என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சீனிவாசன் மாற்றி பேசுவதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்: எஸ்.வி.சேகர்
    X

    அமைச்சர் சீனிவாசன் மாற்றி பேசுவதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்: எஸ்.வி.சேகர்

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி , மாற்றி பேசுவதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நடிகர் எஸ்.வி.சேகர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் புனிதநீராடி, காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மகா புஷ்கர விழாவில் புனிதநீராடினால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம். இதையொட்டி தினமும் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வருகின்றனர். ஆனால் காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் இங்கு தேங்கியுள்ள கலங்கலான தண்ணீரில் மக்கள் நீராடி செல்கின்றனர்.

    இங்கு புனித நீராட வருபவர்கள் தண்ணீர் இல்லாமல் மனவருத்தத்துடன் புனித நீராடி செல்லும்போது அது ஆளும் ஆட்சியாளர்களையே போய் சேரும். 144 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ள இந்த விழாவில் ஏற்பட்டுள்ள குறைபாடு குற்றச்சாட்டு நிறைந்த அழியாத அவமானமாக இது வரலாறாக மாறிவிடும்.

    துலா கட்டம் அருகிலேயே ஒரு தடுப்பணை உள்ளது. இங்கு காவிரி நீரை தேக்கி துலாகட்டத்தில் தண்ணீர் போய் வழிவகை செய்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக எந்த உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வேதனை அளிக்கிறது. ஆளும் அ.தி.மு.க அரசு ஆட்சியையும், கட்சியையும், கட்சி சின்னம் பெறுவதிலேயே கவனம் செலுத்துவதால் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். கமல், விஜய் போன்றோர் அரசியலுக்கு வரட்டும். ஆனால் அவர்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டால் நாட்டு மக்களுக்கு சேவை செய்யட்டும். அதற்கு அவர்களை விமர்சிப்பது தவறு.

    வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என்று சொன்ன திண்டுக்கல் சீனிவாசன் இன்று நான் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று மாற்றி பேசுகிறார். இதனை மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளனர்.


    முன்பெல்லாம் மக்கள் காமெடி சேனல்களை தான் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்போது செய்தி சேனல்களை தொடர்ந்து பார்க்கிறார்கள். காரணம் செய்தி சேனல்களில் அரசியல் நிகழ்வுகள் இன்று நகைச்சுவையாக மாறி அது காமெடி சேனல்களாக மாறி மக்கள் சிரிக்க வைத்து கொண்டுள்ளது. ஆனால் மக்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அறியாமையில் உள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. பிரதமர் மோடி தொடர்ந்து இன்னும் 2 முறை பிரதமராக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பாரதிய ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில்பாலு, நகர செயலாளர் கண்ணன், புஷ்கர விழாக்குழு துணைத்தலைவர் செந்தில்வேல் மற்றும் பலர் இருந்தனர்.

    Next Story
    ×