search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்த கடைக்காரர் சாவு
    X

    குளச்சல் அருகே கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்த கடைக்காரர் சாவு

    • கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
    • பெட்டிக்கடைக்காரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குளச்சல், ஜூன்.18-

    குளச்சல் அருகே வெட்டு மடை மேற்கு கடற்கரை சாலையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த வேலாயுதன் (வயது 61) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் நேற்று காலை கோவிலுக்கு வந்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. கோவிலில் இருந்த குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். மேலும் கோவிலின் அருகே அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் மண்டைக்காட்டை சேர்ந்த கணேசன் (55) என்பவர் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலாயுதம் படுகாயத்துடன் கிடந்த கணேசனை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்களை தட்டிக்கேட்ட போது அவர்கள் தாக்கியதில் கணேசன் காயமடைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் மண்டைக்காடு கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் கோவிலிலும் வெட்டுமடை பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையர்கள் தாக்குதலில் பெட்டிக்கடைக்காரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×