என் மலர்
கன்னியாகுமரி
- பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட “கியூ” காணப்பட்டது.
- கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் ”சூட்கேஸ்”, கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கடந்த 16-ந்தேதி முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.
சபரிமலை சீசன் தொடங்கிய நாள் முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சீசனையொட்டி இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இதனால் பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ"வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிமூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
- நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ஹெல்மெட், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்டு வீடியோ வெளியிடும் நபர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் நம்பர் பிளேட் பொருத்தாமல் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் மிக அதிகமான ஒலி எழுப்பும் சைலன்ஸருடன் மோட்டார் சைக்கிளை இயக்கியதுடன் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஓட்டியது தெரியவந்தது.
இருசக்கர வாகனத்தின் நிறத்தை மாற்றியும் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன் மோட்டார் வாகன சட்ட பிரிவின்படி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதேபோல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், சப்-இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் ஆகியோர் நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு காரை ஓட்டி வந்தவர் குடிபோதையில் ஓட்டி வந்தது தெரியவந்தது.
காரை பறிமுதல் செய்ததுடன் அந்த நபருக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் ஆட்டோ டிரைவர் ஒருவரும் குடிபோதையில் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட காரையும், ஆட்டோவையும் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் காரை ஓட்டி வந்தவர் மற்றும் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் லைசென்ஸை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
- கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமிக்கு பிறகு கடல் அடிக்கடி உள் வாங்குவது, நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, கடல் சீற்றம், கொந்தளிப்பு, நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பது என்பன போன்ற பல்வேறு இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் தற்போது அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பெங்கல் புயல் உருவான சூழ்நிலையில் 29-ந்தேதி வரை கடலில் பலத்த மழையுடன் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கிறது. இடையிடையே சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் கடந்த 3 நாட்களாக பகல் முழுவதும் வெயிலையே பார்க்க முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த சூழலில இன்று கன்னியாகுமரி கடல் அலை இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சியளிக்கிறது. கரையில் மட்டும் லேசாக அலை அடித்துக் கொண்டிருக்கிறது. ஆழ்கடலில் அலை இல்லாமல் கடல் குளம் போல் அமைதியாக கிடக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி கடல் இது போன்று அமைதியாக குளம் போல் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதும் அதே நிலை காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர். ஆனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கு போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
- வெள்ளி விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
- திருவள்ளுவர் சிலை இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த சிலையின் முதலாம் ஆண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி வெள்ளி விழா கொண்டாட்டம் அரசு சார்பில் கன்னியாகுமரியில் வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கும் திருவள்ளூவர் சிலைக்கு இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழையிலான கூண்டு பாலமும் திறக்கப்படுகிறது.
மேலும் திருவள்ளுவர் சிலையில் ரூ.3 கோடி செலவில் லேசர் மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்த விழாவில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரியில் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.10 கோடி செலவில் கன்னியாகுமரி நகரை அழகுபடுத்தும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலை இரவு பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
- மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியது.
இந்த விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இதில், மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்து கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஜெனிஸ்மோன் என்ற மீனவ சகோதரரை மீட்க கோரி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் இந்திய கப்பற்படை உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும், கப்பற்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் ஏற்பட்ட விபத்தில் படகு கவிழ்ந்து மீன்பிடி படத்திற்குள் இருந்த இரண்டு மீனவர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இவர்கள் படகுக்குள் சிக்கி மூழ்கி இருப்பார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய கப்பற்படையின் பயிற்சி பெற்ற வீரர்களால் இவர்களை கடலின் அடி தளத்திற்கு சென்று தேட முடியும். ஆகவே இந்திய கப்பற்படை சிறப்பு வீரர்களை இதற்காக அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
தக்கலை:
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தக்கலை, திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 3 பேர் போலீசாரிடம் சிக்கினார். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 3 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜோகன் (27), கேரளாபுரத்தை சேர்ந்த அபினேஷ் (30), அடப்பு விளையை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களது வங்கி கணக்கையும் முடக்கினார்கள்.
கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய திருவிதாங்கோட்டை சேர்ந்த ஜெயசேகரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதன் காரணமாக இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரிக்கும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கன்னியாகுமரியில் இன்று சபரிமலை சீசன் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
- மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மீனவ தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-
மீனவ மக்களுக்காக ராமநாதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க மீனவர் மாநாடு நடத்தியவர் முதல்வர். சென்னையில் வெள்ளம் வந்த போது ஒரே நாளில் வெள்ளத்தை அகற்றி மின்சாரம் வழங்கியவர் நமது முதல்வரின் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி தந்தவர் முதல்வர் தான். மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர் தான் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
சாதி மதமின்றி இயங்கும் ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமானலும் சரி திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நிர்பந்தம் உள்ளது. முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
மீனவர் மீது அக்கறை உள்ளவர்கள் என இந்தியாவில் வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி என கூறலாம் ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தான் என்பதனை நீங்கள் உணர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு நமக்கு வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது,
`பா.ஜ.க. கடல் தாமரை மாநாடு நடத்தி மோடி ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, படகுகள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்படாது, அதையும் மீறி பிடித்தாலே பாதுகாப்புக்கு இந்திய ராணுவம் வந்து நிற்கும் என்றார்கள்.
ஆனால் 10 ஆண்டுகளாக வாக்குறுதியை காட்டில் பறக்கவிட்டு விட்டார்கள். மீனவர் தினம் கொண்டாடும் இந்நாளில் ஒரு பக்கம் கண்ணீரும் கம்பலையுமாக மீனவர்கள் உள்ளார்கள். மீனவர்கள் தான் பூர்வ குடிகள், மண்ணின் மக்கள்.

மீனவர்களை ஓரளவு தாங்கி பிடிப்பது தமிழகம் தான். ஆனால் இது போதாது அதிக பிரதிநிதித்துவம் வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது' என்றார்.
விழாவில் மேயர் மகேஷ், மீனவர் அணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பிஷப் நசரேன் சூசை, டன்ஸ்டன், நிக்சன், மற்றும் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.
- திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
- இரணியல் ரெயில் நிலைய மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே துறை பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை சந்தித்து கன்னியாகுமரி மக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
இரணியல் ரெயில் நிலையம் மேம்பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த அந்த மேம்பாலத்தின் கட்டமைப்பை திருத்தி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம்.
- தேங்காபட்டணம் துறைமுகம் சென்று பார்வையிட்ட விஜய்வசந்த்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் தேங்காபட்டணம் துறைமுகத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் மேற்பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கத்தில் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது. அதிலும் விஜய்வசந்த் எம்பி கலந்துகொண்டார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈ.சுந்தரவதனம் , மாநகர மேயர்மகேஷ், பொதுக்கணக்குகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், சேகர், முகமது ஷாநவாஸ், ஐயப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், Dr. தாரகைகத்பட், தளவாய்சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட வன அலுவலர், மாநகர ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- அந்த காலங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இயக்கப்படும்.
- கூண்டு பாலத்திற்கான ஆர்ச் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
கன்னியாகுமரி:
உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
இவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் கடல் சீதோஷ்ண நிலை மாறுபடும்போது, திருவள்ளுவர் சிலை பகுதிக்கு படகுகள் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
அந்த காலங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இயக்கப்படும். அங்கிருந்தே சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்க்கும் நிலை உள்ளது. இதனை மாற்ற விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கும் மேல் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு வல்லுனர்கள் கூண்டு பாலம் அமைப்பதற்கான தூண்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
கூண்டு பாலம் பகுதியில் அமைக்கப்படும் ஆர்ச், புதுச்சேரியில் உருவாக்கப்பட்டு 110 பாகங்களாக கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலம் பணிகள் வேகம் பிடிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணிகளை அமைச்சர்கள், சட்டமன்ற குழுக்கள் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளது.
133 அடி உயர திருவள்ளுவர் சிலை 2000-மாவது ஆண்டு ஜனவரி 1-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா, அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வருகிறது. அதனை சிறப்பாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கூண்டு பாலத்திற்கான ஆர்ச் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடர்ந்து தரைதளம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு இன்று கன்னியாகுமரி வருகிறார். அவர், திருவள்ளுவர் சிலையில் நடைபெறும் கூண்டுபால பணிகளை ஆய்வு செய்கிறார்.
- கோவிலுக்கு வந்த பின்னணி பாடகியும், டைரக்டரும் ஐஸ்வர்யாவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
- ஐஸ்வர்யா திடீரென்று தாணுமாலய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புகழ்பெற்ற தாணுமாலய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த பின்னணி பாடகியும், டைரக்டரும் ஐஸ்வர்யாவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதையடுத்து, கோவில் உள்ள தாணுமாலயன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கொன்றையடி சன்னதி, கோவில் சுற்றுப்பிரகாரங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தசினமம் செய்தார்.
தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திடீரென்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.






