என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சியில் 80க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இக்குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது.
சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள செம்மங்குளம், வள்ளலார் குளம், கட்டையன் குளம், தேரடி குளம், குட்ட குளம், குப்பங்குளம், குமரகட்டளை குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குளங்களில் வாய்க்கால்கள் வழியாக நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இப்பணியை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- மயிலாடுதுறையில் உள்ள அனைத்து குளங்களிலும் விரைவில் நீர் நிரப்ப ஆவண செய்யப்படும். இதனால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்றார். அப்போது நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் ஜோதி மணி, நகர அமைப்பு அலுவலர்(பொ) கணேசரங்கன், சுகாதார அலுவலர் அறிவழகன், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சைமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு குளங்களில் நீர் நிரம்புவதைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆக்கிரமிப்புகளில் உள்ள குளங்களிலும் நீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






