என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
சபரிமலை சீசன் தொடக்கம் தேனி, இடுக்கி எஸ்.பிக்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் இருமாநில போலீசார் பங்கேற்பு
- சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூைஜக்காக நேற்று மாலை நடைதிறக்கப்பட்டது.
- பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.
கூடலூர்:
கேரளமாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்ககான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைந்தது.
இந்த ஆண்டு மீண்டும் பக்தர்கள் வழக்கமாக உற்சாகத்துடன் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூைஜக்காக நேற்று மாலை நடைதிறக்கப்பட்டது. இதனிடையே பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இருமாநில போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரும் பக்தர்கள் குமுளி, கம்பம் மெட்டு வழியாக வருகின்றனர். எனவே அப்பகுதியில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று திரும்பவும், கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழி ஒருவழிப்பாதை அமல்படுத்துவது குறித்தும், குமுளியில் சாலைஓரங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதை தவிர்ப்பதற்கான தீர்வு குறித்தும், அவசர மருத்துவ முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், கேரளா சார்பாக இடுக்கி மாவட்ட எஸ்.பி சூர்யபோஸ், ஏ.எஸ்.பி கனிஸ்பாபு மற்றும் இருமாநில வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், குமுளி பஞ்சாயத்து அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தெரிவிக்கையில்,
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டம் டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர்.






