என் மலர்
நீங்கள் தேடியது "Sabarimalai season"
- சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூைஜக்காக நேற்று மாலை நடைதிறக்கப்பட்டது.
- பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.
கூடலூர்:
கேரளமாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்ககான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைந்தது.
இந்த ஆண்டு மீண்டும் பக்தர்கள் வழக்கமாக உற்சாகத்துடன் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூைஜக்காக நேற்று மாலை நடைதிறக்கப்பட்டது. இதனிடையே பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இருமாநில போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரும் பக்தர்கள் குமுளி, கம்பம் மெட்டு வழியாக வருகின்றனர். எனவே அப்பகுதியில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று திரும்பவும், கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழி ஒருவழிப்பாதை அமல்படுத்துவது குறித்தும், குமுளியில் சாலைஓரங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதை தவிர்ப்பதற்கான தீர்வு குறித்தும், அவசர மருத்துவ முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், கேரளா சார்பாக இடுக்கி மாவட்ட எஸ்.பி சூர்யபோஸ், ஏ.எஸ்.பி கனிஸ்பாபு மற்றும் இருமாநில வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், குமுளி பஞ்சாயத்து அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தெரிவிக்கையில்,
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டம் டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர்.
- மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதன் காரணமாக இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரிக்கும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கன்னியாகுமரியில் இன்று சபரிமலை சீசன் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட “கியூ” காணப்பட்டது.
- கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் ”சூட்கேஸ்”, கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கடந்த 16-ந்தேதி முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.
சபரிமலை சீசன் தொடங்கிய நாள் முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சீசனையொட்டி இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இதனால் பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ"வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிமூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.






