என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பேஸ்புக் மூலம் தஞ்சையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் திவ்யா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மீண்டும் கண்ணன் வெளிநாடு சென்று விட்டார்.

    இந்நிலையில் திவ்யா செம்போடையில் உள்ள கணவர் கண்ணன் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி காலை திவ்யாவின் மாமனார் பன்னீர்செல்வம் வீட்டில் இருந்து திடீரென திவ்யா காணாததைக் கண்டு பல இடங்களில் தேடிபார்த்தார். எவ்வித தகவலும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் பற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து மர்ம கும்பல் இலங்கைக்கு கஞ்சாவை கடத்தி வருகிறது. இந்த கும்பல் கடல் வழியாக கஞ்சாவை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.

    கடந்த 2015-ம் ஆண்டு வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகையிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடியக்கரையிலும் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதொடர்பாக கடலோர காவல்படை விசாரணை மேற்கொண்டது. இதில் யாரும் சிக்கவில்லை.

    இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கிடப்பது இன்று தெரியவந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 8 மூட்டைகளில் தலா 2 கிலோ வீதம் 16 கிலோ கஞ்சா இருந்தது. இதன்மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இந்த கடத்தலில் ஈடுபட்ட கும்பல் எது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கடலோ காவல்படையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    மயிலாடுதுறை பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு குளங்களில் நீர் நிரம்புவதைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகராட்சியில் 80க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இக்குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது.

    சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள செம்மங்குளம், வள்ளலார் குளம், கட்டையன் குளம், தேரடி குளம், குட்ட குளம், குப்பங்குளம், குமரகட்டளை குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குளங்களில் வாய்க்கால்கள் வழியாக நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    இப்பணியை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- மயிலாடுதுறையில் உள்ள அனைத்து குளங்களிலும் விரைவில் நீர் நிரப்ப ஆவண செய்யப்படும். இதனால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்றார். அப்போது நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் ஜோதி மணி, நகர அமைப்பு அலுவலர்(பொ) கணேசரங்கன், சுகாதார அலுவலர் அறிவழகன், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சைமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு குளங்களில் நீர் நிரம்புவதைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்புகளில் உள்ள குளங்களிலும் நீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டர்களால் உருவான கட்சி அதிமுகதான் என்று மயிலாடுதுறையில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் அ.தி.மு.க. 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது.

    நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜன், ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், ராஜேந்திரன், தமிழரசன், நகர அவைத்தலைவர் அலி, முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் உமாச்சந்திரன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், பாரதி, சிறப்பு பேச்சாளர்கள் மூர்த்தி, கவுரிசங்கரன், மணவை மாறன் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

    தொண்டர்களால் உருவான கட்சி அதிமுகதான். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்துவந்து தனியாக அ.தி.மு.க. கட்சியை தொடங்கிய 6 மாதத்திலேயே திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடித்தவர். எம்.ஜி.ஆர். மட்டும்தான் தனது கட்சியை வளர்த்ததோடு எதிர் கட்சியான தி.மு.க.வையும் வளர்த்தார். அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.

    ஜெயலலிதா மறைவிற்கு பின்பு எப்படியாவது ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக வரமுடியாது. தி.மு.க எம்.எல்.ஏ.க்களே அ.தி.மு.க. ஆட்சி தொடரட்டும். ஆட்சியை கலைத்தால் எங்களுக்கு மீண்டும் சீட் வேண்டுமென்றால் அதற்கும் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று புலம்புகின்றனர்.


    இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டும் கடும் வறட்சி ஏற்பட்டாலும் விவசாயிகளையும். ஏழை எளிய மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வறட்சி நிவாரணங்களை வழங்கி உள்ளார். பயிர்காப்பீட்டுத் தொகை பாதி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியும் விரைவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் காளியம்மாள், நகர துணைச் செயலாளர் கார்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர். 9வது வார்டு கழக செயலாளர் ராமு நன்றி கூறினார்.

    நாகை மாவட்டத்தில் வயல்களில் கருப்பு கொடியை நட்டு உடனடியாக பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கோ‌ஷமிட்டப்படி போராட்டம் நடத்தினர்.
    நாகை:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கிய சில விவசாயிகள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்தாண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் நாகை விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது சம்பா சாகுபடிக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்கப்படவில்லை.

    இதனால் நாகை விவசாயிகள் இதுபற்றி கலெக்டர் சுரேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து நாகை அருகே கீழ்வேளூர் அடுத்த வடக்குவேலியை சேர்ந்த விவசாயிகள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அங்குள்ள வயல்களில் கருப்பு கொடியை நட்டு உடனடியாக பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி கோ‌ஷமிட்டப்படி போராட்டம் நடத்தினர்.

    மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தண்ணீர் வந்து சேரவில்லை. ஏற்கனவே கடந்தாண்டு பயிர் காப்பீடடு தொகையும் இதுவரை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். எங்களால் சம்பா சாகுபடிக்கு நடவு பணியை எப்படி மேற்கொள்ள முடியும்?

    எனவே தான் அரசின் கவனத்தை ஈர்க்க இன்று வயலில் இறங்கி கருப்பு கொடி நட்டு போராட்டம் நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகை அருகே தவறுதலாக எலிமருந்தில் பல்துலக்கிய பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் பாலையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி மல்லிகா(55). இவர் சம்பவத்தன்று காலை வீட்டில் பல் துலக்கியுள்ளார். ஆனால் பற்பசை என்று நினைத்து பக்கத்தில் இருந்த எலி மருந்து பசையால் பல் துலக்கியதால் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாலையூர் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    நாகை அடுத்த கீழ்வேளூரை சேர்ந்தவர் பாலையன் (வயது 45). இவர் அபபகுதியில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பாலையன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தபோது தாய்-சேய் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் பொறையாறு அரசே போக்குவரத்து பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியானார்கள்.



    இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பழுதான நிலையில் மோசமாக இருக்கும் அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் தாய்- சேய் பரிசோதனை கூடம் உள்ளது.

    இன்று காலை 7 மணியளவில் திடீரென பிரசவ வார்டு கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்தது.

    இதனால் சத்தம் கேட்டு ஆஸ்பத்திரி ஊழியர்களும், பிரசவ வார்டில் இருந்த பொதுமக்களும் அலறியடித்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



    கட்டிடத்தின் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து சமயத்தில் நல்லவேளையாக தாய்- சேய் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி ஆஸ்பத்திரி டாக்டர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தமிழகத்தில் குழந்தைகளுக்கான சிகிச்சை அளிப்பதில் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி 2-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரசவ வார்டில் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தமிழகத்தில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் கடந்த 20-ந்தேதி அதிகாலை இடிந்து விழுந்து கண்டக்டர்-டிரைவர்கள் உள் பட 8 பேர் உயிரிழந்துள்ள னர். இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான கட்டிடங்கள் ஆய்வு செய்யப்படும். இதில் உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் உடனே இடிக்கப்படும்.

    மேலும், புராதான கட்டிடங்கள் கட்டிட கலை நிபுணர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். அனைத்து அரசு கட்டிடங்களும் ஆய்வு செய்யப்படும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து அரசு துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காரணமாக காதலுடன் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சுகாசினி (வயது 18). இவர் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.

    குத்தாலம் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மகன் சுரேஷ் (21). கட்டிட தொழிலாளி.

    இந்த நிலையில் மாணவி சுகாசினிக்கும், சுரேசுக்கும் இடையே கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

    இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் சுகாசினியின் தந்தை நாகராஜனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மகளை கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சுகாசினிக்கும், அவரது தந்தை நாகராஜனுக்கும் இடையே காதல் விவகாரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சுகாசினி நேற்று மாலை காதலன் சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கும் அவர்களது காதலுக்கு சுரேசின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதல் ஜோடி இருவரும் அங்கிருந்து வெளியேறினர். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று சுரேஷ், சுகாசினி இருவரும் வி‌ஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற சிலர் காதல் ஜோடி வி‌ஷம் குடித்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இருவரையும் மீட்டு குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேசும், சுகாசினியும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுபற்றி குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காரணமாக காதலுடன் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    நாகை:

    நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து 7 டிரைவர்கள், ஒரு கண்டக்டர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதைதொடர்ந்து போக்குவரத்து கழகங்களில் உள்ள கட்டிடங்கள் பெரும் பாலான மோசமாக இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், அரசு இதுபற்றி ஆய்வு நடத்தி சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர், மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் இதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும், வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் இன்று காலை வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். அப்போது மழை காலங்களில் வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், பேரிடர் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான உடை, உடமை மற்றும் தங்கும் வசதி போன்றவை உடனுக்குடன் வழங்குவது குறித்தும் அனைத்து துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினர்.

    கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பொறையாறில் பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலியான துயர சம்பவத்துக்கு பிறகு அரசு அலுவலக கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு கட்டிடங்கள் இருந்தால் ஆய்வு நடத்தி உடனடியாக இடிக்கப்படும். மேலும் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டவும் ஏற்பாடு செய்யப்படும். பழமையான கட்டிடம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கலாம்.

    பொறையாறு பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலியான இடத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விரைந்து வந்தார்.

    அப்போது அமைச்சரை , போக்குவரத்து கழக ஊழியர்கள், மற்றும் தொழிற் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். பழமையான கட்டிடத்தால் தான் 8 பேர் பலியானதாக குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் இன்று அமைச்சர் ஓ.எஸ். மணியன், பழமையான அரசு அலுவலகங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேதாரண்யம் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இன்று காலை கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடல் சீற்றத்துடன் தண்ணீர் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்தது.

    இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. கரையோரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதேபோல் கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் இன்று செல்லவில்லை.

    இதுபற்றி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கூறியதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு கடலுக்கு சென்றவர்கள் வீடடு திரும்பி விட்டனர். இன்று காலை 9 மணி முதல் சூறாவளி காற்று போல் வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் காலை 11 மணி முதல் மீன்பிடிக்கவில்லை. இயல்பு நிலை திரும்பிய பிறகே கடலுக்கு புறப்படுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வேதாரண்யத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இலங்கை வாலிபரை போலீசார் பிடித்து அவரை கைது செய்தனர். அவர் எப்படி இங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பெரியகுத்தகை பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை வேதாரண்யம் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் இலங்கை, யாழ்பாணம் பகுதி பருத்திதுறை மார்கண்ட் மகன் சீறீமுருகன் (32) என்பது தெரியவந்தது.

    அவர் எப்படி இங்கு வந்தார்? அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் படகு மூலம் வந்தாரா? மேலும் இவருடன் யாரும் கூட வந்தார்களா? என்று வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கணேசன் (50), குரவப்புலம் சரஸ்வதி, கருப்பம்புலம் பக்கிரிசாமி ஆகிய 3 கூரை வீடுகளும் தீபாவளியன்று வெடி வெடித்ததில் தீபிடித்து எரிய தொடங்கியது.

    அக்கம் பக்கத்தினரும், வேதாரண்யம் தீயணைப்புத் துறை அலுவலர் சம்பத் தலைமையிலான குழுவினர் சென்று தீயை அணைத்தனர். தாசில்தார் விஜயகுமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண தொகை வழங்கினார்.

    ×