search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டார விவசாயிகள் நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பாவுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும்
    X

    வட்டார விவசாயிகள் நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பாவுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

    • 2000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள்.

    பேராவூரணி :

    வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இழப்பினை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

    பேராவூரணி வட்டாரத்தில் இதுவரை 2000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வட்டாரத்தில் இயல்பான சம்பா சாகுபடி பரப்பு 5,500 ஹெக்டேர் ஆகும்.

    சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என்பதால் தற்போது நாற்று விட்டு நடவு மேற்கொள்ள உள்ள விவசாயிகள் தாமதம் இன்றி நவம்பர் 10ஆம் தேதிக்குள் நடவு பணியினை முடித்து பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்குரிய பிரீமியத் தொகை ரூபாய் 539.

    இதற்கான காப்பீட்டு தொகை ரூபாய் 35,900 ஆகும்.

    கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல்களை சமர்பித்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    கடன் பெறா விவசாயிகள் ஏதேனும் ஒரு இ சேவை மையம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நவம்பர் 15ம் தேதிக்குள் பிரீமியத்தை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த ஆண்டில் பயிர் காப்பீடு திட்ட மானதுரிலையன்ஸ் பொது பயிர் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பயிர் காப்பீடு செய்யும் போது எந்த கிராமத்தில் நிலம் அமைந்துள்ளதோ, அந்தக் கிராமத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    குடியிருப்பு கிராமத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் குறிப்பிடக் கூடாது.

    பயிர் காப்பீடு செய்தமைக்கான ரசீது மற்றும் இதர ஆவணங்களை பயிர் காப்பீடு தொகை பெரும் வரையில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

    பயிர் காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 15 கடைசி தேதி என்பதால் இறுதி நாள் வரை காத்திருக்காமல் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×