என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி அருகே கோவில்பத்து கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (வயது 27), இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் புதுச்சேரி மாநில மதுபானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. அவர் வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு கூச்சலிட்டார்.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முத்துக்குமாரை சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் முத்துக்குமாரின் உடலை கிராமத்திற்கு கொண்டு சென்ற அப்பகுதி மக்கள் கோவில்பத்து மெயின் ரோட்டில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் பாலமுருகன், டி.எஸ்.பி சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மதுகுறித்து இறந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கோவில்பத்து உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மது பாட்டில்களை கொண்டு வந்து அந்த பாட்டில்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வோரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தார் பாலமுருகன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாராயம் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இறந்தவருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் சுமார் 3 மணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிவா என்கிற சிவசங்கர் (வயது 19).
நேற்று வீட்டை விட்டு சென்ற சிவசங்கர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய்,சிவசங்கரை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.
இந்த நிலையில் நாகூர் தங்கச்சிமடம் பகுதியில் சிவசங்கர் முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் நாகூர் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் குலோத் துங்கன் விரைந்து சென்று சிவசங்கர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வாலிபர் சிவசங்கரை மர்ம கும்பல் முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து முதலமைச்சரிடம் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அப்போது, உடனடியாக அவரை பொறையார் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணியை கவனிக்கும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுபற்றி போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், ‘பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 டிரைவர்கள் ஒரு கண்டக்டர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் உரிய நிவாரணம் அறிவிப்பார். விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ளும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்று விபத்துக்கள் ஏற்படாத வகையில், தமிழகம் முழுவதும் உள்ள பழமையான பணிமனை கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதற்கிடையே, அரசின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறி, பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாரில் அரசு போக்குவரத்து கழக கட்டிடம் உள்ளது. இன்று அதிகாலை அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொறையார் செல்கிறார். மேலும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் பொறையார் செல்ல உள்ளனர்.
வேதாரண்யத்தில் ஆதனூர் மணியன்தீவு, ராமகிருஷ்ணாபுரம், நெய் விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்மாநில விவசாய சங்க தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவ குருபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர், நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன், ஆகியோர் தலைமையில் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
விவசாய தொழிலாளர்கள் தாங்கள் வீடுகளிலும் இதே கோரிக்கைளை வலியுறுத்தி கறுப்பு கொடி ஏற்றினர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள ஏனாங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது 60). இவர் அதே பகுதியில் ரோட்டில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திட்டச்சேரி இன்ஸ்பெக்டர் குலோத்துங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை அருகே உள்ள வவ்வாலடி அண்ணா நகரைச் சேர்ந்த மணி மனைவி மணியம்மாள் (வயது 50). இவர் கடை வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் ஆறு பாதி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது 62). ஓய்வுபெற்ற தபால் அலுவலர்.
இவரது மகன் கும்பகோணத்தில் வசித்து வருகிறார். இதனால் மகனை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சுந்தரமூர்த்தி நேற்று சென்றார்,
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவரது வீட்டில் பின்பக்கம் வழியாக மர்ம கும்பல் உள்ளே நுழைந்தனர். அங்கு வீட்டில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இதையடுத்து சுந்தரமூர்த்தியின் பக்கத்து வீட்டில் சேகர் என்பவரின் வீட்டிலும் கொள்ளை கும்பல் நுழைந்தனர்.
அங்கு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
கொள்ளை நடந்த 2 வீடுகளும் செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ளன. இதனால் கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டிய சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு மேல சந்து பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு வசித்து வந்த சண்முகம் (வயது 53) என்பவர் குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.
மேலும் தீ மளமள என்று பரவி பக்கத்து குடிசை வீடுகளிலும் பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால் குடிசை வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள், தீ பிடித்து எரிவதை கண்டதும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர்.
சண்முகம் வீட்டில் பிடித்து எரிந்த தீ, அடுத்தடுத்து வசித்து வந்த கலியமூர்த்தி, மஞ்சுளா, சுசீலா, காளிமுத்து, பத்ரகாளி , மாரிமுத்து, ரகத செல்வி ஆகிய 7 பேரின் வீடுகளிலும் பரவியது.
தீ விபத்து குறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார். சுமார் 1½ மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் தடுத்து அணைக்கப்பட்டது.
இருப்பினும் இந்த தீ விபத்தில் குடிசை வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், டி.வி. மற்றும் தளவாட சாமான்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும் சிலர் வீடுகளில் வைத்திருந்த நகை-பணம் மற்றும் ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் எரிந்து சேதமானது.
தீ விபத்து பற்றி சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் கொசுவர்த்தி சுருளில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி தாசில்தார் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணமாக அரிசி, வேட்டி-சேலை ஆகிய நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினர்.
இதேபோல் சீர்காழி எம்.எல்.ஏ. தனது சொந்த பணத்தில் தீ விபத் தில் பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.
வேதாரண்யம் அருகே உள்ள உம்பளச்சேரியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 55) கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள் இவர்களது மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு தீபாவளிக்கு சீர் கொடுப்பது சம்பந்தமாக கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மகளுக்கு சீர் செய்ய போதிய பணம் இல்லாதால் மனவேதனை அடைந்த சச்சிதானந்தம் கடந்த 8-ந் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கரியாபட்டினம் சப்- இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் மேல மருதாண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கத்தில் நீடுர், தருமதானபுரம், தேத்தூர், கழனிவாசல் உள்ளிட்ட 6 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி கடன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு அந்த கடன் சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 6 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பயிர்காப்பீட்டு தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து தாசில்தார் காந்திமதி சம்பவ இடத்திற்கு சென்று பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
நாகப்பட்டினம், அக்.13-
நாகை மாவட்டத்தில் 56 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடித்தொழிலில் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதிக்கு ஆண்டுதோறும் சீசன் காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது வழக்கம். இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்கள் செய்யும் இடையூறுகளால் நாகை மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் மந்தமாகி வருகிறது.
நாகையில் தினமும் ரூ.1 கோடிக்கு மீன் வியாபாரம் நடைபெறும். நாகையில் பிடிக்கப்படும் மீன், இறால், கணவாய், நண்டு ஆகியவை வியாபாரிகளால் வாங்கப்பட்டு சென்னை, தூத்துக்குடி, கேரளா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும். தினமும் 5 டன் மீன்கள் ரூ.1 கோடி அளவுக்கு விற்பனையாகி வந்த நிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி மீன் விற்பனை பாதியாக குறைந்துவிட்டது. கடந்த 26 நாட்களாக மீன் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் கணிசமாக குறைந்துவிட்டது.
தற்போது முதல்தர இறால் கிலோ ரூ.1000-க்கும், 2-ம் தர இறால் ரூ.800-க்கும், 3-ம் தர இறால் ரூ.600-க்கும், 4-ம் தர இறால் ரூ.500-க்கும், கழிவு இறால் ரூ.350-க்கும், ஒரு கிலோ நண்டு ரூ.300-க்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்விலை வீழ்ச்சியடைந்ததால் மீனவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
நாகை அருகே உள்ள காரனூர் மேலத் தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). நேற்று மோட்டார் சைக்கிளில் தனபாலும், தனலட்சுமியும் சென்றனர். அப்போது ஒரு டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து பாலையூர் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்குபதிவு செய்து டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.






