒன்றியம், கதிராமங்கலம் ஊராட்சிக்கும் மயிலாடுதுறை ஒன்றியம், தர்ம தானபுரம் ஊராட்சிக்கும் இடையில் மன்னியாறு பாசன வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலை கதிராமங்கலம், திருநகரி, தென்னலகுடி, தர்மதானபுரம், ஆத்துக்குடி, திருப்பங்கூர், கன்னியாகுடி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், பாசன மற்றும் வடிகால் வசதியினை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாலம் கடந்த 4 ஆண்டுகளாக சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

    இந்த பழுதடைந்த பாலத்தை சீரமைக்கக்கோரி பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சீர்காழி-மயிலாடுதுறை ஆகிய ஒன்றியங்களில் பொதுமக்கள் சீரமைக்க கோரி பலமுறை புகார் செய்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று கதிராமங்கலத்தில் இருந்து தர்மதானபுரத்திற்கு மணல் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பழுதடைந்த பாலத்தை கடக்கும் போது எதிர்பாராமல் பாலம் உடைந்து லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் லாரி டிரைவர் உயிர் தப்பினார். இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி அருகே மனைவியை எரித்து கொன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் பெரிய தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாலதி (38). இவர்களுக்கு சூர்யா (19) என்ற மகனும், ஆஷா (16), மோனிஷா (14) என்ற மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுதாகர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதேபோல் நேற்றும் சுதாகர், மனைவி மாலதியிடம் தகராறு செய்து வாக்குவாதம் செய்தார். இதற்கு மாலதியும் கண்டித்து பேசினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த சுதாகர் , வீட்டில் இருந்த மண்எண்ணையை மாலதி உடலில் ஊற்றி தீ வைத்தார். இதனால் மாலதி தீக்காயம் அடைந்து கூச்சல் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாலதியை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாலதி பரிசாபமாக இறந்தார்.

    முன்னதாக இறப்பதற்கு முன்பு மாலதி, சீர்காழி நீதிபதி சிவராஜவிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் தனது கணவர் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிவித்தார்.

    இதுபற்றி சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருந்து வரும் சுதாகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம் பகுதியில் சாராயம் விற்ற இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் காவல் சரக துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் மற்றும் போலீசார் அகஸ்தியன்பள்ளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள கருவைக்காட்டு பகுதியில் பதுங்கியிருந்து சாராயம் விற்றவர்ளை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோடி விட்டார்கள்.

    அங்கு பாலித்தீன் பையில் அடைக்கபட்ட 10 சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கைப்பற்றி விசாரணை செய்ததில் அவர்கள் அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் ரமேஷ்குமார் என தெரியவந்தது. இருவர் மீதும் தனித்தனியே வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
    நாகையில் கணவருடம் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர், புதிய கல்லார் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ஹனுஜா (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஹனுஜா கணவரிடம் நமக்கு புதிய வீடு கட்ட வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். நடராஜனும் விரைவில் புதிய வீடு கட்டுவோம் என்று கூறிவந்தார். ஆனால் சம்பவதன்று ஹனுஜா புதிய வீடு கட்டியே ஆக வேண்டும் என்று நடராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பொருட்படுத்தாமல் நடராஜன் குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வருகிறேன் என்று குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டார்.

    அவர் சென்ற பிறகு மனஉளைச்சலில் இருந்த ஹனுஜா சேலையில் தூக்கு போட்டு கொண்டார். வீடு திரும்பிய நடராஜன் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஹனுஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை விசித்திராயர் தெருவில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு மேலாளர் முல்லைநாதன் வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவுக்காவலர் துரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது இரவு 9.30 மணி அளவில் திடீரென்று மேலாளர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ பரவாமல் அணைத்தனர்.

    மேலாளர் அறையிலிருந்த இன்வெர்ட்டரிலிருந்து தீப்பிடித்து வங்கி சர்வர் மற்றும் ஏசி எரிந்துள்ளது தெரியவந்தது. லாக்கரில் உள்ள வங்கி ஆவணங்கள், கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் எந்த சேதமும் இல்லாமல் தப்பியது. மேலும் சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
    பொறையாறு மர்ம காய்ச்சலுக்கு இளம் பெண் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல்,திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தஞ்சை,நாகை மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரை சேர்ந்த 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளான். இந்த நிலையில் மேலும் ஒரு பெண் பலியாகி இருக்கிறார்.

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள சாலியப்பன் நல்லூர் கிராமம் கண்ணப்பன் மூலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கிருஷ்ணவேணிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது.

    அவரை பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் அதிகமானது. அவரை காரைக்காலில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி இறந்தார். பொறையாறு பகுதியில் மர்ம காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    வேதாரண்யத்தில் இன்று கடல் சீற்றம் காரணமாக 1500 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்களது படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முக்கிய தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. நூற்றுக் கணக்கான விசை படகு மற்றும் பைபர் படகுகளில் சென்று தினமும் மீன்பிடித்து வருவார்கள்.

    இந்த நிலையில் இன்று கடல் சீற்றமாக உள்ளதால் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 1500 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    அவர்களது படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    சீர்காழி அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி தேரு வடக்கு தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் மகன் ஆகாஷ் (வயது 17). இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    நவராத்திரி விழா விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த ஆகாஷ் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் சீர்காழி புறவழிச்சாலையில் சென்றார். அவர் பனமங்கலம் என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மாணவர் ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஆகாசின் தந்தை சீர்காழி கடைவீதியில் வெற்றிலை பாக்கு கடை நடத்தி வருகிறார். விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம் அருகே மீன் பிடித்தபோது மீனவர் கடலில் தவறிவிழுந்து இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது42). மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம்(50), கன்னியப்பன்(35), பாண்டியன்(52). இன்று அதிகாலை கருணாநிதி மற்றும் 3 பேரும் நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    வெள்ளப்பள்ளம் கிழக்கே கடலில் மீன் பிடிப்பதற்காக கருணாநிதி வலையை வீசினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கடலுக்குள் தவறி விழுந்தார். உடனடியாக மற்ற 3 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்த கருணாநிதி உடலை மற்ற மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கடலில் தவறி விழுந்து இறந்த கருணாநிதிக்கு சிவகாமி என்கிற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தகவலறிந்த அங்கு வந்த குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

    மீன் பிடிக்க கடலுக்குள் சென்று கரை திரும்பினால் தான் மீனவர்களின் குடும்பம் நிம்மதி பெறும். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களால் மீனவ குடும்பங்கள் வாழ்நாள் நிம்மதி இழந்து கண்ணீரில் மிதக்க வேண்டியிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×