search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
    X

    மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

    • கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது.
    • தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி சில பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, சில பகுதிகளுக்கு ஊழியர்களை நியமித்து, நடைபெறும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரிகளையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையாநகர், 7-வது வார்டுக்குட்பட்ட கலைஞர்நகர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டு, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான பணிகளை செய்தார். மேலும், கலைஞர்நகர் மற்றும் பாக்கியநாதன் விளை பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார் அறையை ஆய்வு செய்தார்.

    மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

    இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மழைநீர் எங்கெங்கு தேங்கி இருக்கிறதோ அங்கு மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டபிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×