என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் பெரிய தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாலதி (38). இவர்களுக்கு சூர்யா (19) என்ற மகனும், ஆஷா (16), மோனிஷா (14) என்ற மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் சுதாகர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதேபோல் நேற்றும் சுதாகர், மனைவி மாலதியிடம் தகராறு செய்து வாக்குவாதம் செய்தார். இதற்கு மாலதியும் கண்டித்து பேசினார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுதாகர் , வீட்டில் இருந்த மண்எண்ணையை மாலதி உடலில் ஊற்றி தீ வைத்தார். இதனால் மாலதி தீக்காயம் அடைந்து கூச்சல் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாலதியை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாலதி பரிசாபமாக இறந்தார்.
முன்னதாக இறப்பதற்கு முன்பு மாலதி, சீர்காழி நீதிபதி சிவராஜவிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் தனது கணவர் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிவித்தார்.
இதுபற்றி சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருந்து வரும் சுதாகரை போலீசார் தேடி வருகிறார்கள்.






