search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி
    X

    தெற்குவாசல் மார்க்கெட்டில் குவிந்துள்ள தக்காளி.


    10 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி

    • மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரிப்பால் மதுரையில் 10 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகும்.
    • வெங்காயம் விலையும் வீழ்ச்சி அடைந்தது.

    மதுரை

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் காய்கறி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று அறுவடை பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    நாட்டு காய்கறிகளான தக்காளி, கத்தரி, வெண்டை, பாகற்காய், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக விளைச்சல் காரணமாக மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் வருகிறது. நாட்டு காய்கறிகள் அதிக வரத்து காரணமாகவும், முகூர்த்த நாள் இல்லாததாலும் காய்கறிகளின் விற்பனை மந்தமாக உள்ளது. மேலும் காய்கறிகளின் விலை வழக்கமான விலையை விட குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோவுக்கு ரூ.140 முதல் 160 வரை விற்கப்பட்டன. அப்போது தக்காளியை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    அதன் பிறகு படிப்படியாக வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலையும் குறைந்தது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்றைய நிலவரப்படி ரூ.10-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விலை வீழ்ச்சி காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி பறிப்பதில் விவசாயிகளுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளிலேயே தக்காளியை அழுக விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட் களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் தக்காளியும் மாலை நேரங்களில் வீடு திரும்பும் போது சில வியாபாரிகள் குப்பைத்தொட்டியில் கொட்டும் அவலமும் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விலை வீழ்ச்சி காரணமாக தக்காளி மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல சிறிய வெங்காயம், பல்லாரி ஆகியவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மதுரை மார்க்கெட்டுகளில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.100-க்கு மேல் விற்கப்பட்ட பல்லாரி மற்றும் சிறிய வெங்காயம் தற்போது கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மற்ற காய்கறிகளான கத்தரி கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாய்க்கும், பீன்ஸ் 70 ரூபாய்க்கும், புடலங்காய் 20 ரூபாய்க்கும், மிளகாய் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 20 ரூபாய்க்கும், மல்லி 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இஞ்சி 60 ரூபாய்க்கும், கறிவேப்பிலை 30 ரூபாய்க்கும் விற்பனை–யாகிறது. மலை காய்கறி–களான பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ், பட்டாணி ஆகியவை 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி. எஸ்.முருகன் கூறுகையில், தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளன. ஒரு சில நாட்களில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என்றார்.

    Next Story
    ×