search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் சூறைக்காற்றுடன் மழை
    X

    குமரியில் சூறைக்காற்றுடன் மழை

    • முள்ளங்கினாவிளையில் 12.8 மி.மீ. பதிவு
    • அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது. பூதப்பாண்டி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலை 9.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் கடை வீதிகள் மற்றும் கோவில்களுக்கு வந்த பொதுமக்கள் குடை பிடித்த வாறு சென்றனர். சூறைக்காற்றுடன் மழை பெய்ததையடுத்து நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, இரணியல், ஆணைக் கிடங்கு, குளச்சல், அடையாமடை, முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 12.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலியிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.97 அடியாக இருந்தது. அணைக்கு 474 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 631 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது.

    அணைக்கு 189 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 210 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 13.19 அடியாக உள்ளது. அணைக்கு 137 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 30.51 அடியாகவும் உள்ளது.

    சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசி வருவதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×